மீள்வு

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

புகாரி


ஆனந்த வசந்தம்தான்
பூத்துக் குலுங்க வேண்டும்
ஆனால்…

விழியுதிர்
அழுகையாகிப்போனது

வெளிச்சத்தில்
மறைந்திருந்தவை
வெளிச்சமாய் இருக்கின்றன
இருளில்

மலரும் வேரும்
ஒரே மரத்தின் இருமுனைகள்

மண்ணில் விழுந்துவிட்டால்
வேரே தின்றுவிடும்
தன் இதயமலரை

குடைந்தெடுத்து
மனச் சந்துகளில்
காயம்பறித்து
பதுங்கிப் பாய்ந்து
துளைத்து
ஒளிந்துபிடித்து
விளையாடும்
ரணக்கீறல் எண்ணங்கள்
சில நொடிகளேனும்
ஓய்வெடுக்கத்தான்
வேண்டும்

செத்துப்போயினவாய்க்
களைத்துப்போயின
ஊன்-உள்ளம்-உயிரென
யாவும்

பிறக்க வேண்டும்
மீண்டும்

உறக்கம் என்பது
தவணைமுறைப் பிறப்பு

கணப்பொழுதில்
அடித்தளம் மிதித்து
அவசர அடியெடுத்து
வைத்துவிட்டதை
உப்பு தேய்த்துக்
கழுவிக்கொண்டிருக்கிறது
அழுகை

ஓய்ந்தபின்
ஓர் உறக்கம் போதுமென்ற
நம்பிக்கையைத்
தட்டியெழுப்பி
உறுதியாய்
உட்கார வைக்கப்
பார்க்கிறது
உயிர்க்காவல்


Series Navigation

புகாரி

புகாரி