முன்கர்நகீர் என் தோழர்

This entry is part of 46 in the series 20080529_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஹெச்.ஜி.ரசூல்

காற்றில் மிதந்தேன்
ஒரு லட்சம் சிறகுகளையும் சூடிய போது
விண்ணெங்கும் விரிந்து படர்ந்த
தருணங்களை உணர வழியற்ற
வெற்றிடத்தில் நிலைகுத்தி நின்றது
என் பெரும்பயணம்

முடிவற்றதொரு வாசல்வெளியின்
இடைவெளியை கடக்க முயன்று
கனவின் வெறுமையை கொண்டாடிய
கருநீலக் கண்களில்
மீளா குருட்டுத் தூக்கம்

ஒரு இறப்பின் சூட்சமத்தில்
உன் விரல்களைப் பற்றிப் பிடித்தேனும்
பறக்க எத்தனித்தேன்
முன்கர் நகீர் என் தோழரானார்.

நடுநடுங்கிய அர்ஷின் மூலையில்
ஹுருல் ஈன் அழுது கொண்டிருக்க
அண்ட சாகரத்தில்
தன்னுடல் கரைந்தது.


நரகபாழ்வெளியில் பரிதவித்திருந்த
ஜின்களின் கூட்டம் முன்னே செல்ல
இரக்கமற்ற தனிமையின் வெளியில்
நீயற்ற நான்

வெட்டுப்பட்ட ஒரு பறவையின் உடல்
கடைசி சொல்லையும் உதிர்க்க
எதிரே தென்பட்ட
குணங்குடி மஸ்தானின் கண்களில்
கொலை வெறி மிச்சமிருந்தது.

Series Navigation