• Home »
  • கவிதைகள் »
  • அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு

This entry is part of 32 in the series 20070531_Issue

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்


நடுவர்கள்: கவிஞர் ஜெயபாரதன், கனடா; கவிஞர் கதுமு. இக்பால், சிங்கை

ஒலிக்கவிதை – கேட்கச்சுவை – கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.

*

முதல் பரிசுக்குரிய கவிதை

“இருட்டிலே ஒரு மெழுகுவத்தி”

நெருப்பே
நீ மெழுகுவத்தியைத்
தின்றபோது தான்
இருள் இங்கே விலகியது

ஆனால் நீ
வெடிகுண்டாய் வந்தபோது
வெளிச்சம் கூட வெட்கப்பட்டது

நெருப்பை நெருப்பால்
அணைத்தபோது தான்
இருள் கதவு
இங்கே விலகியது

வெளிச்சம் தரும்
சூரியன் கூட
அண்டவெளியில்
இருட்டில் தானே கிடக்கிறது

இருட்டைப் போக்கும்
எத்தனையோ மெழுகுவத்திகள்
வெளிச்சத்தைப் பார்த்ததேயில்லை

ஒரு மெழுகுவத்தி
மகாத்மாவாக மாறியபோது தான்
உலகம் அகிம்சையைப் புரிந்துகொண்டது

ஒரு மெழுகுவத்தி
ரோஜாவாக மாறியபோது தான்
விடுதலைப் பத்திரம் இங்கே எழுதப்பட்டது

வெளிச்சத்தை நாங்கள்
விலைகொடுத்து
வாங்கும்போதெல்லாம்
கதவுக்கு வெளியே
இருள் தானே காத்திருக்கிறது

வெளிச்சம் வீட்டுக்குள் வருமென
அறிவுக் கதவுகளைத் திறந்தால்
மதக்கொடிகளுக்குக் கீழே
இருள் தானே ஊர்வலம் வருகிறது

இங்கே பள்ளத்தில் விழுவதற்கு
ஏணிகள் செய்கிறார்கள்
விழுவதைக் கூட
பறப்பதாய்ச் சொல்கிறார்கள்

இன்பம் அங்கே இருக்குமென்றால்
இரவும் பகல் தான்

இருட்டிலே ஒரு மெழுகுவத்தி
இருந்துவிட்டுப் போகட்டும்

ஆனால்
மனிதநேயம்
மரணப் படுக்கையில் இருக்கும்போது
வெளிச்சத்தைப் பார்க்கவே
எங்களுக்கு விளக்கு வேண்டும்

– மு. பாண்டியன்
நெய்வேலி

(முதல் பரிசு 1000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள்)

*

இரண்டாம் பரிசுக்குரிய கவிதை

“உன்னை நினைக்கையிலே”

உன்னை நினைக்கையிலே
உல்லாசத் துள்ளலில்
முன்நிற்கும் நெஞ்சத்தை
எந்த முகப்படாமிட்டு
மறைப்பதென்று தவிக்கையிலே
மலையாக உன் நினைவே
முன்னின்று எதிர்கொள்ளும்.

முட்டிமுட்டிக் குடிக்கும்
கன்றினைப்போல்
உன்னைச் சுற்றிச்சுற்றியே
நினைவு.

வழிப்பாதை இடைஇடையே
பொதி சுமக்கும் கழுதையின்
முரண்டாய் பிடிவாத நினவுகள்,
ஆக்கிரமிக்கும் தன் ஆளுமையை.
ஒப்பனைக்குப் பின்னும்,
என் கண்ணில்
உன் முகமே தெரிவதாக
தோழி சொல்கிறாள்.

உன்னில் நானா
என்னில் நீயா
யாரோடு யார் கலந்தோம்?
ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
பள்ளிப்பாடக் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றேயானது
நம் பள்ளியறைக் கணக்கில்.

நீயும் நானுமில்லாத
உலகைக் கண்டேன்
அங்கு காற்றே இல்லை
நீயும் நானுமில்லாத
நிலவைப் பார்த்தேன்
அதில் ஒளியே இல்லை
நீயும் நானுமில்லாத
கவிதை புனைந்தேன்
அதில் ஜீவனே இல்லை.

