“கிளர்ச்சி”

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

கே.பாலமுருகன்


யாரோ
எங்கோ
ஒரு மூலையில்
முனகுவதைக்கூட
கிளர்ச்சியென
கருதுகிறேன்

ஆபாசமாய்
பார்க்கும் பெண்களின்
பார்வையால்
வெகு சீக்கிரத்தில்
கிளர்ச்சிக் கொள்கிறேன்

மனித நெரிசலில்
சிக்கிக் கொள்ளும்
தருணங்களில்
முதிர்ந்த பெண்ணின்
உரசலிலும்கூட
அபத்தமாய்
கிளர்ச்சிக் கொள்கிறேன்

மூளை நரம்புகளில்
எப்பொழுதும்
ஒரு தகவல்
கவனமாய்
வந்து சேர்கிறது
“கிளர்ச்சிக்கான நேரம்”
என்பதாய்

உறங்கியபோது
கனவுகளில்
தொடர்பில்லாத காட்சிகளில்
கிளர்ச்சி நிலையில்
கனவு கன்னிகள்
தோன்றி மறைகிறார்கள்

“இது வாலிபனின்
கிளர்ச்சி உலகம் அல்லது
பருவம்”
என்று சொல்லிவிட்டு
மருந்தும் சொல்கிறார்கள்

சிலர்
பரிதாபமாய்
பார்த்துவிட்டு
“எல்லாம் வயசு கோளாறு”
என்று
ஞான சிரிப்புக் கொள்கிறார்கள்

அந்தச் சிரிப்பில்
ஒரு கிழவனுக்குரிய
மெல்லிய
கிளர்ச்சி
தென்படுகிறது

கே.பாலமுருகன்
மலேசியா

bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்