கவிதைகள்

This entry is part of 46 in the series 20080529_Issue

கே. ஆர். மணி


NH-7ல் இறந்தநாய்

மெல்லச் சாப்பிடு , முட்டா காகமே
தொண்டையில் அடைத்துக்கொள்ள
போகிறது.

எலும்புகளின் மீதான ருசியை ரசித்தது
அந்த பெயர் தெரியாத பறவை.

ரொம்பநேரமாய் குருவி என்னதான்
செய்ய என்று யோசித்துக்
கொண்டேயிருக்கிறது.

ஈக்கள் அகிம்சாவாதிகள்
அவ்வளவாய் தொந்திரவு தருவதில்லை.
மெல்ல நக்கிவிட்டு எழுந்துபோய்விடுகின்றன.

கோலங்களை சாப்பிட்ட சைவ
எறும்புகளுக்கு இந்தவேகத்தில்
இடமில்லை எனினும்
என்னிடமும் ஏதோ இனிப்பு
இருக்கிறது போலிருக்கிறது.
இல்லாவிட்டால் அவையேன் என்னை
தேடிப்பிடித்து வரவேண்டும்.

இவர்கள் சாப்பிட்டபோதெல்லாம்
வலி தெரியாது இருந்த எனக்கு
டயர்கள் 14வது தடைவையாய்
ஏறியபோது பதிவுபோலவே வலித்தது.

எந்த மூன்றாம்நாள்
உயிர்தெழுவதற்காக
படுத்திருக்கிறேன் ?


டயரும் நடுத்தெரு நாய்களும்

அது அதுபாட்டுக்கு படுத்திருந்தது
பிரபஞ்சவேகமும் என் வேகமும் அறியாது
அசமஞ்ச நாய்

நாலாம் கியரிலிருந்து ஏன் ஒரு
நாய்க்காய் பிரேக் போடவேண்டும்.
ஓலிப்பான் அமுத்தியிருக்கலாம்.
அழுத்தவில்லை.

சின்னதாய் கீரிச்சலோடு டயர் சுழற்ற,
அடித்து புரண்டு எழுந்த அதன் கண்களில்
கடைசிநேர உயிரின் ஒளி.

தப்பித்தலின் பொருட்டு புரண்டு
பின்பக்கம்போயிற்று.
தப்பித்தும்விட்டது.

அந்த ஓளி என் கண்ணிலும் ஓளிர்ந்தது
போனமுறை பிங்க் ஸ்லிப்பின்போது

டயர்களால் சாகாது இந்த
நடுத்தெரு நாய்கள்.


*Pink Slip – வேலைவிட்டு அனுப்பும் கடிதம்.

mani@techopt.com

Series Navigation