கவிதைகள்

This entry is part of 29 in the series 20080619_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


களவு

௧ளவு போனது.
கரையோரம் இருந்த

கடிகாரத்தோடு

அருவிக்குளியல்

தந்த ஆனந்தமும்.


அஞ்சல் அட்டை

நாளேடு தொடர்கதைக்கு

அனுப்பிய ஒன்று.

நேயர் விருப்பத்திற்கு

(வானொலியில் பெயர்!)

அனுப்பிய அத்தனை

ஆசைகள்.

நேர்முகத்தேர்வுத் தகவல்கள்

நிறையவே கொண்டு வந்தவை.

திரைப்படக் கலைஞர்களிடம்

புகைப்படம் கேட்டு

எழுதியவை.

படித்ததும் கிழிக்கப்பட்ட

உத்திரகிரியைப் பத்திரிக்கைகள்.

இப்படி

எதையெதையோ

ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கிறது

அலுவலகக் கடித அலமாரியில்

அமைதியாய் வீற்றிருந்த – அந்த

மஞ்சள் நிற அஞ்சல் அட்டை.அன்பைப் பற்றிக் கொள்ளுதல்…..!

அவசரமாய் தொலைபேசியில் அழைத்து

அன்புபற்றிய கவிதையொன்று

அச்சில் வந்திருப்பதைச் சொன்னேன்.

வேலை முடிந்து

வீட்டுக்கு வரும்போது

மகனுக்கு மறக்காமல

மருந்து மாத்திரைகள்

வாங்கி வா என்றாய்.

எனக்குப் புரிந்தது.

அன்பைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதும்.

அன்பையே பற்றிக் கொண்டிருப்பதும்.


SJEGADHE@tebodinme.ae

Series Navigation