இரண்டு கவிதைகள்

This entry is part of 34 in the series 20080911_Issue

ஹெச்.ஜி.ரசூல்இலைப் பூ

பூவின் இதழ் நிரப்பிய தேன்மணம்
வழிமூடிக் கிடந்த முட்காட்டின்
உள்நுழைய எத்தனித்த பட்டாம்பூச்சியொன்று.
கூர் நுனிகள் எகிற
பிய்த்தெறிய முனைந்த விரல்களில்
ரத்தகிரீடம் சூட்டிப்பார்க்க முயலும்
கவிந்த இருளின் மெளனம்.
வெள்ளைப்பகல் உடைபட்டுச் சிதற
கையளவு கனவு ஏந்தி
ராப்பிச்சை கேட்கும்
தாடிக்காரனின் மடியில்
ஒரு ஜோடிக் கிளிகள்
பட்டாம்பூச்சி உட்கார நினைத்த இலைப் பூவின் மீது
வானயோனிவிரிய விழும் பனித்துளிசீறும்பாம்பு

சீறும் பாம்பின் ஓசையில்
நடுநடுங்கும் சிறுமழலை.
துரத்தப்பட்ட மேகங்கள்
திரள மறுக்கின்றன
ஒடிந்த விழுதென்றும்
துண்டித்துவீசப்பட்ட வடமென்றும் ஏமாந்தவர்கள்
இன்னும் நெருங்கி பரவசப் புணர்ச்சி செய்கிறார்கள்.
மகுடி கேட்ட மயக்கத்தில் ஆட்டம் தொடர்கிறது.
இதயங்கிழித்து
கண்கள் கொத்தி
படம்விரித்தாடும்
நூறுதலைகளுள்ள நாகப்பாம்பு.
வெறி கொண்டு ஒருதலையை
வெட்டுகையில்
இரண்டு தலைகள் முளைக்கின்றன.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation