கீதாஞ்சலி பிரியதர்சினி கவிதைகள்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

கீதாஞ்சலி பிரியதர்சினி



கவிதை 01
தொலைவின் ஓசைகள்

சாத்தியங்களுக்குள் எப்படியேனும் ஒரு
காரணத்தைத் திணிக்கத்தான் முடியவில்லை.
தொலைவு என்பதென்ன
அறைக்குள் தொலைகடலின் ஓசையை
கேட்கும்போது.
உன்னைச் சந்திக்க நடந்த பாதையில்
புகலிடம் அடைந்த பறவைகளின்
எச்சங்கள் வளாகத்துள்
ரோஜாப் பதியன்கள் சிலவற்றைப்
பரிசளித்தாய்.
வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது
மிகவும் பழகின உன் தந்திரங்கள்.
நீ நினைத்தால்
அப்புறப்படுத்த முடியாதபடிக்கு
மறுவாசிப்பைக் கேட்கிறது
சிறு காற்றுக்கும்
படபடக்கும் எனதிந்தக் காகிதங்கள்.



கவிதை 2
புகலிடங்களின் கவிதைகள்

அவன் வீடு
வேறு ஏதுமற்று
அவனைப் போலவே
மாறியபடியே இருக்கிறது.
என் வீடு
என்னைப்போலவே
மாற மறுத்து
இடிபாடுகளுடன்.
நேற்றும் என்வீட்டில்
அவன் ஒரு
நம்பிக்கையை வைத்து
வளர்க்கச் சொன்னான்.
காற்றும் தண்ணீரும்
கிடைக்கும் வேகத்தில்
நான் நகர
காலடியில் சிக்கி
கூழானது அது.
இன்னும் அவன்வீட்டில்
வேறு வேறு நம்பிக்கைகள்
வழக்கம் போல.
நான்
புராதன நிழல் ஒன்றுடன்
செல்கிறேன் கைகுலுக்கியபடி.



கவிதை 03
இப்போதும் பேசுகிறேன்

தேகப்பயிற்சி செய்கிற ஆசையில்
தன் கதைகளைத் தொலைத்து விடுகிறவன்
கடற்கரை மணலில் அலைந்து திரிகிறான்.
எப்போதும் சில குழந்தைகள் இறப்பதற்கென
தனி இடங்களைத் தேர்வு செய்கின்றன.
பாட்டிகள் மற்றும் சிலரின் பழைய
ஞாபகங்களை உள்வாங்கியபடி சாலை அகலமாகிறது.
மேலும் சில முதலைகள் இறந்த ஆறுகளில்
மணல்லாரிகள் சொல்லும் வேலையை
சொன்னபடி செய்துவிடுகின்றன.
வெறுப்பு விருப்பற்ற தனது செவ்வகத்திரையில்
அழைப்பவரின் பெயரை ஒளிரவிட்டு
உறுமுகிறது எனது படுக்கையில் ஒரு அலைபேசி.



கவிதை 04
பழகிக் கொள்கிறபடி சில வேலைகள்

வெப்பத்துடன் அலைகிற உனது தனிப்
பாதையில் தொடங்குகிறது எனது முதல் வீழ்ச்சி.
நகப்பூச்சின் வாசனையுடன் முற்பகல்
கனமாய் இறங்குகிறது இரக்கம் ஏதுமற்று.
எனது சாகசங்கள் கார்பன் துகள்களாய்
மாறின பொழுதில் மதியவேளை வந்துவிடுகிறது.
கேள்விப்புதர்கள் வழியே ஒளிந்திருக்கும்
எனது பெருமூச்சொன்றைக் கண்டுபிடிக்கிறாய்
தேநீர் அருந்தும் வேளையில்.
கூடடையும் பறவைகளுடன் தூக்கம் வேண்டிப்
பிரிகிறோம் அவரவர் தந்திரங்களுடன்.
வயதின் சாம்பல்துகள் இருவர் மேலும்
தீராத நோயாய்ப் படிந்து கொண்டிருக்கிறது.
யார் உத்தரவுக்கும் திறக்கும் விதமாய்
அலுவலக மேசைகளின் பூட்டுகள் முழுதான
இரவில் கற்பிக்கப்படுகின்றன.


கவிதை 05
கொடைதந்த இரவில்

தயக்கங்கள் அற்ற உனது பாதையொன்றில்
குளிர்மையின் பரவசத்துடன் எனது முதல்கொடுமை.
எனது பாதத்தின் கீழே ஒளிந்திருக்கும் மெல்லிய
சூட்டுடன் தேநீரை அருந்திக் கொண்டிருக்கிறேன்.
விற்றுத் தீர்ந்துவிட்ட இளம் கேரட் கிழங்கு
வியாபாரியின் பாடலைச் சுவையுள்ளதாக்குகிறது,
யாரோ குடித்துவிட்டு எறிந்துவிட்ட
குளிர்பான பாட்டில் அருகில் அவன் உறங்குகிறான்.
காதலைச் சொல்கிற நடைபாதையும்
இணையாத கல் மரத்தூண்களும் படுக்கையில்
இறந்துவிட்ட காதல்கதைகளைப் பிரசவிக்கிறது தினம்.
சுருட்டு தீர்ந்துவிட்ட அசதியில் அவனை
மிகுதியாய் ஏசிப் போகிறான் அவன்.
மனைவியாகி விடாத காதலிகள் மிக
அதிகமாய்ச் சிரித்தபடி கடக்கிறார்கள்
எதிர்வரும் பேருந்தில் ஏறி.

Inserted by storysankar@gmail.com

Series Navigation

கீதாஞ்சலி பிரியதர்சினி

கீதாஞ்சலி பிரியதர்சினி