கவிதைகள்

This entry is part of 33 in the series 20080724_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


விரல்நுனி ஸ்பரிசம்…!

அதிகாலைக் கதிரவனுக்காய்
அனுதினமும்
காத்திருக்கும்
இலைநுனி
நீர்த்துளிபோல

சும்மா ஒரு
சுவாரஸ்யத்திற்காக
செதுக்கிக்கொண்டிருக்கிறேன்
என் சோக பிம்பத்தை.

இதமாய்
என் தலைகோதும்
உன் விரல்நுனி
ஸ்பரிசம் வேண்டி.


விட்டுவிடுதலையாகி…!

என்னைப் பின்தொடர்வதில்
உனக்கெதுவும் கிடைக்கப்போவதில்லை.
என்னைப் புறந்தள்ளுவதாலும்
பெரிதாய் நிகழப்போவதொன்றுமில்லை.
சேர்ந்தே என்னோடு நீ வருவதிலும்
சிறிதளவும் எனக்கு சம்மதமில்லை.

விட்டுவிடுதலையாகிப் போ
உன் சிறகுகள் செல்லுமிடமெங்கும்.

ஆகக்கூடி வரும் ஒரு ஊழிக்காலத்தில்
சந்திப்போம் _ நமது
அன்பின் வலிமையைச் சொல்ல.


06.07.2008


SJEGADHE@tebodinme.ae

Series Navigation