பெரியபுராணம்-121 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

பா.சத்தியமோகன்



3478.

திருவடியில் விழுந்து துதித்து

மிகுந்த பெரிய விருப்பத்துடன்

எதிரில் நின்று போற்றி எழுந்த தோழராகிய நம்பி
ஆரூரரைப் பார்த்து

“நீ உற்ற துன்பம் யாது என அருளியதும்

தொழுது தனது குறையை விளம்பினார்

:நானே தொடங்கிக் கொண்ட

குற்றத்தின் உட்பட்டு அழுத்தும் என்னை

அதிலிருந்து எடுத்து

உமக்கென என்னை ஆட்கொள்ள வேண்டும்.

(விளம்புதல் – சொல்லுதல்)

3479.

அடியேனாகிய நம்பி ஆரூரனுக்கு

அங்கு

திருவொற்றியூரில்

தாங்கள் அருள் செய்ததால்

கூரிய வேல் போன்ற கண் உடைய சங்கிலியாரை

திருமணம் செய்து அடைந்த தன்மையெல்லாம்

கொடி போன்ற இடை உடைய பரவையார்

தானே அறிந்துக் கொண்டார்

“என்னிடம் வந்தால் உயிர்விடுவேன்” எனத் துணிவுடன்
உள்ளாள்

நான் என்ன செய்வது !” எனச்சொல்லி —

3480.

“எம் நாயகனே

எம் இறைவனே

நான் தங்களுக்கு அடியவன் என்றால்

தாயினும் இனிய தோழர் நீவீர் என்றால்

அறிவும் இழந்து உள்ளம் உடைகின்ற

என் வருத்தமும்அயர்வும் கண்டு

இன்று இரவே

பரவையின் மாளிகை வரை சென்று

அவள் கொண்ட புலவியைத் தீர்த்துத் தாரும்” என
விண்ணப்பித்தார்.

3481.

அன்பு ஒன்றையே வேண்டிகொள்கிற தம் ஆன்மநாதர்

தம் அடியவரான சுந்தரர்

எதை வேண்டினாரோ அதையே தாமும் விரும்பினார்

விண்ணப்பம் செய்யும் நம்பி ஆரூரர் முகம் நோக்கி

“நீ உன் துன்பம் ஒழி!

உன் துன்பம் விடு

யாம் உனக்கோர் தூதனாகி

இப்போதே

பொன்னாலும் மணியாலும் ஆன அணிகளை அணிந்த

பரவையாரிடம் போகின்றோம்” என அருள் செய்தார்.

3482.

எல்லையிலாத களிப்பு அடைந்தார் சுந்தரர்.

இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து எழுந்து

இயன்ற தன்மைகள் எல்லாவற்றாலும் துதித்தார்

வாழ்வடைந்து நின்ற வன் தொண்டர்

“முல்லை அரும்பு போன்ற பற்களுடைய பரவையாரின்

மேகம் தவழ உயர்ந்துள்ள மாளிகைக்குச் செல்ல

இங்கு நில்லாமல்

விரைந்து போய் எழுந்தருளி

அவளது புலவியை நீக்குக”” எனத் தொழுதார்.

3483.

தேவர்கள் வாழ்வதற்காக

கருணை கொண்டு

ஆலகால நஞ்சினையே

அமுதம் என உண்டதனால் நீலகண்டர் ஆகியவரும்

நான்முகன் திருமால் ஆகிய இருவரும்

அறிவதற்கு அரிதானவரும் ஆன சிவபெருமான்

வண்டு வாழும் மலர்கள் சூடிய கூந்தலுடைய

பரவையாரின் மாளிகை நோக்கி

தொண்டரான நம்பி ஆரூரரின்

துன்பம் நீக்கப் புறப்படும்போது —

3484.

தேவாசிரியன் மண்டபவாயிலில்

தனது முறைக்காக காத்துக்கொண்டிருக்கும்

தேவர்கள் எல்லாரும் சேவித்தனர்

வணங்கிச் செல்பவர்களுள்

வேண்டியவர் மட்டுமே உள்ளே போக

மற்றவர்கள் அப்பால் போக

நீங்காத அணுக்கத் தொண்டில் உள்ளவர்களும்

சிவபூதகணநாதரும்

முதுமை அடையாத முனிவர்களும்

யோகிகளில் முதன்மையானவர்களும் முன்னால் செல்ல —

3485.

பக்கத்தில்

பெரியதேவரான நந்திதேவர் அணைந்து வர

அந்த முனிவர்களும்

பொருந்திய நட்புடைய குபேரன் முதலானவர்களும்

மகிழ்ந்து துதித்தனர்

தெருவும் வானமும்

செழுமையான பூமழையால் பொழிந்து நிரம்பியது

புறப்பட்டுச் சென்றார் அந்தப் புனிதவீதியில்

ஒப்பிலாத அன்பரான நம்பி ஆரூரர் அனுப்பிய தூதரான
இறைவர்.

3486.

“திருமாலும் நான்முகனும் காணாத

தாமரைமலர் போன்ற திருவடிகளை

தலைமீது தாங்கி வணங்க ஏற்ற காலம் இதுவாகும்”என

அவர்களை அழைத்தது போல

கடலில் விளைந்த நஞ்சு தங்கியதால்

இருண்ட தொண்டைப்பகுதியாகிய கண்டம் உடைய

இறைவரின் சிலம்புகள் ஒலிக்க

நீலமலர் போன்ற கண்களை உடைய

பரவையாரின் மாளிகையை நோக்கி

இறைவர் விரைந்து சென்றார்.

3487.

இறைவர் விரைந்து செல்ல

முன் சொன்ன வண்ணம் வருகின்ற

அவர்கள் பின் தொடர்ந்தார்.

ஒலித்து வரும் அலைகள் உடைய

கங்கைநீர் கொண்ட சடையில்

பாம்புகள் தொடர்ந்தன

அரிய இளம்பிறை அருகே

தேன் பொருந்திய கொன்றைமாலையில்

வண்டுகள் தொடர்ந்தன

உடன்

வேதங்கள் தொடர்ந்தன

இவற்றுடன் வன் தொண்டரது மனமும் தொடர்ந்தது.

3488.

அப்போது

பெரிய கடலைவிடவும்

மிக அதிகமாய் முழக்கம் செய்யும் மத யானையை
உரித்து

அத்தோலை அணிந்த

அப்பெருமானின் பக்கத்தில்

சூழ்ந்து வருபவர்

நெருக்கமாய் வரும் காட்சியானது

வீதியில் செல்லும் அழகரான இறைவர் மகிழ்கின்ற

அந்த –

செல்வத் திருவாரூரின் ஒரு தெருவிலே

சிவலோகம் முழுவதையுமே காட்டிவிட்டது.

3489.

உலகம் உய்வதற்காக எழுந்தருளும்

நம்பி ஆரூரரின் தூதரான இறைவர்

பரவையாரின்

அழகிய மணிகள் அணிந்த

திருமாளிகை வாசலில் சேர்ந்தார்

முன்பே

தம் பக்கம் சேர்ந்தார் எல்லாரும்

மாளிகையின் வெளியில் நின்றனர்

நீண்டநாளாய்

தம்மை வழிபடுகின்ற

ஒழுக்கம் உடைய

சிவவேதியர் கோலத்துடன்

தனியே சென்று சேர்ந்தார் சிவபெருமான்.

3490.

இறைவர் சென்று

அழகிய வாயில் கதவின் முன் நின்று

“பெண்ணே கதவைத் திறவாய்” என அழைக்க –

சுருண்ட கூந்தலுடைய

சற்றும் உறங்காமல்

விழித்து அயர்கின்ற பரவையார்

“என்னை ஆளும் இறைவருக்கான

பூசையை செய்யும்

முப்புரிநூல் அணிந்த மார்புடைய

முனிவர் அழைக்கிறார் போலும்” எனத் துணிந்து –

3491.

தன்னுடலில் பாதியாக

உமையை இடைய பரமரே அவர் என அறியாமல்

“பாதி சந்திரன் வாழும் சடை முடியுடைய இறைவருக்கு

பூசனையாகிய

பணி செய்யும் முனிவர்

பாதி இரவில்

இங்கு வந்த காரியம் ஏதோ”

என்று பயம் எய்தினார்

பாதி மதி போன்ற நெற்றியுடைய பரவையாரும்

பதட்டத்துடன் வாயிலைத் திறந்தார்.

3492.

நிலைத்த உரிமையுடைய வன் தொண்டர் சார்பாக

தூதராக வாசல் முன் நின்ற இறைவரைப் பார்த்து

பரவையார் துதித்தார்

பிறகு

“உலக உயிர்கள் அனைத்தும் உறங்கும் இரவுப்பொழுதில்

என்னை ஆளும் இறைவர்

இங்கு வந்து அருள்வதென்ன

மின்னும் நூல் அணிந்த மார்பரே

தாங்கள் இங்கு வரவேண்டிய காரணம் யாது” என்றார்
பரவையார்.

