தயங்குதலுண்டோ இனி!

This entry is part of 33 in the series 20080710_Issue

வ.ந.கிரிதரன்அன்றிலிருந்து இன்றுவரையில் ,
இதுவரையில்,நான்
எடுத்த முயற்சிகளில்
எத்தனைமுறை
இடர்களிடறியிருக்குமென
நினைக்கிறீர்கள்? – சாணேற
முழம் சறுக்குதலென்பது
முற்றுப் பெறாததொரு தொடராகத்
தொடரும் மர்மம் மட்டும்
கண்டு பிடித்து விடின்
முடிவில் இனபம் துய்த்தலென்பது
அவ்வளவொன்றும்
சிரமமானதல்லதான்.

ஒவ்வொருமுறையும் புதியதொரு
தோல்விக்கான வழியினைக்
கண்டு பிடிப்பதில்
நான் தோமஸ் அல்வா எடிசனுக்கு
எவ்விதத்திலும் குறைந்தவனல்லன்..
சத்தமிட்டுச் சொல்லுவேனிதை
எத்தனை முறையென்றாலும்!
எததனை முறையென்றாலும்!

ஒருமுறை ஈரான் தேசத்துக் கைரேகைச்
சாத்திரக்காரி ஒருத்தி கூறினாள்:
‘உன்னைச் சுற்றியும் உள்ள கெட்ட
ஆவிகளை ஓட்டிவிட்டால் புத்திரா!
அனைத்தும் சுகமே!’
ஆளை விடு அம்மாவென்று
ஓடியே வந்து விட்டேன்.

இருந்தாலும் வாசித்தல் எனக்கு
இந்தவிடயத்தில் எப்பொழுதுமே
உதவிக்கு வரத் தயங்குவதேயில்லை.
அந்தத் துணைமட்டுமில்லாவிடின்
என்னவாகியிருக்குமென எண்ணிப்
பார்ப்பதில்லை நான்.
புரிதலைத் தருபவை அதுவே!
விளைவாய் விரிவதெந்தனுள
வெளியே!
இப்புரிதலுமதன் விளைவாய்
விரிதலும் போதுமெனக்கு!
எத்தனை முழங்கள் சறுக்கினுமென்ன
சாணேறத் தயங்குதலுண்டோ
இனி!


ngiri2704@rogers.com

Series Navigation