போதி

This entry is part of 36 in the series 20070809_Issue

ஹெச்.ஜி.ரசூல்


போதிமரத்தின் வேர்கள் வழியினூடோ
அல்லது இலைகளின் துவாரங்களினூடோ
உருகி வழிந்திருக்கலாம்

மலைகளின் குகைகளின்
கற்பாறைகளின் இடுக்குகளின் வழியே
ஊற்றெடுத்து கசிந்திருக்கலாம்

அவைகளின் கீழிருந்த சாதாரண மனிதர்களை
திடீர் பொழுதுகளில்
ஞானிகளாய் மாற்றிய அதிசய சம்பவத்திற்கு
சாட்சிகள் கூட இல்லாமல் இருக்கலாம்

நெருங்கி உற்றுப் பார்த்தால்
புனிதங்கள் மூழ்கடிக்கப் பட்டு
இறுதி மூச்சுவிடுகின்ற
அந்த கருணை சொரியும் விழிகளில்
இன்னமும் தெரியக்கூடும்
அறியப்படாத சில உலகங்கள்

2)நுனி முதல் அடிவரை
போதிமரத்தின் உடலும் கைகளும் கால்களும்
வெட்டிவீசப்பட்டன.
எதிர்ப்பெதுவும் காட்டாமல்
மரணத்தை தழுவிக் கொண்டது போதிமரம்

சின்னாபின்னங்களிலிருந்து
தேடிக் கண்டுபிடித்து
தன் உறுப்புகளை திரும்பவும் ஒட்டவைத்து
உயிர்த்தெழமுயன்றது.

பாதாள பூமிபிளந்து
திசையெங்கும் ஊடுருவி
இன்னொரு மர்ம உலகத்தை காண
அலைபாய்ந்த அதன் வேர்களின்
தேடல் யாத்திரையில்
நதி எதுவும் தென்படவில்லை.

வேர்களற்ற போதிமரம்
தனிமையின் மெளனம் சூடி
காத்துக் கிடக்கிறது.

நாளை வரப்போகும் சர்வாதிகாரிக்கு
இதனடியில் உட்கார முடியாது.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation