நிலவு “டால்பின்”

This entry is part of 35 in the series 20070301_Issue

யாழினி அத்தன்


காலை முதல் மாலை வரை
புன்முருவல் பூத்த
லேலாண்ட் லாரியாக
அலுவலகத்திலே…
மாலை முதல் இரவு வரை
சக குடும்பத்தினர்க்கு
இலவச கால் டாக்சியாக
வீட்டினிலே…
அரிதாரமில்லாமல் அரங்கேறும்
தினசரிக் கூத்தில்
மீதமான சக்கைகளையும்
பிழிந்தெடுத்த கவலைகளையும்
யாரிடமும் திணிக்க
திரனில்லாமல்
ஊரே கண்மூடி உறங்கியபின்
சத்தமில்லாமல்
கதவுகளை திறந்து
மொட்டை மாடிக்குப் போய்
காயாத கருங்கடலில்
வெள்ளி மீன்களின் நடுவே
உலவிவந்து
வெள்ளை டால்பினாக
முற்றத்தின் உச்சியிலே
வழி மேல் விழி வைத்து
எனக்காக காத்திருந்த
அவளிடம்
பேசினேன் வாய்திறக்காமல்
கேட்டேன் சத்தமில்லாமல்
பார்த்தேன் விழி இமைக்காமல்
ஆழப் பரிவர்த்தனையால்
சம்பவித்த மனக்குளியலில்
அழுக்கினை கரைத்துவிட்டு
பாரமிழந்து திரும்ப வந்து
போர்வைக்குள்ளே
புகுந்துகொண்டேன்
நள்ளிரவுக் காதலியின்
நாளை வருகையை
ஆவலோடு எதிர்நோக்கி!


p.d.ramesh@gmail.com

Series Navigation