திரு முருகு

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


தினைப் புனத்தின் மத்தியிலே
வேங்கை மர நிழலில்
தேன் தினைமா துடைத்து
வெண்தாடி பிய்த்தபடி நிற்கின்றேன்.
தேவதைபாதி சூனியக் காரிபாதியாக
காவல் பரணில்
சிரிக்கின்றாள் வள்ளி
வயல் நிறைய
பூனையாக்கப் பட்ட யானைகள்
அலைகிறது.

நிலா முகத்தி மான்விழியாள்
முல்லைச் சிரிப்பழகி
தேன் மொழியாள் என்று
சொன்ன கவிதை எல்லாம்
பாழுள் புறம்காலால் தட்டிவிட்டாள்.
வேங்கை மரத்தடியில்
உடைந்த புல்லாங்குழல்
பிய்ந்த மயிலிறகும் தலைமயிரும்
கண் சிமிட்டிக்
கண்ணனும் வந்தவர் என்கிறாள்
ஏழனப் பணிவு
இதில் வேறு எள்ளல் சிரிப்பு.

வெறிக்கும் சோம மது
புறக்கணிப்பின் ஆலகால விசம்.
எல்லார்கும் தேன் கமழ்ந்து
எட்டாத குறிஞ்சி மலர்.
விந்தைப் பெண் கனவுகளில்
விரக்தி விதைக்கின்ற
காவியங்கள் எல்லாம்
கருககும் அவள் குப்பையிலே.

நீருள்ளால் நெருப்பெடுத்துச் செல்லும்
சாகசங்கள் எப்போது தேர்ந்தாய்
குறமகளே எனக்கேட்டால்
விரல்களுள் பற்குத்தும் குச்சியாய்
என்திருவேல் உருள
நூலகம்போல்
பெண்கவிஞர் ஏடுகள் இறைந்துள்ள
காவல் பறனைக் காட்டிச் சிரிக்கின்றாள்.
உன்னில் சிக்கித் துடிக்கையிலே- வள்ளி
உயிரினில் காவியம் துளிர்க்குதடி.

பூசாரியைப் பேயாக்கி
மரமேற்றி அங்கிருந்த
பேய்க்குப் பூனூல் அணிந்து
பூவும் கொடுத்து
வேடிக்கை பார்க்கின்ற
வள்ளிப் புனத்து வழி
ஆபத்து என்றார்கள்
விதிவசத்தால் காதில் விழவில்லை.
வேலும் இழந்தேன்.

அலக்சாண்டரையே தின்றது போர்களம்
எந்தப் பெரு வேட்டுவனையும்
காடு ஒருநாள் தின்றுவிடும்.


visjayapalan@gmail.com

Series Navigation