ஒரு சொல்.. தேடி..

This entry is part of 34 in the series 20070419_Issue

புதியமாதவி, மும்பை


பிரபஞ்சத்தில்

வீசி எறிந்த

ஒற்றைச் சொல்லைத் தேடி

சுற்றி சுற்றி வருகிறது

கோள்களும்

விண்மீன்களும்,

எழுதப்பட்ட

எல்லா காவியங்களிலும்

தேடியாகிவிட்டது

கிடைக்கவில்லை.

ஒவ்வொரு பிறப்பிலும்

வெவ்வேறு மொழிகளுடன்

தேடும் பயணம்.

செத்த மொழியிலும்

இல்லை

செம்மொழியிலும்

இல்லை.

தேடித் தேடி

களைத்துப் போய்

கண்களை மூடும்போது

எங்கோ கேட்கிறது

தேடிய வார்த்தை.

எழுத்துகள் இல்லாத

பேச்சுமொழியில்.

அதை எப்படி

எழுதட்டும்?

***

கோடை வெக்கையில்

வாடிப்போன

வார்த்தைகளை

ஈரப்படுத்தி

எழுத நினைக்கும்போது

சிதறிப்போகிறது

சேமித்து வைத்திருந்த

எழுத்துப்பொட்டலம்.

ஒவ்வொரு எழுத்தாக

எடுக்கவோ?

எடுத்ததை வார்த்தையாக

தொடுக்கவோ?

கூட்டி மணல்வீட்டில்

அடைக்கவோ..?

யோசித்துக் கொண்டிருக்கிறேன்

யுகம் யுகமாய்.

களவாடிச் செல்லும்

கடலலைகளைப் பார்த்துக் கொண்டே.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation