பட்டறிவு

This entry is part [part not set] of 31 in the series 20090528_Issue

எஸ்ஸார்சி


அப்படி என்ன தவறு செய்துவிட்டான் தருமங்குடி துரைசாமி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தெற்கு வெளி வயலில் நெற் பயிர் எப்படி இருக்கிறது என்ற பெரிய பிள்ளையின் கனம் கூடிய கேள்விக்கு அவன் சொன்னது ஒரு பதில்தான் அது இப்படிப்போய் முடிந்திருக்கிறது..
‘ தேவலாம்க பெரிய பிள்ளை வயல்ல பயிரு நல்லாவே இருக்கு‘ இதை தான் மாற்றி மாற்றி அந்த துரைசாமி சொல்லிக்கொண்டு வந்தான்.
பிள்ளை மனதிற்குக் கொஞ்சம் திருப்தியாய் இருக்கட்டுமே என்கிற ஒரு சின்ன யோசனை.
வேறு விவகாரம் ஏதும் தான் அது என்று சொல்லிவிட ஒன்றுமில்லை. வயலில் அறுவடை நாள் சமீபமானது. மகசூல் அறுவடையில் கிடைத்த நெல்லோ வயலின் அறுப்புக்கூலிக்கேகூடபற்றாமல் போய்ப் பிள்ளையின் கையைக் கடித்தது.
துரைசாமி மீது பிள்ளைக்கு ஒரே கோபம் ஏன் இப்படி ஒரு பொய்யையை தன்னிடம் இந்தத் துரைசாமி சொல்ல வேண்டும் மீண்டும் ஒரு நாள் துரைசாமி அதே பிள்ளையிடம் வசமாய் அகப்பட்டுக்கொண்டான். யார் சும்மா இருந்தாலும் நம்மை ஆட்டிப்படைக்கும் கிரகங்கள் மட்டும் எப்போதும் சும்மா இருக்காதாம் உலகம் சொல்லிப்போகும் வசனங்கள் மட்டும் திடீரென்று பொய்த்து விடுமா. என்ன.
‘ துரைசாமி நீ தெற்கு வெளி வயலு வெளச்சல் பத்தி நான் உன்னை கேட்டப்ப நீம்புரு என்கிட்ட சொன்னது என்னா இப்ப நடந்துபோனது என்ன மனுசனுக்குப் பேச்சுன்னா அதுல கொஞ்சம் சுத்தம் இருக்கோணும்’
‘ பெரிய அய்யாகிட்ட நானு அப்படி என்னங்க குத்தமா சொல்லிப்புட்டேன்”
‘ தெற்கு வெளி வயலுல மாசுல் நல்லாவே இருக்குன்னு நீ எங்கிட்ட புளுவிட்டல்ல’
‘ அய்யா நானு சும்மா சொன்னதுதான் நம்ப கொல்லை பயிரு நம்பளை ஏமாத்திடாதுன்னுதான்’
‘ வெளச்சல் எப்படி இருக்குன்னு உன்ன கேட்டது என் மொத தப்பு. அதுக்கு என்புத்திய இதால அடிச்சிகிணும்’
‘ நீங்க ஒரு தபா போய் கொல்லையைப் பாத்து இருந்தா சரியா இருந்துருக்கும்’
‘ பாரு பாரு நீ எல்லை தாண்டிப் பேசுற உம் பேச்சுல சுருக்கம் இருக்கணும்,’
‘ ஒண்ணும் நான் தப்பா பேசுலிங்க அய்யா’
பிள்ளைக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. இந்த துரைசாமி எல்லாம் வந்து நமக்கு யோசனை சொல்வது நாம் அதனைக் கேட்பதுவா. பிள்ளைக்கு க்கோபம் தலைக்கேறி அது அவரையும் வி¢ஞ்சி உயரமாகி எட்டிப்பார்த்தது. யார்தான் எதிர்பார்த்தார்கள். ஆனாலும் தருமங்குடியில் இப்படி நடந்தது என்பது உண்மை.
தன் கால் செருப்பினைக் கழட்டிய பிள்ளை அதனை எதிரே நின்றுகொண்டிருந்த அந்தத் துரைசாமியை நோக்கி ஔங்கி வீசினார். துரைசாமியின் கன்னத்தில் அந்தச் செருப்பு பட்டுக்கீழே வீழ்ந்தது. துரைசாமி நிலை குலைந்து போனான். நொடியில் எப்படியோ அவன் சமாளித்துக்கொண்டான் பெரிய பிள்ளை வீசி எறிந்த செருப்பினை தன் கையில் எடுத்துக்கொண்டுபோய் பிள்ளையிடம் கொடுத்துக்காலில் போட்டுக்கொள்ளச்சொன்னான்.
‘ வேணாம் பிள்ளை ஆத்திரம் கண்ண மறைக்கக்கூடாது. அது அது அங்க இருக்கணும் உங்க செருப்பும் உங்க கால்லயே இருக்கட்டும் கழட்டி கெடாசிடாதிங்க’
சொல்லி முடித்தான்.
தருமங்குடி ஊருக்கே இது விஷயம் தெரிந்துப்போக துரைசாமியின் ஆட்கள் திபு திபு என்று கூடி பிள்ளையின் வீட்டு முன்பாக த்திரண்டு நின்றனர். தெருவெங்கும் ஒரே களேபரமாக இருந்தது.
‘ இதுக்கு என்னா நியாயத்தைப் குந்திப்பேசுறது. இம்மாம் ஆனபெறகு இப்ப தீர்ப்பா நாம சொல்லுறது இதுதான். இப்ப அதே செருப்பால அந்தப் பிள்ளை மேல வுட்டுக் கெடாவுணும். ஏன் துரைசாமி இன்னும் அங்க என்னா அங்க ரோசனை. கணக்குன்னா அது அது நேர் ஆவுணும் சட்டுனு ஆவுட்டும்’ முடிவு சொன்னது கூடிய கூட்டம்.
