கடவுள்களின் மடிகள்

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

புகாரி


அறுபட்ட நரம்புகளில்
விடுபட்ட உறவுகளின்
மிச்சம்
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட

எது அழிந்து
எப்படிப்போனாலும்
என்றும் அழிந்துபோகாத
பசி மட்டும்
சுயநினைவைச் சூரையாட

விழுந்துகிடக்கிறது
கிழம்
குப்பைத் தொட்டியில்

குப்பைத் தொட்டிகள்
கடவுள்களின் மடிகள்

இன்று மலர்ந்த தளிர்களும்
நாளை உதிரும் சருகுகளும்
அந்த மடிகளில்தான்
இப்போதெல்லாம்

மனிதநேயம்
நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு..

பாம்பு கொத்தி பாம்பு
கொத்தி
விசப்பல் அச்சுகளோடு
மட்டும்
குப்பைத் தொட்டிகளில்

வேண்டாதவற்றைக்
கொட்டத்தானே
குப்பைத்தொட்டிகள்

இளைஞனே
இது உனக்கு நல்லதோர்
எச்சரிக்கை

நீதானே
நாளைய கிழம்

இன்றே
சுதாரித்துக் கொள்

உன் முதுமை வாழ்வுக்கு
சில்லறைகளைச்
சேமித்துக்கொள்

இன்று நீ எறிந்ததைவிட
நாளை உன்னைத்
துரிதமாய்த்
தூக்கியெறிவான்
உன் பிள்ளை

இப்போதே
கொஞ்சம் சில்லறையை
எவரும் தொடாத இடத்தில்
பதுக்கி வைத்துக்கொள்

அது
எதைப் போக்காவிட்டாலும்
அற்பப் பசியையாவது
போக்கும்

அன்புடன் புகாரி


Series Navigation

புகாரி

புகாரி