• Home »
  • கவிதைகள் »
  • அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு

This entry is part of 34 in the series 20070621_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு – நடுவர் இசைக்கவி ரமணன்

வெற்றியாளர்கள்: எஸ். சங்கரநாராயணன், சிறில் அலெக்ஸ், சுவாமிநாதன், கே.எம். அமீர்

*

முதல் பரிசுக்குரிய இசைக்கவிதை

ஒலிவடிவம் இங்கே

“நிசப்தம்”

நிசப்தம் நிசப்தம் எங்குமே நிசப்தம்
நிசப்தம் நிசப்தம் யாவுமே நிசப்தம்
உள்ளும் வெளியும் உலகம் நிசப்தம்
முன்னும் பின்னும் எல்லாம் நிசப்தம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

சலனமில்லாமல் அசைவு எதுவுமின்றி
காற்றது மோனம் கொள்ளும்
கனவெளி மோனம் கொள்ளும்
நிசப்தம் நிசப்தம் எங்குமே நிசப்தம்
நிசப்தம் நிசப்தம் யாவுமே நிசப்தம்

அலைகளும் உறங்கும்
ஆகாயம் உறங்கும்
மலர்களும் தியானம் செய்யும்
மனிதரும் தியானம் செய்யும்
நிசப்தம் நிசப்தம் சர்வம் நிசப்தம்

பூதகணங்கள் கைகட்டும்
துன்பம் வாய்பொத்தும்
அன்னை சந்நிதி முன்னிலையில்
அண்டசராசரம் அமைதியினில்
நிசப்தம் நிசப்தம் ஏகம் நிசப்தம்

காலமும் ஒடுங்கும்
கவலையும் பதுங்கும்
பாவமும் விலகிக் கொள்ளும்
பரவசம் தழுவிக் கொள்ளும்
நிசப்தம் நிசப்தம் யோகம் நிசப்தம்

நிசப்தம் நிசப்தம் எங்குமே நிசப்தம்
நிசப்தம் நிசப்தம் யாவுமே நிசப்தம்
உள்ளும் வெளியும் உலகம் நிசப்தம்
முன்னும் பின்னும் எல்லாம் நிசப்தம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

பங்கேற்பு, கவிதை: எஸ். சங்கரநாராயணன், சென்னை
இசை, குரல்: லஹரி

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

இரண்டாம் பரிசுக்குரிய இசைக்கவிதை

ஒலிவடிவம் இங்கே

“பூவானது”

இயற்கையைப் பாடவே
இதயமும் பூக்குதே
காலையில் புல்வெளி
கவலைகள் போக்குதே

மலை தரும் பாடங்கள் என்ன
மனிதனின் சிறுமையைச் சொல்ல
நதிகளின் பாடல்கள் என்ன
நயனமாய் ஆடுவதென்ன

கடவுளின் சாயலா – இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா – மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம்
பூவானது

0

துள்ளித் துள்ளி முயல்களும்
சந்தோஷம் கொள்ளுதே
அள்ளி அள்ளி வாழ்க்கையைக்
கொண்டாடச் சொல்லுதே

கள்ளிச்செடி வெட்டினால்
கண்ணீரைச் சிந்துதே
வன்முறைகள் தேவையில்லை
சொல்லாமல் சொல்லுதே

வானத்தில் ஏறிவரும்
மேகங்களும்
யாருக்கும் தடையின்றி
மழை பொழியும்

கடவுளின் சாயலா – இயற்கை
கவிதைக் கூடலா
மலர்களும் பேசுமா – மனித
மனதைத் தீண்டுமா

பூவானது மனம்
வண்டாயிரம் வரும்
தேனூறிடும் நிதம்
பூவானது

பங்கேற்பு, கவிதை, இசை, குரல், அனைத்தும்:
சிறில் அலெக்ஸ், சிகாகோ

(இரண்டாம் பரிசு 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய இசைக்கவிதை 1

ஒலிவடிவம் இங்கே

“கவிதை கேட்க வாரும்”

(பூபாளம்)

எழுந்தோடி வாரும்
என் கவிதையைக் கேட்க வாரும்

புல்லின் மேல் துஞ்சும் பனி போலவும்
புதுமலர் வாசம் போலவும்
துள்ளும் கடலலை போலும்
துவளும் கொடி போலும் தோன்றும்

(என் கவிதை கேட்க வாரும்…)

(ஆரபி)

செவியில் தேனாய் ஒலிக்கும்
புவியில் ஆறாய்ப் பாயும்
கேட்டவர் மகிழ்ந்து கண்மூடி
மயங்க வைக்கும்

(என் கவிதை கேட்க வாரும்…)

(சிந்து பைரவி)

சிந்தனைக்கு விருந்து தரும்
சிறப்பான பொருள் தரும்
நடையில் நடனம் மிளிரும்
நாதத்தில் தேனாய் ஒலிக்கும்
கடவுள் பெருமை பேசும்
காலமெல்லாம் வாழும்

(என் கவிதை கேட்க வாரும்…)

பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ்
இசை, குரல்: கல்யாணி சதாசிவன்

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

ஆறுதல் பரிசுக்குரிய இசைக்கவிதை 2

ஒலிவடிவம் இங்கே

“வான் பூவே வா”

வான் பூவே, வா, ஒரு வெண் பூமி தா !
தீத் தூறல்கள் இனி வேண்டாமே, வா !

நீ நான் எனவே, பிரிந்து ஏன் வீண் மயக்கம் ?
ஓர் நாள் உலகம், பகைமைத் தீயை அணைக்கும் !
வா, சேர்ந்து நடப்போம், இதயம் தேன் ஊறித் ததும்பும் !
நாம் கைகள் பிணைத்தால், வழியில் பூப் பாதை விரியும் !
அன்பால் போடு, ஒரு பூக் கோலம் தான் !

ஏன் பிறந்தோம் புவி மீதிலே ?
எவர் அறிவார் இதன் ரகசியமே ?
வீண் பிறவி எனப் போவதா ?
புது உலகம் அதைத் திறந்திடுவோம் !
ஓர் குடை அடியினில் சேரலாம் !
நாடலாம், முழு ஒற்றுமை !
அன்பால் போடு, ஒரு பூக் கோலம் தான் !

போர்முனையில், தினம் தேய்பிறை !
முழுநிலவு, இனி மலர்ந்திடுமா ?
யார் முதல்வன் எனும் தேடலில்,
மனிதனையே, அட, மறந்துவிட்டோம் !
போதுமே, எதிரொலிச் சண்டைகள் !
தேடுவோம், புது நட்புகள் !
அன்பால் போடு, ஒரு பூக் கோலம் தான் !

பங்கேற்பு, இசை: கே.எம். அமீர், சென்னை
குரல்: இர்பானுல்லா
கவிதை: நாக. சொக்கன்

(ஆறுதல் பரிசு 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

Series Navigation