யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

தீபச்செல்வன்



தூங்க மறுக்கும் குழந்தைமீது
தாயின் பாடல்
மிக மெல்லியதாக படர்கிறது.

நள்ளிரவு அதிர
கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய
சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகனைபோய்
சிக்கிக்கொள்கிறது.

தறிக்கப்பட்ட
பனைமரங்களில் வழியும்
சொற்களை
சூன்யப்பிரதேசத்தில்
திரியும்
குட்டையடைந்த நாய்
முகர்ந்து பார்க்கிறது.

குழந்தைகள்
தூக்கி எறியப்பட்ட
நாட்டிலிருந்து
சூரியன் விலகுகிறது.

திசைகளை விழுங்கும்
இராணுவ
தொலைத்தொடர்பு கோபுரத்தில்
திடுக்கிட்டு எழும்பும்
குழந்தையின்
அதிர்வு நிரம்பிய பாடல்
பதிவாகிக்கொண்டிருந்தது.

அதில் குரல் பிடுங்கி
எறியப்பட
பேசும் பறவையின்
வேகமும் சிறகுகளும்
காயப்பட வீழ்கிறது.

இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.

கருவாடுகளை குத்தி குருதி
உறிஞ்ச முனையும்
நுளம்புகளை
பூனைகள் பிடித்து சாப்பிடுகின்றன.

தலைகளை பிடுங்கி
எறிகிற
அதிவேகத்தோடு
மக்களின் குடிமனைகளிற்குளிருந்து
எறிகனைகள்
எழும்பி பறக்கின்றன.

முழு யுத்தத்திற்கான
பிரகடனமாக
குட்டையடைந்த நாய்
பெரியதாய் ஊழையிடுகிறது.

வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.

குழந்தை ஒலி அடங்கி அழுகிறது.


deebachelvan@gmail.com

Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்