ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)

This entry is part [part not set] of 36 in the series 20070809_Issue

தாஜ்



இன்றைக்கு மிட்டாய்
கிடைக்கும் நாள்!
பள்ளிக் கூடமும் இல்லை!
கொடி மட்டும்தான் ஏத்துவாங்க
பத்து மணிக்கு…
போனா போதும்
சின்னச் சின்ன
மிட்டாய்தான் தருவாங்க
அதுவும் கொஞ்சமா.

காமராஜ் கடை வீதி..
தியாகி கொடி மேடையெ
கலர் தாளெல்லாம் ஒட்டி
ராவோடு ராவா
ஜோடனை செய்துட்டாங்க
பார்க்க அழகா இருக்கு
இன்னெக்கி அங்கே
கொடியேதுவாங்க
நிறைய மிட்டாய் தருவாங்க!

நான்…
காலெயிலெயே வந்துட்டேன்
எம்பி…. இப்பத்தான் வந்தார்
கொடியேற்றினார்
பூ கொட்டியது
தாயின் மணிக்கொடி பாடினோம்
காத்து இல்ல
கொடிப் பறக்கல!

எம்பி பேசுறார்…
கர கரன்னு
ஏப்பம் விடுற மாதிரி.
காந்தி…..
வெள்ளைக்காரன்… என்கிறார்
சொதந்திரம்…
அம்பது வருசம்… என்கிறார்.
நேற்று பள்ளிக் கூடத்திலெ
என்னெ அடிச்ச
அந்த தடியன் பெயரும்
சொதந்திரம்தான்.
அவர் பேசி முடித்ததும்தான்
மிட்டாய்….
புளிப்பு மிட்டாய்….
இனிக்கும்.

சின்னக் கடைவீதி
மூத்திர சந்து…
பஜனை மடத்திலும்
கொடி ஏற்றுவாங்க.
மண் மேலே
வெள்ளையா ஒண்ணெ
அங்கே இங்கே தூவி
நாத்தத்தை மூடி மறைச்சிருப்பாங்க
வீச்சம் தாங்காது.
ஆனா அங்கே லட்டு!
போன வருஷம் சாப்பிட்டது
இன்னும் இனிக்குது.
சீக்கிரம்….
போனாதான் கிடைக்கும்.

சத்தியா கெரகமெல்லாம் செஞ்சி
பரங்கியனெ……..
விரட்டினோம்கிறார் எம்பி
அதென்ன பரங்கியன்?
தாத்தாவைத்தான் கேட்கணும்
அவர் சொன்னாக்கூட புரியாது
பல்லெல்லாம் விழுந்திடுச்சி
அவர்தான் தெனைக்கும்
பாரதமாதா…
அலெகெ… பாடுவார்
பூனெ கத்துர மாதிரி!
மாசா மாசாம் அவருக்கு
தியாகி பிஞ்சன் வருது.

இன்னும் பேசுறார்…. எம்பி…..
தேசியம்… மக்கள்…
ஒத்துமைன்னு….
ஒரு வருஷத்திலே
மேலுக்குத் தேர்தல் வருதான்!
எல்லோரும் பேசிகிறாங்க.
மிட்டாயிலெ….
ஈ மொய்ப்பது தெரியுது
கொஞ்சமா
கறுப்பா வேறே இருக்கு
சக்கரை வெல ஏறியிருக்கும்.

போன வருஷம்
கொடி ஏற்றியவர்
நல்லவர்
சீக்கிரம் பேசி முடிச்சிட்டார்.
கை நிறைய
மிட்டாய் தந்தாங்க
கண்ணாடிப் பேப்பரிலெ சுற்றிய
பளபளப்பு மிட்டாய்.
தம்பிகளுக்கும்
தங்கச்சிப் பாப்பாவுக்கும்
கொண்டுபோய் கொடுத்தேன்.
இப்போ….
ஜனகனமன அதிநாயக ஜயஹே….
பாரத பாக்ய விதாதா…… …


satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்