கவிதைகள்

This entry is part of 29 in the series 20070510_Issue

உஷாதீபன்பிணக்கு

உனக்கும் எனக்குமான
உறவுச்சிக்கல்களுக்கிடையில்
தார்மீக முனைப்புகளாய்
பின்னிக் கிடக்கின்றன
ஏராளமான வார்த்தைகள்
வறண்டுபோன நம் வாழ்க்கைக்கு
சாட்சிகளாய் நிற்கின்றன
அதன் வீர்யம்
நீயும் நானும்
கூடிக்களித்தபோது
கும்மாளமிட்ட மெப்பனைகள்
காணாமல்போயின மாயமாய்
இந்தச்சொல்லடுக்குகளின் ஆழத்தில் இனி
நினைத்தாலும் அவிழ்க்க முடியாத
சிடுக்குகளை
ஒரு மூன்றாமவன் வந்து
முயன்று நிற்கலாமா?
எல்லாம் பொய்யென்று
இழித்துணர்ந்த வேளையில்
இந்த இடைப்பட்டவன் எதற்கு இங்கே?விட்டில்
அகண்ட ககன வெளித் தனிமையில்

உன் வருகைக்காகக் காத்துக் கிடக்கிறது மனம்

காற்றில் அலைபாயும் இருண்மை விலகி

ஒளி பீறிடத் துடித்து நிற்கிறது எண்ணங்கள்

ஏக்கப் பெருமூச்சுக்கள் அனலாய்ப் பரவி

உனக்கான நேரத்தை நீட்டிக்கின்றன

விழித்திரையிலிருந்து பரவும் கதிர்கள்

விட்டில் பூச்சிகளாய் மினுமினுத்துப்

பறந்தழிகின்றன

கனல் துண்டமாய்ச் சிதறும்

கண் ஓர நீர்த்துளி

நம்மின்

கதையைச்சொல்லி மடிகிறதுபயணம்

தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்
நம்பிக்கை தளராத
நயமான ஓசை
நீள் தெருவில்
நெடுக மோதி எதிரொலித்து
அதிர்ந்து அலைந்து
மாயமாய் மறைந்து
அழிந்து போகிறது
எல்லோர்க்கும் வாழ்க்கை
ஏதோவோர் நம்பிக்கையின்பாற்பட்டு
தவறாமல் வருகிறான் ஒருவன்
ஞாயிறன்று அவன்

செருப்பூ பழைய செருப்பூ
காலணி ஓசை கானலாய்க் கரைய
குரல் தழுவிய என் பூஞ்சை மனசு
கலங்கிப் போகிறது
இன்னும் அவன்
போகவேண்டிய தொலைவு
எவ்வளவோ?
எப்பொழுது முடியுமோ அவனின்
இன்றையபொழுது


ushadeepan@rediffmail.com

Series Navigation

உஷாதீபன்