மெளனங்கள் தரும் பரிசு

This entry is part of 35 in the series 20070705_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இந்த முறை பேச்சு எழுந்த போது
மெளனத்தால் சாடைகாட்டி
பதுங்கிப் பின்வாங்கி
எனக்குள் ஒடுங்கிக் கொண்டேன்.

ஒடுங்கிக் கொண்டதை
முற்றிலும் முழுசாய் பயன்படுத்தி
கூர் தீட்டிய ஆயுதங்களை
என்மீது பிரயோகித்தாய்

விரல்நுனிகளைப் பிளந்து
ஒவ்வொன்றாய் வெட்டி இழுத்து
நரம்புகளை பிடுங்கினாய்

பிடரியிலும் விழுந்தன
வீச்சரிவாளின் வெட்டுக்கள்

என் தலை துண்டிக்கப் பட்டுக் கிடந்தது
துடித்துக் கொண்டிருந்த சடலத்தில்
தலையை ஒட்டவைக்க முயன்றேன்.

சுவாசிக்கத் தேடிய மூக்கை காணவில்லை.
எழுந்து நடக்கமுயன்றும்
உறுப்புகள் இழந்த உடலை கொண்டு
எதுவும் செய்ய முடியவில்லை.

எதிரே வந்தவன் ஆயாசமாய்
என்மீது மூத்திரம் பெய்தான்,

இனி எனக்குத் தேவையில்லை
மெளனங்கள் தருகின்ற
இந்த வன்மமிகு பரிசெல்லாம்


mylanchirazool@yahoo.co.in

Series Navigation