மிருகம்

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

பாஷா



நம் படுக்கையறையில்
சயனித்திருக்கும்
அந்த மிருகம்
ஒரு பின்னிரவில்
விழித்து என்
விரல்பிடித்து இழுக்கும்
ஆனால்
அதற்கான உணவை நீ
உன் குளிர் போர்வையில்
எப்போதும் ஒளித்துவைத்திருக்கிறாய்
பசியில் உக்கிரமான மிருகம்
என் தலை பிளந்து
மூளை பிய்த்தெரியும் நொடிகளில்
நீ உறக்கம் கலைந்து
வாரக்கணக்கில் பசித்தவனுக்கு
அரிசிமணி இடும் அவலத்தையே
எப்போதும் புரிகிறாய்!
உங்கள் விளையாட்டில்
என் ஆதாரங்களை
காப்பாற்ற கதியற்றவனாகிறேன்!
மிருகத்தை படுக்கையிலிட்டதார்?
அதன் உணவை ஒளிக்கும்
உன் விளையாட்டின் நோக்கம் என்ன?
வலி உயிர் குடிக்கும் வேளையிலும்
அதன் உணவை வேறிடம் தேடாமல்
உன்னிடம் இரந்து நிற்கும்
என் இயலாமையின் நீட்சி எதுவரை?
கேள்விகளின் தாக்கத்தில்
களைத்து கண்ணயர்கிறேன்
நித்தம் இப்படித்தான்
உறங்குகிறேன்!


Sikkandar.Nawabjan@ustri.com

Series Navigation

பாஷா

பாஷா