ஆடுகளம்

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

கவிதா நோர்வே


சாண்டில்யன் கதை நாயகியாக

வெள்ளைக்குதிரை நாயகனிடன்

பறிகொடுக்கும் கன்னியாக..

சீதையாக, கண்ணகியாக

இதிகாசங்களின் நாயகியாக

நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை.

பாவம் என்று விட்டுவிடுவேன்

ராமனும், கோவலனும்

இவர்கள்

என்னிடம் மாட்டியிருந்தால்

புராணங்கள் மாறியிருக்கும்

நீ நினைக்கிறாயா

நான் பதுமையென்று

புதுமையும் பதுமையம்

எம் விரல் நுனியில்தான்

எந்த விரல் நீட்டுவதென்று

நானே தீர்மானிக்கிறேன்

நாணி ஆடவும்

நாண் ஏற்றவும் கூட

என் சுட்டுவிரல் போதும்.

சுடுகுழல் தூக்குதற்கும் கூட

செக்குமாடாய் பின் முற்றத்தில்

போட்ட வட்டங்கள் எல்லாம்

இன்று நாம் கடந்து வந்த

பாதைகளாகவும்

சில கவிதைகளின் காரணங்களாகவும்

மாறிப்போன பின்

அறுத்தெறிய ஏதுமில்லை என்னிடம்

ஒற்றைக் கயிற்றைத் தவிர..

அதன் அவசியம் கூட எனக்கில்லை

நான் பெண்;;

ஆணை விரும்புபவள்

நீயும் விரும்பு

இன்னும் எதுவும் அறியாதவள் என்று,

நினைத்தால்…

விதியிடம் இனி உன்னைக் காக்கப் பழகு

வலியாம்

பெண் மொழியாம் என்று

உன் உதடு வளைத்துப்

என்னை அஃறிணையாக

நீ பார்த்தாலும்

ஆண் பெண் என்ற

ஆடுகளத்தில்

மனு என்றே பார்க்கிறேன்

நான் உன்னையும் என்னையும்.

முக்காடு போட்டு

என் முகம் தொலைத்த நாள்

போனது போகட்டும்

என் கவிதைகளும் முகவரியாகட்டும்

யாரும் தூக்கிப்போட்ட

�ஒருநாள்� தினம் ஏந்தும்

பிச்சைக்காரியில்லை நான்

நேற்றும், நொடிப்பொழுதும்

எதிர்காலங்களும் ஆளத்தெரிந்த

இராஜகுமாரி.

எதற்கு பின்னும் முன்னும்

இழுபாடு

என் தோளோடு நட

நாலு பேர்கள்

நாலுவிதமாய் பேசுவார்கள்.

உதவாத மனிர்களுக்காக

அடங்கிப்போகவோ

ஆராய்ந்து பார்க்கவோ

எனது நேரங்களு;க்கு இனி

நேரமில்லை.

பாரதி பெண் நானில்லை

படைத்த பிரம்மனும் கூட

வரையறுக்க முடியா என்னை

சிந்தனை உளிகொண்டு

அறிவு விரல்களால்

என் விழியின் ஒளியில்

என்னை நானே செதுக்கி

நமிர்ந்து நிற்கும்

எனது பார்வையில்

பெண்

நான்.

– கவிதா நோர்வே


kavithai1@hotmail.com

Series Navigation

கவிதா நோர்வே

கவிதா நோர்வே