புரியாத புதிர்

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

ஆதிராஜ்



கூத்தாடிப் பிழைக்கின்ற கூட்டத்தில் – ஓர்

கோமாளிப் பாத்திரம் ஏற்றவன் – நான்

பூத்தாடும் மலர் கண்டு நின்றவன் – யாரும்

புனையாத மலர் வாங்கிச் சென்றவன்!

பந்திக்குப் பறிமாறி வந்தவன் – என்

பசியாற உணவின்றி நின்றவன் – நான்

வந்தித்து வந்தித்து வாழ்ந்தவன் – மன

வலுவற்ற கோழைக்கும் தாழ்ந்தவன்!

வைக்காத கடையெங்கும் வைத்தவர் – யாரும்

விற்காத பொருளெல்லாம் விற்பவர் – இது

பொய்க்காத சொல் என்று சொன்னவர் – முன்

புரியாமல் ஏமாந்து நின்றவன்!

விற்கின்ற பொருளென்ன பொருளாகும் – அதை

விற்கின்ற கலையென்ன கலையாகும் – அவர்

கற்கின்ற நூலென்ன நூலாகும் – அதில்

களிக்கின்ற மனமென்ன மனமாகும்!


Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்