கவிதைகள்

This entry is part of 32 in the series 20070426_Issue

க்ருஷாங்கினி


ஐயனே

ஒரு சில மழைத் துளி
தலை மிசை வீழின்
நிற்காத அடுக்குத் தும்மல் – பின்
உடன் ஓடும் மூக்கருவி.

கைக்குட்டை, மிருது காகிதம்,
முக்கி எடுத்தாற்போல்
முற்றும் நனைகிறது, தலைக்கனம்.

சிவனே, உனக்கோ!

சடையிடை இடையறா
பிரவாக நீர் ஊற்று,
முடி நனைத்து – பின்
தலை இறங்கலாம்.

ஸ்தலம் புகழ் பெற்றால்
சன்னதி, மற்றும் சுற்றுத் தெருக்களிலும்
நிறுத்தம், வழி செல்லும் வாகனங்கள்
நின்று பின், ஓடும் வழியெங்கும்
தூசு, ஒலிப்பான், மன மாசு.

இரவும் பகலும், எந்நேரமும்,
கூட்ட நெரிசலின் நாற்றம் போக்க
உயர்ந்த கோபுரத்தின் கீழ்
ஓலமிட்டு ஓடும் ஏ.சி.
அன்றாடம் அபிஷேகம்.

சிவனே, நீயோ!

அங்கத்தில்
அரவோனைச் சுமக்கிறாய்,
அரைஞாணும், முப்புரியும் அதுவே.

இடையிலோ எனில், புலித்தோலை
விரும்பிப் போர்த்தி, ஒரு காலை
உயர்த்தி எப்போதும்
சுழன்றாடுகின்றாய்!

உடம்பில் ஒரு சாணளவும்
வஸ்திரம் அற்ற நீ மட்டும்
அருவி மூக்கிலிருந்து
தப்பிப்பது எங்கனம்?

சற்றே ரகசியமாய் கூறு
எனக்கு மட்டுமாவது.இழப்புகள்

இரவில் உரங்கும் வரை
அந்நியக் குத்தகை மாம்பழங்கள்
விழும் சப்தம் கொண்டு கணக்கிடுவேன்,
அத்தையின் கதைகளோடு.
எனக்குப் பின்னும்
வீட்டோடு இருக்கும் விதவை அத்தை
விடியும்வரை எண்ணி வைத்திருப்பாள்.

கருக்கலோடு பைகொண்டு
வீட்டை அடையும் பழங்கள்;
எண்ணிக்கையைவிடக் கூடுதலாகவே
அனைவரும் சுவைத்தாலும்
அப்பா என்னவோ வேதனைகொள்வார்.

குத்தகைப் பணத்தை அப்பாவே கட்டி
அந்த ஆண்டு சொந்தமாக்கினார் மரத்தை.
வேண்டியதற்கு மேலும் விழுந்தும் பறித்தும்
எப்போதும் மாம்பழ வாசம்- வீடெங்கும்.
அனைத்து நண்பர்களும் சுற்றத்தாரும்
கொண்டதுபோக அலுத்தது மரம்.

இந்த மாம்பழம் இன்று
என் வயதை வெறும் பத்தாக்கியது,
தியாசாபிகல் சொசயடியின்
எங்கும் மரம் சூழ் வீட்டு முற்றமும்
உறக்கமில்லா அத்தையின்
நினைவுகளோடும்.


தல விருட்சம்

மேலேற அகலப்படிகளும்
அடிமரம் சுற்ற சிமென்ட் தரையும்
சுற்றிச் சுற்றிப் புளகாங்கிதமும்
புண்ணியமும் பெற்ற பலரோடு நானும்.

பட்ட மரமல்ல என்றுரைக்கக்
கசியும் பசுமை – ஒரு மூலையில் மட்டும்.
பொசுக்கும் வெயில்
பட்டிழைக்குத்தான் ஏற்றது.

கைகளும் கால்களும் மற்றெல்லாமுமே
வெட்டி வெட்டி எறிந்ததுபோக
இடையே மருட்டும் ஒழுங்கற்ற
கட்டிகள் பிதுங்கி நிற்க;

ஆயிரம் ஆண்டுகள் முழுங்கியது என
எண் பின் போடப்படும் பூஜ்யங்கள்.
ஆனால்-
மரமோ வெறும்
ஜீவனுள்ள விறகாய் நிற்கிறது.


nagarajan63@gmail.com

Series Navigation