3493.

கங்கை நீர் தரித்த சடையுடைய இறைவர்

“பெண்ணே

நீ

மறுக்காமல் ஏற்பாயின்

நான் வந்த காரணத்தைச் சொல்வேன்” என்றார்

கயல் போன்ற விழியுடைய பரவையார்

“அதனை

இன்னதென்று அருளிச் செய்தால்

நான் இணங்குதல் சாத்தியம்” என்றார்.

3494.

“எதை எண்ணி வந்தது என

என்னிடம் கூறி அருளினால்

அதன் பிறகு என்னால் இயலுமெனில்

என்னால் ஆகும்”

என்று பரவையார் கூறினார்

இறைவர் கூறியது என்னவெனில் –

“மின்னல் போன்ற இடையுடைய பெண்ணே

நம்பி ஆரூரர் இங்கு வர வேண்டும்

அதுவே நான் நினைத்தது” என்று கூற

நல்ல நெற்றியுடைய பரவையாரும்

“மிகவும் நன்றாயிருக்கிறது நம் பெருமை ! ”
என்றார்

பிறகு –

3495.

“பங்குனித் திருவிழாவுக்காக

வழக்கம் போல் வருபவராகி

இங்கு

என்னை விட்டுப் பிரிந்து போனார்

திரு ஒற்றியூர் சென்றுவிட்டார்

அங்கே

சங்கிலியுடன்

தொடக்கு உண்டாகிய நிலையில்

அவருக்கு இங்கு வருவதற்கு

தொடர்பும் இருக்கிறதோ !”

நீங்கள்

இந்த நடு இரவில்

கங்குலில் வந்து

மேற்கொண்ட காரியம் மிகவும் அழகிது ! ”

என விமர்சித்தார் பரவையார்.

3496.

நாதராகிய சிவபெருமான் அதனைக்கேட்டு

“நங்கையே

உன்னிடம் நம்பி ஆரூரன் செய்த குற்றங்களை

மனதில் கொள்ளாதே;

அடைந்த கோபம் நீங்கி

துன்பம் நீக்குவதற்கல்லவா உன்னை நான் வேண்டியது !

ஆதலால்

நீ என் சொல்லை மறுத்தல் தகாது “என அருளிச்
செய்தார்.

3497.

அரிய மறை முனிவரான இறைவரை நோக்கி

பரவையார் கூறியதாவது ;

“எண்ணிய செயல் இதுவெனக் கொண்டு

இவ்வாசலில் தங்கள் வருகை

உமது பெருமைக்குத் தகுந்தது அல்ல

திருவொற்றியூரில்

நிலைத்த உறுதி பெற்ற

அவர் இங்கு வருவதற்கு சம்மதிக்க மாட்டேன்

நீங்களும் போகலாம்” என மறுத்துச் சொன்னார்.

3498.

இறைவராகிய நம்பர் அதனைக் கேட்டு

நகைப்பை உள்ளே கொண்டார்

தமக்குள் நகைப்பு தோன்றியது

தன் மெய்யான இயல்பை அவருக்குக் காட்டாமல்

ஒப்பிலாத பெரும் தோழரான

நம்பியின்

மனம் வெதும்பும் வேட்கையைக் காணும்

திருவிளையாட்டைக் காண விரும்பினார்

மணம் கமழும் கூந்தலுடைய பரவையார்

மறுத்துக் கூறியதை

ஏற்றுத் திரும்பினார்.

3499.

இறைவரைத் தூதராக அனுப்பிய பின்பு

இறைவர் எப்போது வருவார் என்றே பார்த்திருந்தார்

வன் தொண்டர் நம்பி ஆரூரர்!

அறிவிலாத நான்

என் தலைவரான நாதரை

பரவையாரின் புலவியைத் தீர்த்து வர

வணங்கி வேண்டினேன்” எனப் புலம்பினார்

“காதல் பெருகப்

பரவையாரை ஒத்துக் கொள்ளச் செய்த பிறகே

திரும்புவார்” என்ற கருத்தை

மனதில் கொண்டார்.

3500.

இங்கிருந்து

பரவையாரின் மனைக்குச் சென்ற இறைவர்

என்ன செய்தாரோ!

நாயகனாகிய இறைவரைக் கண்டபிறகும்

பரவையாரால் மறுக்க முடியுமா என்ன!

பொருந்திய என் வருத்தம் அறிந்து

புறப்பட்டுப் போன இறைவர்

சேயிழையான பரவையாரின்

சிறு கலகத்தைத் தீர்க்காமல்

திரும்பி வரமாட்டார்”

என்று நினைத்தார்.

