மழை பிடிக்காது! மழை பிடிக்காது!

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

மதியழகன் சுப்பையா



[1]

விதை நீக்கிய
பழச்சுளைகள்
(நீக்காதவைகளும்)

முகம் வருடும்
மென் காற்று
(வேகக் காற்றும்)

காலை-மாலை
செங்கதிர் ஒளி
(கதிரற்ற நிலையும்)

மடியில் சுருளும்
குட்டிப் பூனை
(குட்டி நாயும்)

வடிவும் வாசமும்
கொண்ட மலர்
(மனமற்றவையும்)

போதும் (பட்டியல்) போதும்
பிடிக்காது (என்றால்) பிடிக்காது
வேண்டாம் (என்றால்) வேண்டாம்
முடியாது (என்றால்) முடியாது
நிறுத்து (என்றால்) நிறுத்து

வான் பிளந்து
கொட்டுகிறது மழை
மண் பிரிந்து
தேய்கிறது நிலம்

[2]

மதியைப் பிடிக்குமா
மழையைப் பிடிக்குமா
மதியைப் பிடிக்காது
மழையைப் பிடிக்கும்

மதி பெரிதா
மழை பெரிதா
மதி பெரிதல்ல
மழை பெரிது

மதி வேண்டுமா
மழை வேண்டுமா
மதி வேண்டாம்
மழை வேண்டும்

மதி சுகமா
மழை சுகமா
மதி சுகமல்ல
மழை சுகம்

மதி பிடிக்குமா
மழை பிடிக்குமா
மதி பிடிக்காது
மழை பிடிக்காது

[3]
சோவென அழும்
தொடர் மழை

madhiyalagan@rediffmail.com

சடசடவென அடிக்கும்
திடீர் மழை

மயிரை எழுப்பும்
சாரல் மழை

தோள் நனைக்கும்
தூரல் மழை

பீதி கொடுக்கும்
இடி மழை

கண் பறிக்கும்
மின்னல் மழை

அழித்துப் போகும்
புயல் மழை

மழையியல்பே
உன் இயல்பு
மழை பிடிக்காது
மழை பிடிக்காது.

[4]

மழைக் குளுமை
மடிக்குளுமை

மழைச் சாரல்
பேச்சாற்றல்

மழைச் சொரிவு
அக மகிழ்வு

மழைத் தீண்டல்
மனம் வேண்டல்

மழைச் சத்தம்
மது முத்தம்

மழை இடிப்பு
விழி விளிப்பு

மழை பொழிவாய்
நீ வருவாய்
மழை வேண்டாம்
நீ வேண்டாம்

[5]

பருவக் காற்று
அழைத்து வரும்
மழையை

திரண்ட மேகம்
இருண்டு கொட்டும்
மழையை

அனல் பறக்கும்
பூமி வாங்கும்
மழையை

உணர்வு கொண்ட
உயிர்கள் போற்றும்
மழையை

உலக தாகம்
தீர்த்து வைக்கும்
மழையை

வளமை பொங்க
தெளித்து சிந்தும்
மழையை

வண்ண வில்லாய்
வானம் காட்டும்
மழையை

உன்னை நீங்கிய பின்
உணர வேண்டும்
மழையை


madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா