அம்மா

This entry is part of 34 in the series 20080131_Issue

வ.ஐ.ச. ஜெயபாலன்வரமுடியவில்லை அம்மா
தீயினை முந்தி உந்தன்
திரு உடலில் முத்தமிட…

சிங்கமும் நரிகளும் பங்கும்
நீர்சுனையின் வழி அஞ்சி
உயிர் வற்றும் மானானேன்.
சென்னைச் சுவர்பாலை
துடிக்கும் பல்லி வாலானேன்.

தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங் கனிகள தின்றதே
ஈழத் தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்துப் பறவை.
துருவக் கரை ஒன்றில்
அதன் பீயாய் விழுந்தேனே
என் கனிகளச் சுமந்தபடி

இறால் பண்ணை நஞ்சில்
நெய்தல் சிதைந்தழியும்
சேதுக் கரையோரம்
படகுகளும் இல்லை.

கண்ணீரால் உன்மீது
எழுதாத கவிதைகளைக்
காலத்தில் எழுகிறேன்…


visjayapalan@gmail.com

Series Navigation