ரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

கோ.புண்ணியவான்


என்னைச்சுற்றியே
என் கவனத்தைக்கொன்றது
நிசப்தமான பறத்தலில்
நரகமென உணர்த்த
வாசிப்பில் தோய்ந்த நேரத்திலும்
நெற்றியை குறிவைத்து மையமிட்டது
வாசிப்பை சற்றே நிறுத்தி
எரிச்சலில் தாக்க முயன்று தோற்றதில்
உக்கிரமாகிறேன்
காதருகே பறந்தபோது
அடிவிலகி செவிப்பறை நங்கென்றது
ஒருமுறை கன்னத்திலும் என்னறை விழ
வெகுண்டது கோபம்
நேரம் தின்று நினைவைத்தின்று ஊறும்
கோபத்தருணத்தில்
தொடையில் கடிப்பதுணர்ந்து
அறைந்து பார்க்கிறேன் உள்ளங்கையை
என் மனதில் வடிந்தது ரத்தம்.


முதல் நாள் சாமி ஊர்வலத்தில்
ஒர் சிதறுதேங்காயின் சில்தெறித்து
பெருவிரல் செப்டிக்காகி
கனவில் கோபத்தோடு தோன்றினார் கடவுள்
சடெக்கென தூக்கம் கலைந்தவன்
கன்னத்தில் போட்டு கண்ணீருகுத்து
அடுத்த முறை ஆயிரம் தேங்காய் உடைத்து
சாமிகுத்தத்தை நேர் செய்து கொள்வதாக
நேர்ந்துகொண்டான்
பக்தன்.


பிறந்தபோது அவளிடம்
நிறைய பூக்களிருந்தன
பூப்பெய்திய தருணத்தில்
அவை வாசமும்மிகுந்திருந்தன
பெண்பார்க்கும் சடங்குகளின்போது
சில பூக்கள் தொடங்கின உதிர
திருமணமுடிந்து சிலவும்
மனைவியான போதும் தாயானபோதும்
பூவுதிர்காலம் தொடர்ந்தது
வாசல் தொடங்கி அடுப்படியிலும் ஆலைவேலையிலும்
அளவில்லாமல் உதிர்ந்தன
பூவாய்நரைத்து நாராய்க்கிழிந்து கிடக்கிறாள்
இப்போது அவளிடமிருந்து
உதிர்வதற்கோ பூப்பதற்கோ பூக்களேதுமற்றவளாய்.


கோ.புண்ணியவான்
Ko.punniavan@gmail.com

Series Navigation

கோ.புண்ணியவான்

கோ.புண்ணியவான்