துரைசாமி குறுக்கிட்டான், ‘ இந்த என் இந்தத் திரேகம் அந்தப் பிள்ளை போட்ட சோத்துல நிக்குது. பிள்ளை மேல செருப்பு வுட்டு கெடாவுற கேபுல சமாச்சாரத்தை இங்க யாரும் என்கிட்ட பேச வேணாம் அதுக்கு நானு ஆளு இல்ல’.
‘ இத எப்படி வுடுவ நம்ப ஆளை அதுவும் தன் செருப்பால அடிச்சிட்டு ஒருத்தரு இந்த ஊருல இனிமேலுக்கும் இருந்துடறதா’ மீண்டும் கூட்டம் கொக்கரித்தது.
‘ நீ அந்த ப் பெரிய புள்ளை மேல செருப்ப வுட்டுக்கெடாவுலன்னா இந்தக் கேபுலம் நடந்தக்கதக்கு ஒரு பதிலுதான் என்ன’.
ஊர் கூடி அந்தத் துரைசாமியிடம் மீண்டும் கேட்டது.
பிள்ளை எதுவும் பேசாமலே இருந்தார். தான் செய்துவிட்ட தவறு ஒன்றின் கனம் இப்போது அவருக்கு மண்டையில் அதிர்ந்து உரைத்தது. இந்த துரைசாமியை நாம் ஏன் இப்படி அடித்தோம் அதுவும் போயும் போயும் இப்படியா, அதுவும் நாமா என மெய்யாகவே மனம் கலங்கிப்போனார்.
‘ உங்க முடிவு எதுவோ அது.க்கு கட்டுப்படறன்’ பிள்ளை கைகட்டிக்கொண்டு ப்பேசினார்.
‘ பிள்ளை நீங்க கை கட்டாதிங்க எனக்குக்கண்ணால அதைப் பாக்க முடியல’ என்றான் துரைசாமி..
‘ செஞ்சது தப்பு தானே” என்றது கூட்டம் கோரசாக.
‘ ஆமாம் தப்புதான்’ தலை குனிந்துகொண்டு சொன்னார் பிள்ளை.
‘ அப்புறம் அதுக்கு என்னா பதிலு சொல்லுறீரு ’
‘ நீங்க சொல்லுங்க நான் கட்டுபடுறேன்.
‘ துரைசாமி ஆயிரத்துல ஒருத்தவன் ரெம்ப நல்லவன். அவன் இன்னும் உங்க மேல அந்த மரியாதை வச்சிருக்கான். ஆக நீங்க பண்ணுன தப்புக்கு ஒரு அபராதம் மட்டும் போடுறோம்’
‘ போடுங்க அய்யா’
‘ அதே தெற்குவெளி நிலத்தை துரைசாமியே ஒட்டிப்பயிர் வச்சிகிட்டும். என்னா சொல்லுறீரு பிள்ளை’
‘ ரொம்ப சரிங்க சம்மதங்க உங்க முடிவுக்கு நான் பரிபூரணமாக்கட்டுப்படறன் அப்பிடியே செய்துவிடலாம். இனி துரைசாமியே அந்தக்கொல்லையை ஒட்டிப்பயிர் வச்சிகிடட்டும். எனக்கும் அதுல முழு திருப்திதான்’
பிள்ளை ஊர்த் தீர்ப்பை ஒத்துக்கொண்டார். ஆராய்ந்து எடுத்தவிட்ட அந்த ஒரு முடிவோடு தருமங்குடியில் கூடிய கூட்டம் கலைந்துபோனது
துரைசாமி பெரிய பிள்ளை கொடுத்த அந்த நிலத்தைத்தானே ஒட்டினான். நல்ல முறையில் உழுது உழைத்துப் பயிர் செய்தான். நெற்பயிர் அபாரமாய் விளைந்து விட்டிருந்தது அறுவடைக்கு எற்பாடுகள் செய்தான். அறுவடைக்கு க்கூலி ஆட்களை அமர்த்தினான்…
விளைந்த நெல் மூட்டைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டுபோய் பெரிய பிள்ளை வீட்டில் வைத்துவிட்டு வரச்சொன்னான். நெல் வண்டியைப்பார்த்த பெரிய
பிள்ளை அதிர்ந்போனார்.
‘ இது ஏது நெல் மூட்டைங்க’
‘ துரைசாமி அனுப்பினாருங்கோ. தெற்குவெளி கொல்ல மாசுலு முழுசும் உங்க கிட்ட அனுப்பச்சொன்னரு’
‘ இது என்னா புது சமாச்சாரம் ஒண்ணும் எனக்கு விளங்குல எங்க துரைசாமி உங்க கூட வருலையா’
‘ அவரதான் நாங்களும் தேடுனம் ஆளை க்காணும்’ என்றான் நெல் எடுத்து வந்த வண்டிக்காரன்.
‘ உங்க கூலி யெல்லாம் துரைசாமி கொடுத்துட்டானா’
‘ எல்லாம் சரியா கணக்குப்பண்ணிக்குடுத்துட்டுப்போனவருதான். அவரதான் இன்னும் காணுல. உங்களுக்கு ஒரே ஒரு சின்னச் சேதி சொல்லச்சொன்னாரு கொல்லைக்காரன் போய் பாக்காத எந்த மாசுலும் கூடிவராதுன்னு’ உங்ககிட்ட மட்டும் இதைச் சொல்லிட்டு அப்புறமாதான் எங்களை த்திரும்பி வரச்சொன்னாரு’ உடன் நெல் வண்டிக்காரன் இடத்தைக்காலிசெய்தான். பிள்ளைக்கு கன்னத்தில் ஒங்கி யாரோ அறைந்த மாதிரி இருந்தது.

தருமங்குடிக்கு இது நாள்வரை அந்த துரைசாமி திரும்பவே இல்லை.
பிள்ளை தன் வீட்டுக்கு வண்டியில் ஏற்றி வந்து இறக்கிய நெல் மூட்டகளை அப்படியே ஊர் பொதுவாக்கி துரைசாமியின் பெயரால் தருமங்குடி கருமை மாரிகோவலில் ஒரு அன்னதானத்திர்கு ஏற்பாடு செய்தார். இன்றும் ஆண்டுதோறும் தெற்கு வெளிக்கொல்லையின் மாசூலில் இருந்து சித்திரைத்திரு விழாவின்போது தருமங்குடியில் அந்த அன்னதானம் சரியாகவே நடந்துவருகிறது.
தருமங்குடிப்பிள்ளையும் பின் எப்போதோ காலமாகி முடிந்தார். அந்தத் துரைசாமி தருமங்குடியைவிட்டுப்போனதோடு சரி. அப்புறம் அவர் என்ன ஆனார் எங்குபோனார் என்கிற விஷயம் இந்த நிமிஷம் வரை தருமங்குடி மக்கள் யாருக்கும் தெரியாது.
காலம் யாரையும் சட்டைசெய்யாமல் தன் போக்கில் எப்போதும் போல் உருள்கிறது கொல்லக்குச்சொந்தக்காரன் கொல்லை மகசூலை தானேபோய்ப்பார்த்துவர வேண்டும் என்கிற விதி மட்டும் இன்றும் தருமங்குடியில் கறாராய் நடைமுறையில் இருந்துவருகிறது
————————————————————————————————————————————————

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

பட்டறிவு

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

ஆதிராஜ்



பிள்ளையார் சுழி போட்டுப்
பேரேடு தொடங்கினேன்.
கள்ள மார்க்கட்டுக்
கணக்கெழுதும் நோட்டு அது!
கொள்ளை கொள்ளையாய்
குவிந்தது லாபம்!
கொஞ்ச நாளில்
கள்ளக் கணக்கால்
காலாண்டுக் கடுங்காவல்!
உள்ளே இருந்தபின்
உறுதியுடன் வெளிவந்தேன்!
கொள்ளை லாபம்
குவிகின்ற நேரமிது!
கள்ளக் கணக்கைக்
கைவிடவா? ஞாபகமாய்ப்
பிள்ளையார் சுழியைப்
பேரேட்டில் போடவில்லை!

– ஆதிராஜ்.

Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்