அமெரிக்கன் பேபி

This entry is part of 37 in the series 20070830_Issue

ஜான் பீ. பெனடிக்ட்


ஆகாயத்தில் பறந்து
ஆயிரமாயிரம் மைல் கடந்து
அப்பனும் ஆத்தாளும்
அமெரிக்காவில் குடியேறிப் பெற்றதனால்
அமெரிக்கன் சிட்டிசன்
ஆனாயே நீ தானே

அயல் தேசம் பிறந்ததனால் – நீ
அத்தை மாமா அறியலையே
அடுத்த வீட்டுப் பிள்ளைகளோடு
ஆடிப் பாடவும் முடியலையே

அம்மாயி அப்பத்தா
அவர்களின் புருஷன் உன் தாத்தா
அணைத்து மகிழும் வாய்ப்பு ஒன்றை
அவர்கட்கு நீயும் அளிக்கலையே

அன்பாய் வளர்த்த பசு மாடு
ஆறாவதாய் ஈன்ற கன்று ஒன்று
அன்னை மடியை முட்டி முட்டி
ஆர்வமாய்ப் பால் குடிக்கும்
அழகை நீயும் காணலையே

ஆண்டுக்கு ஒரு முறை
அமர்க்களமாய் ஊர்த் திருவிழா
ஆட்டுக் கிடா வெட்டி
அய்யனாருக்கு விருந்து படைக்கும்
அதிரடியை நீயும் அறியலையே

குளுகுளு சீசனிலே
குற்றாலமலை அருவியிலே
குளித்து மகிழும் பாக்கியம்
குழந்தை உனக்குக் கிட்டலையே

ஆட்டுக் குட்டியை தூக்கிக்கொண்டு
ஆடு மாட்டை ஓட்டிச் சென்று
அருகம் புல்லை மேயவிட்டு
அந்தி சாய வீடு திரும்பும்
அற்புதம் உனக்கு வாய்க்கலையே

ஆற்றங்கரையில் நடை பயின்று
ஆல விழுதில் ஊஞ்சலாடி
அரப்பு தேய்த்து ஊற வைத்து
அம்மனமாய் குழியல் போடும்
ஆனந்தம் உனக்குக் கிடைக்கலையே

அன்பு மகனே மகளே
அறியாத வயது உனக்கு
அனுபவித்து இழந்ததனால் எழுதுகிறேன்
அப்பன் நான் ஒரு கிறுக்கு

jpbenedict@hotmail.com

Series Navigation