மினராவில் நட்சத்திரங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20081127_Issue

ஹெச்.ஜி.ரசூல்


வானவில் தீட்டிய கவிதையொன்று
கனவுகளின் பூச் சூடிய வாசலில்
காத்திருக்கும் ஒரு வானவில்.
நிழல் சிந்தி மணம் பரப்பும்
ஒருநூறு பூக்களைப் பெற்ற
தாய்மரத்தின் கூடுகளிலும் கிளைகளிலும்
பற்றிப் படரும் சந்தோசம்
உன்கண்ணால் நான்பார்க்கவும்
என் மொழியால் நீபேசவும்
நீள் இரவாய் காத்திருக்கும் பொழுது.
நீயற்ற பிரபஞ்சம் எதுவுமில்லை
பிரபஞ்சமே நீயென சொல்லியது காற்று
கைநிறைய பரிசுப் பொருள்களோடு
வரவேற்றது எதிரே ஒரு கவிதை.
குழந்தைகளும் பொம்மைகளும் சேர்ந்து
உருவாக்குமொரு கனவுப் பிரதேசம்
கள்ளங்கபடமற்று விரிகிறது.
செல்லமாய் சிணுங்கி
ரகசியமாய் மனசுக்குள்
சேர்ந்து எழுதப் போகும்
இன்னொரு கவிதை பற்றி
மறுபடியும் பேசும் பட்டாம்பூச்சிகள்
மினராவில் உட்கார்ந்திருக்கும்
சின்ன நட்சத்திரங்கள்
மீண்டும் கலகலத்து பேசுகின்றன.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்