அரசியல் விஞ்ஞானம் / மேடை

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

தாஜ்



குந்தியிருக்குமிடம் அப்படி
விலாங்கு மீன்களின் கனவில்
கிடைத்த வரவை
கொக்கிலிட்டு
ஏரி மிதப்பில்
கண் வைப்பார்கள்.
நீர்த் தடாகங்கள்
வற்றினாலும் ஜீவ
நதிகள் சங்கமிக்கும்
சமுத்திரக்கரை இருக்கிறது
வாவாயென்க.
சொடுக்கில் வீசி
அள்ளி வழிக்க
எப்பவும் அவர்களிடம்
முத்திரை வலைகளுண்டு.
பதனிட்டு
பக்குவப்படுத்தவோ
தொப்புல்கொடி
பிடித்துப் பயின்ற
குகைப்பாதைகள் பரிச்சயம்.
தவசில் பெற்ற
மக்களால் மக்களுக்காக
தத்துவம் பொய்க்காதவரை
கவலையேது அவர்களுக்கு!!


மேடை

இரவில் சூரியன் உதிக்கும்
பகலில் சந்திரன் காயும்
பூக்காத செடி பூக்கும்
காய்க்காத மரமும் காய்க்கும்
எட்டிகூட இனிக்கும்
மலடி மட்டுமல்ல
குடுகுடு கிழவியும்
பிரசவிப்பாள்.
கழுதைகளுக்கு தெரியவரும்
கற்பூர வாசனை
நரிகள் எல்லாமினி
நாய்களாகும்!

புல்லாங்குழலாய்
மயக்குகிறது
தூரத்தில் கேட்கிற ஊளை.
கூசும் ஒளி வெள்ளம்
இரவைப் பகலாக்க
மேடை போட்டாகிவிட்டது
பொருத்திருங்கள்
பொதுத்தேர்தல் வருகிறது.

******
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்