– ஷைலஜா
பெங்களூர்

*

ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 1

“பிடிமானம்…”

உளியாய் வந்தாய்
உருகும் உள்ளமறிந்து
சிதிலமாய்க் கிடந்த கல்லெடுத்து
செதுக்கிச் செதுக்கி சிற்பம் செய்தாய்

காற்றாய் வந்தாய்
காதலில் கசிந்துருகி
எங்கோ கிடந்த தக்கையையெடுத்து
புல்லாங்குழலாய் கீதமிசைத்தாய்

வண்ணமயமாய் தீட்டினாய்
வீணே கிடந்த சீலையையெடுத்து
வானமளக்கச் செய்தாய்
விரியும் சிறகுகள் விரித்து

அன்பளித்து அன்பளித்து
அன்பின் ஊற்றாக வந்தாய்
அண்டத்தின் சிகரம் காண
அழைத்துச் சென்றாய்

பாரையே புதுப் பார்வையால்
காணவைத்த நீ
பார்வையிழக்கச் செய்து
கண்காணா தொலைவில் மறைந்தபடி
போர் தொடுக்கிறாய்

மீட்சியின்றித் தவித்தாலும்
வாழ்கிறேன்
வீழக்கூடாதென்ற உன்சொல்லினைப்
பிடிமானமாய்ப் பற்றிக்கொண்டு…

– மதுமிதா
சென்னை

*

ஆறுதல் பரிசுக்குரிய கவிதை 2

“அன்புடன் அபலை”

நான் பலமுறை
விற்றிருக்கிறேன்
உடலை

யாசிக்கின்றேன்
அன்பை
யோசிக்கிறார்கள்

அந்தியில்
கடை விரிக்கும் போது
சந்தியில்
முகம் பார்த்தழைக்கும்
ஆடவரும்

பணப்பந்திக்கு
முந்தி வந்து
கையேந்தும் பெண்டிரும்
யோசிக்கிறார்கள்

ஆண்களுக்குத் தேவை
உடல்
பிற
பெண்களுக்குத் தேவை
பணம்
எனக்குத் தேவை
மனம்

கற்பை
கரையும் வியர்வையில்
கரைத்தவர்களும்
பகலிலும் இரவிலும்
கனவில் கூடிக்கூடிக்
களித்துக் களைத்தவர்களும்

என்னைக் கற்பிழந்தவள்
என்கிறார்கள்.

அமாவாசை
இருளில்
சிறகு விரிக்கும்
மின்மினியின்
ஒளி போல
நெஞ்சத்தில்
புதைந்து கொண்ட
சின்னச் சின்ன
ஆசைகள்

அஸ்திவாரத்தோடு
நின்றுபோன கட்டிடங்கள்
போல
அனாதரவாய்
மன ஊஞ்சலில்…

தோள் கொடுக்க
வாரீரோ
என அழைத்தால்
படுக்கைப் பந்தியென
கடுகவே விரைகிறார்கள்…

சித்திரத்துத்
தாமரை போல்
நான் கொள்ளும்
பொய்ச்சிரிப்பும்

மங்கலமாய்
சிவந்து நிற்கும்
அந்தி வானமாய்
என் பெண்மையின்
பொய் நாணமும்..

ஆடித்தள்ளுபடிக்கு
மக்களை ஈர்ப்பது போல்
ஈர்க்கிறது.

குத்து விளக்காய்
குளிர்ந்து நிற்கும்
என் மன அழகு
உண்மை..

திருமண அழகு
தேடும்
பலாச்சுளை போன்ற
என் இனிய பெண்மை
உண்மை..

செயற்கையைச்
சந்தையில்
வைத்து
வயிறு கழுவும் நான்
சிந்தையில் வைத்த
உண்மையைச்
சந்தைப்படுத்த இயலாது.

சந்தைக்கு வாராத
பொருட்கள்
விலை போகாது

விலை போகாத
பொற்சிலை நான்..

தூசு ஏறி
மதிப்பிழந்து

தூசைத் துடைப்பவன்
பாக்கியவான்
மரபை உடைப்பவன்
பாக்கியவான்.

ஈரேழு
சென்மமாயினும்
அவனுக்காகக் காத்திருப்பேன்

காத்திருக்கும் காலம்
கற்பிழந்த சமுதாயத்தைப்
புறந்தள்ளி
இல்லற வேள்வியில்
எனை
ஆகுதியாய் இட்டிட
என்னைச் செப்பனிடுவேன்…

உடற்பசியைத்
தணித்திட்ட நான்
என் பசித்தீயில்
எரிய நேரிடினும்
மகிழ்வாக மடிவேன்

மடிந்த பின்னாவது
மடி கிடைக்குமா? ஆதரவாக
காலச் சக்கரம்
போல் என் ஆசைகளும்
சுழலும்….

ஆசைகளோடு,
அபலை.

– V. லஷ்மணக்குமார்
மதுரை

*

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்
http://groups.google.com/group/anbudan

கவிதைகள் ஒலி வடிவ இணைப்புகள்
மெழுகுவர்த்தி
உன்னை நினைக்கையில்
பிடிமானம்
அன்புடன் அபலை

Series Navigation