புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு

This entry is part [part not set] of 37 in the series 20070208_Issue

ஜெய. சந்திரசேகரன்


சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்!
பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே
அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்டு கண்ணுறங்கு..!
அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே
அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்?

ஆண்: இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே
இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி
இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான்
இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்!

பெண்: உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு
உய்யாரமாயுலவ உயர்தர பிளைமூத்தூ!
உக்கார்ந்து சாப்பிடவே உயர்ந்த ரகம் நாக்காலி
உலகம் மறந்திடவே ஒரு சாண் சொகுசு மெத்தை

ஆண்: உண்மையை நானுரைச்சா, உன் தூக்கம் போகுமடி
உசுரிருந்தும் இல்லாதான் போல ஒரு வாழ்க்கையடி
உள்ள தள்ளும் உணவெல்லாம் உழைச்சு நான் பணிசெய்ய
உன்ன காண வாரையிலே, உன்னதப் பொன் சேர்த்திடவே..

பெண்: புள்ள பேரு வெக்கையிலே, சோறூட்டும் போதினிலே
அள்ளிக் கொஞ்ச வாராம அய்ய என்ன வேலையதோ
தெள்ளுதமிழ் பேசுதய்யா, மழலை மழை பெய்யுதய்யா
கொள்ளையழகு காணவாச்சும் எப்போநீ வாரீக?

ஆண்: காலையெது மாலையெது எக்கணமும் தெரியாம
வேலையொண்ணே வேதமென வேதனைகள் நான்மறந்து
லீலைசெய்யும் மாயமது கைநிறையக்காசிருந்தா
சோலையாகும் நம்வாழ்வு சொல்லிடுவேன் சத்தியமா

பெண்: காசுமட்டும் போதாது கடுதாசு நிதம் போடுமய்யா
காதல்மட்டும் மாராம கவலைகள் ஏறாம
கானலிலே கால் பரப்ப கனிவுடனே போனமாமன்
கணநொடியில் வந்திடுவான் கண்மணியே கண்ணுறங்கு

ஆண்: ஊர்பேச்சு கேக்காத, உடன்பிறந்தார் ஏசாத
உண்மையன்பு உள்ளமட்டும் உலகமது நம்ம கையில்
உயிர் உனையே உள்ளவெச்சு உமிழ்நீர் பருகிவர்றேன்
உடன் இருக்க ஓடிவர்றேன், பாப்பாகிட்டச் சொல்லிவெய்யி!


plasticschandra@gmail.com

Series Navigation

ஜெய. சந்திரசேகரன்

ஜெய. சந்திரசேகரன்