கடவுளின் காலடிச் சத்தம் – 1

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


கடவுளின் காலடிச் சத்தம் – 1
கவிதை சந்நிதி

1
கறுப்புக் குதிரை
வெள்ளை ரஸ்தா
கவிதைப் பயணம்
2
காதலி வரவில்லை
காத்திருக்கும் காதலன்
நலமா என்றது புல்வெளி
3
சிலுவையில் ஏசு
முள்ளில் கிரீடம்
பனித்துளி வைரம்
4
கைநிறையக் கடிதம்
வருத்தமாய் தபால்காரன்
கடிதம் வராதவர் விசாரிப்பு
5
கானகப் பயணம்
ஓங்கியெழும் பாடல்
ரசித்து கூட நிலவு
6
சாகச் சொல்லும் வாழ்க்கை
வாழச் சொல்லும் மரணம்
என்ன செய்ய
7
யானை உண்ணும்
தென்னையோலை
தலையைத் தலையை ஆட்டியது
8
விற்ற வீட்டை
தாண்டிப் போகையில்
விசாரிக்கும் பூமரம்
9
பிரசவ அறை
அழும் குழந்தை
சிரிக்கும் கடவுள்
10
புத்தாண்டா பிறந்தநாளா
சிரிக்கும் பூமரம்
தினசரி

11
அய்யோ பதறி
சருகுயர்த்தும் காற்று
உதிரும் நட்சத்திரம்
12
குடையை மடக்கி
வீட்டுக்குள்ளே வர
குடைசிந்தும் மழை
13
இலையுதிர் காலம்
போய்விட்டன பறவைகள்
வந்தது மரங்கொத்தி
14
குடிசைவாசல்
கயிற்றுக்கட்டில்
கோபுரவிளக்கு
15
மௌனம் ஏன் பெண்ணே
ஏதாவது பதில் சொல்
உன் சலங்கைக்கு
16
என் வீட்டில் போலவே
பன்னீர்ப் பூ மரம்
எதிரி வீட்டிலும்
17
மூன்றாம்பிறை நாளில்
குளத்தில் முழு நிலா
யாரவள் குளிப்பது
18
நதியில் வீழ்ந்த மலர்
மிதந்து போக
நகரவில்லை நிலா
19
வண்ணத்துப்பூச்சிகளுக்குக்
காத்திருக்கும் பூக்கள்
மனிதன் கண்டு முகம்சுளிக்கும்
20
சூரியக் கோபம் கண்டு
முகம் கருக்கும்
வெள்ளை மேகம்

21
குடிகாரக் கணவன்
சாத்தியிருக்கும் கதவு
வாலாட்டும் தெருநாய்
22
ஒட்டுகிறான்
பன்ச்சர்
சட்டையில் கிழிசல்
23
தந்தை மகற்காற்றும் உதவி
அப்பப்ப
செலவுக்குத் துட்டு தரல்
24
கண்மூடிய தவத்தில்
துறவி
பூத்துக்குலுங்கும் மரம்
25
தலை நிறையப் பூவைத்து
சமையல் செய்கிறாள்
அசைவம்
26
வியர்வைபெருக குனிந்துபெருக்க
அறை சுத்தமாச்சு
உடலும்
27
டென்னிஸ் வீராங்கனை
கழுத்துச் சங்கிலி
பளபளக்கும் வியர்வை
28
ஓடைமணல்
ஓரமாய்ப் படகு
வரும் நீருக்காய்
29
நலமா என்றது நிலா
பதில் சொல்லவில்லை
சோளக்கொல்லை பொம்மை
30
ஓடையில் புதுவெள்ளம்
மணல் பார்வையில்
காணாமல் போயின மரங்கள்


Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்