தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3

This entry is part of 28 in the series 20070315_Issue

மகேஷ்குமார்


0

தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3

இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07

சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்)
முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி
ஏற்பாடு: லிட்டில் இந்தியா கடைத்தொகுதி மற்றும் மரபுடமைச்சங்கம் (தமிழவேள் நற்பணிமன்றம் பொறுப்பு)

கவியரங்கத் தலைமை : பிச்சினிக்காடு இளங்கோ

தலைப்பு…………………………………………..கவிஞர்கள்

அறுவடைத்திருநாள்………………கவிஞர் திருமுருகன்
திருவள்ளுவர் திருநாள்………….கவிஞர் மாதங்கி
புத்தாண்டு முதல்நாள்…………….கவிஞர் மகேஷ்குமார்
பொங்கல் திருநாள்……………….கவிஞர் மலர்விழி இளங்கோவன்
தமிழர்திருநாள்………………………கவிஞர் சேவகன்

பொதுத்தலைப்பு: தைத்திருநாள்
துணைத்தலைப்பு : புத்தாண்டு முதல்நாள் (மகேஷ்குமார்)

(பாடியது பிச்சினிக்காடு இளங்கோ)
ஒன்றென்றிருப்பதிலும்
உண்டென்றிருப்பதிலும்
ஒருபோதும் தமிழருக்கு
உடன்பாடு இருந்ததில்லை

தெய்வம் என்றாலும்
திருத்தலம் என்றாலும்
ஆயிராமாய் இருப்பதில்தான்
அளவற்ற மகிழ்ச்சி

யாரை நம்புவது?
எதை நம்புவது?
என்பதிலும் தமிழருக்கு
எப்போதும் சிக்கல்தான்

சாமியாரை நம்பலாம்
சாமி யார்? என்பதிலும்
யார் சாமி? என்பதிலும்
சிக்கல்தான்

எது புத்தாண்டு?
எது தமிழாண்டு?
சித்திரையா? தையா?
இன்னும் சிக்கல்தான்

பெரியாரைத் துணைக்கொள்ள
வள்ளுவன் சொன்னதை
யார் கேட்டார்?

பெரியோர் எல்லாம்கூடி
பெரும்முடிவு எடுத்தார்கள்
தைமுதல் நாளே
தமிழரின்
புத்தாண்டு முதல்நாள் என்றார்கள்

தைமுதல் நாளே
தமிழ்ப்புத்தாண்டின்
முதல்நாள் என்று
முழங்க வருகிறார்

மதிமுகத்தின்(மதிமுக) சொந்தக்காரர்
மந்திர புன்னகைக்காரர்
சுதிகூட்டிப் பேசுவதில்
சொல்லேர் உழவர்
சாதனைகளை முறியடிக்கும்
சாதனையாளர்
மகேஷ்குமார் வருகிறார்
மாப்பிள்ளைபோல் வருகிறார்

தம்பி மகேஷ்குமார்
தங்கச்சி மடத்துக்காரர்
அண்ணாவின் தம்பி
எனக்கும் தம்பி–அவர்
இன்றைக்குத் தம்பி
எதிர்காலத்தில்
ஏதாவதொரு தொகுதியில்
நின்றால் எம்பி

அறிவுமுகம் அவர்முகம்
அவரை
அறிமுகம் செய்வதில்
ஆனந்த மடைகிறேன்

மகேஷ்குமார் வருக
மன்றத்தில் கவிபாடி
சபாஷ் பெருக…

( தமிழ்ப்புத்தாண்டு முதல்நாள்பற்றி மகேஷ்குமார் பாடுதல்)
///////////////////////////////////////////////////////////////////////////////////
(பாடிமுடித்தபின்)
/////////////////////////////////////////////////////////(மீண்டும் இளங்கோ)

ஆண்டை வருடமென்றோம்
திங்களை மாதமென்றோம்
கிழமையை வாரமென்றோம்
திங்களை வைத்துத்தான்
திங்களை முடிவுசெய்தான் தமிழன்

அம்மாவாசையையும் விடவில்லை ஆத்திகர்கள்
அழகாகச்சொன்னார்

அம்மாவின்மீது ஆசையை
யார்தான் விட்டார்?
ம.தி.மு.கத்தார்
மகேஷ்குமார் விட்டாரா?

தைமுதல்நாள்தான்
தமிழ்ப்புத்தாண்டின் முதல்நாள்
நெஞ்சில் தைக்கும்படி
கவிதையால் தைத்தார்

தம்பி மகேஷ்குமார்
எதிர்காலத்தில் இந்தியாவில்
எதாவதொரு தொகுதியில்
நின்றால் எம்பியென்றேன்

எதிர்காலம் எதற்கு
நிகழ்காலத்திலேயே
நிற்கிறேன் என்று
கவியரங்கில் நின்றார்
கவிதையாலும் நின்றார்

தம்பி
தமிழ்க்கவிதைத் தும்பி
கருத்துக்களை மேடையில்
எம்பி எம்பிப்பாடினார்
எம்பியானார் வாழ்த்துக்கள்

(அடுத்தவாரம் தொடரும்)

Series Navigation