கவிதைகள்

This entry is part of 40 in the series 20071101_Issue

மழை காதலன்


ஏமாற்ற‌ங்க‌ள்
த‌னிமையும் இறுக்க‌மும்
சொல்ல‌ முடியா வார்த்தைக‌ளுமாய்
இந்த‌ ம‌திய‌ம் போகிறது

என‌க்கு தெரியும்
உன‌க்கும் தெரியும் என..
இருந்தும் கேட்ப‌தில்லை
கேட்காம‌ல் இருக்கும் வ‌லிமையும்
என‌க்கு வாய்ப்ப‌தில்லை..

உன் இறுதி ஆயுத‌மாய்
ச‌ந்தேக‌ம் உன‌க்கு என்பாய்
செய‌ல‌ற்ற‌வ‌னாய் நிற்பேன்
வேறு வ‌ழி இன்றி…

எதிர்பார்புக‌ள் இருக்கும் வ‌ரை
ஏமாற்ற‌ங்க‌ள் உறுதி என்ப‌தை
நீயும் உண‌ர்த்தி இருக்கிறாய் வேறென்ன‌?

எல்லாம் முடிந்து
இர‌வில் மார்பில் த‌லைசாய்த்து
“சாரிடா”என்பாய் குழ‌ந்தையாய்
வெளிப்ப‌டும் இரு சொட்டு க‌ண்ணீரோடு
காணாம‌ல் போகும் என் கோப‌மும்…கறுப்பு மையும், தனிமையும்
நான் கவிதை எழுதும் போது
தீர்ந்து போகும் பேனாவின்
மையை போலவே
அதிவிரைவில் முடிந்து போகிறது
என் காதலின் கனவுகளும்…

பென்சிலின் கறுமையான‌
எழுத்துகளில் வெளிப்படுகிறது
என் தனிமையின் புலம்பல்
என்றபோதிலும்
அவ்வளவு சீக்கிரம்
தீர்ந்து போவதில்லை
பென்சிலின் கறுப்பு மையும்
என் தனிமை குரலும்….


எனக்கும் ஆசைகள் உண்டு
மெளனமாய் வெளிப்படுகிறது
என் விசும்பல் சத்தம்…

உனக்கும் சுதந்திரம் உண்டு
ஆம் பெண்ணே…
உனக்கும் சுதந்திரம் உண்டு…

உனக்காக நான் வெட்டிய விரல் நகங்கள்
உனக்காக நான் மாற்றி கொண்ட என் புகை பழக்கம்
உனக்காக நான் மறந்து போன என் கல்லூரி தோழிகள்
என் சிறு வயது நட்புகள்
என் காகித கிறுக்கல்கள்
என எல்லாமே…

ஆனாலும் என் வெற்றிகளுக்கு
ஆசைப்படும் நீ
என் தோல்விகளை மட்டும் மறுக்கிறாயே…

என் புன்னகைகளை அலங்கரிக்கும் நீ
என் கண்ணீர்துளிகளுக்கும் காரணமாய்…

இருவருமாய் இது வரை திரைப்படம்
சென்றதில்லை உனக்கு பிடிக்காது
பூங்கா ரசித்ததில்லை
உனக்கு பிடிக்காது
உணவகங்கள் செல்வதில்லை
உனக்கு கூச்சம்

அனைவருக்கும் உடைகள்
தேர்வில் மட்டுமே
பயணங்கள் உன் விருப்பத்தில்
பண்டிகைகள் உன் விருப்பத்தில்
உறவுகள் உன் விருப்பத்தில்….

எனக்கும் ஆசைகள் உண்டு
எப்பொழுது புரியும் உனக்கு….

-மழை காதலன்


sampathpovi@gmail.com

Series Navigation