மரணம் அழகானது

This entry is part [part not set] of 30 in the series 20070726_Issue

புதிய மாதவி


மரணம் அழகானது
ஆடைகளின்றி
அலங்காரமின்றி
உயிர்த்துடிப்பை
பிடித்து இழுத்து
அணைத்து
வாழ்க்கையைப் பிரசவிக்கும்
மரணம் அழகானது.

அம்மா..
கருப்பைச் சுமக்கும்
உன் உடல்மட்டும்தான்
உனக்கும் எனக்குமான
உறவின் மிச்சம்
என்ற என் கணக்குத் தவறானது

என் உள்ளங்கைப் பிடித்து
உன் உயிர்ப்பிரிந்த தருணங்களில்
என் நரம்பு மண்டலங்களைச்
சிலிர்க்க வைத்தது
காற்றில் கலந்த
உன்னுயிர்மூச்சு.

ஒற்றை அறையில்
கட்டில் கால்களில்
கட்டப்பட்ட உறவு.
சிறைக்கம்பிகளுக்கு நடுவில்
தொட்டுத் தழுவிய
விரல்களாய்
தவித்த வேதனைக் காட்சிகள்
ஒரு நொடியில்
விட்டு விடுதலையாகி
காற்று மண்டலத்தில்.
அம்மா..
மரணம் அழகானது.

உறவுகளைப் பிரித்த
சாத்தானின் பல்லிடுக்குகளில்
சிக்கித் தவித்த
நாட்களை
வெற்றி கொண்ட
மரணம்
அழகானது.

மரணப்படுக்கையில்
எரிந்து விழுந்த
நட்சத்திரக் கூட்டங்கள்
நீ எழுதி முடித்த
கவிதையை வாசிக்க
காத்திருக்கின்றன.

சிதையில் மூட்டிய
தீயின் வெளிச்சத்தில்
மீண்டும்
வாழ்க்கையின் தரிசனம்.
அம்மா..
உன்னைப் போலவே
உன் மரணமும்
அழகானது.

——————

(** 19-07-2007 எங்களை விட்டுப் பிரிந்த என் அம்மாவுக்கு……**)


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை