தாரா கணேசன் கவிதைகள்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

தாரா கணேசன்



1.
தேங்கிய மழையின்
பழுப்பு நீர்க்குட்டையில்
உருவமற்று நெளியும்
தன் வெளிச்சத்துணுக்கைத் தேடி
கவிந்த சாம்பல் மேகத்தின்
இருள் அவிழ்த்து எட்டிப்பார்க்கும்
மூன்றாம் நாள் பிறைபோல
என்னையே உருவிப்போட்டு
இட்டு நிரப்பும் காகிதத்தை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
*

2.
இருள் புரளும் தார்ச்சாலைகளின்
அதிரும் வலியுணராது
அக்கரையற்று விரைகிறது
குளிரூட்டப்பட்ட வாகனம்

*

3.
இடைவெளியற்ற மழைத்தாரைகள்
இதமாய்த் தழுவத் தழுவ
ஈரப்பதமற்ற வெற்றுக் காற்றில்
அலைக்கழிந்து
உஷ்ணக்குடைபிடித்திருந்த
தெருவோர மரங்கள்
கவியெழுதும்
மழைக்காற்றாய்
*

4.
புலனாகா மௌனச் சரசரப்பில்
ஆத்மாவற்ற இசையொன்று செவி நிரப்பும்
வெளிகிழிக்கும் மின்னற்சுடர்கொடியில்
கருவேலம்புதரருகே அரவங்கள் நெளிய
கள்ளிச்செடியொன்றின் சின்னப்பூப்போல
திசைதப்பிய இசையொன்று
சாரல் நனைந்து வந்து
செவிப்பறை தீண்ட
சில்லிட்டது சுத்தியலெலும்பும்
பின்னோக்கிப்போனது சிந்தனை
வலையொன்றை பின்னியபடி
தன் ஓடுதளப்பாதையில்
*

5.
இந்தக் கோடைக்கால அந்தியில்
இடப்படாத முத்தங்களும்
தழுவல்கள் அற்ற நேசங்களும்
நான் பார்த்திருக்கும்
கடற்பரப்பெங்கும்
சிதறிக்கிடக்கின்றன

ஈரவிழிகளில்
எப்போதும் உன் பிம்பம்
உணராத உணர்வுகளில்
உலர்ந்து கிடக்கும் உதடுகளில்
ஆதி ஈரத்தின் துளிகள்

நம் மௌனத்தின் ஆழம் சுமக்கும்
கடலின் கரைகளெங்கும்
காத்திருத்தலின் நண்டூரல்கள்
கரை அணைத்து கரை அரித்து
கடல் கலக்கும் அலைகளோடு
மனம் கரைத்து மனம் கலைத்து
நான்
*


dean.avit@gmail.com

Series Navigation

தாரா கணேசன்

தாரா கணேசன்