3501.

துன்பம் எய்திய சுந்தரர்

தூதராகிச் சென்ற இறைவரை

எதிர்கொண்டு வரவேற்கச் செல்வார்

அங்கு

அவர் வரக்காணாமல் திரும்பி வருவார்

உள்ளம் வருந்தி மயங்கி நிற்பார்

அப்படியும் இப்படியுமாக அசைவார்

“நெற்றிக்கண் உடைய இறைவர்

தாமதித்துவிட்டார்” என மீண்டும் எழுவார்

காமன் எய்யும் அம்புகள்

மழைபோல் வீழ்ந்ததும்

ஒதுங்குவார்.

3502.

பரவையாரிடம்

நம்பியின் தூதராகிய தன்மையுடன் சென்ற

பாம்பு அணிந்த சடையுடைய இறைவர்

அங்கிருந்து மீண்டு

“தாம் இன்னார்” எனும் தன்மை அறியுமாறு உள்ள

கோலத்துடன் வந்து சேர்ந்தபோது

அந்த நள்ளிரவு

பேரொளியுடன் பகலாக மாறியது

நம்பிஆரூரர்

அவர் எதிரே எழுந்து

அணையை உடைத்தெழுந்த வெள்ளம்போல

மிக மகிழ்ச்சியுடன் சென்றார்

3503.

சென்றார்

தமது பிரானாகிய இறைவனைத் தாழ்ந்து வணங்கினார்

அவரது திருமுகம் முறுவல் செய்தது

பொருந்திய விளையாட்டை உணராத சுந்தரர் –

“புலவியை நீக்கிவிட்டு

இசைவு பெற்றுவிட்டார்” என நினைத்து-

“தாங்கள் அன்று என்னை

ஆளாகக் கொண்டு அருளிய செயலுக்குச் சமமாக

“இவளது

புலவியைத்தீர்த்து -=

அருள்செய்தீர்” என்று கூறினார்

3504.

அத்தகைய சொற்களை நம்பிஆருரர் கூறியதும்

இறைவர் அருளிச்சொன்னதாவது:-

“ நம்மை நீ வேண்டியபடியே

நாம்போய்

பரவையின் இல்லம் சேர்ந்தோம்

பெருத்து எழுந்த

விருப்பம்தரும் கொங்கைகளையுடைய அவளுக்கு

உன் திறங்களை எடுத்துச்சொன்னேன்

ஏற்கவில்லை

விரும்பும் சொற்களைக் கூறி

நாமே வேண்டிக்கொண்டும்

அவள் மறுத்துவிட்டாள்” என்றார்

3505.

இவ்விதமாக

அண்ணலாராகிய சிவபெருமான்

அருளிச்செய்ததைக் கேட்ட நம்பிஆருரர்

“துண்” என நடுக்கம் அடைந்தார்

தொழுதார் –

“தாங்கள் அருளிச்செய்த தன்மையை

உன் அடியவளான பரவையோ மறுத்தாள்!

நாங்கள்

அடிமைத்திறத்தில் வைத்து எண்ணுவதற்கு

உரிமையுடையவர்கள் அல்ல” என்பதை

இன்று அறிய வைத்தீர்

என்று கூறினார்

3506.

தேவர்கள் உயிர் பிழைக்கவேண்டி

கடலில் உண்டான நஞ்சை உண்டீர்

அசுரர்களின் முப்புரங்களும் எரிந்து போகச்செய்து

அவற்றுள் இருந்த

அடியவரான மூவரைமட்டும்

வேகாமல் காப்பாற்றி ஆட்கொண்டீர்

நான்மறை வல்ல மார்க்கண்டேயரைக் காப்பாற்ற

கூற்றுவனாகிய எமனை உதைத்தீர்

இத்தனை கருணையாளனாகிய உமக்கு

நான்

மிகை என்று நினைத்து விட்டதால்

வீணாகத் திரும்பி வராமல்

வேறு என்ன செய்வீர் !

3507.

“நீவீர் தகுந்ததைத்தான் செய்தீர்

இன்று எனது அடிமைத்திறத்தை

நீவீர் விரும்பாவிட்டால்

பாவியேனை அன்று

திருவென்ணெய்நல்லூரில் ஆட்கொண்டது எதற்காக?

என் வருத்தத்தையும் கண்டுள்ளீர்

துவளும் இடையுடைய பரவையிடத்தில்

இன்றே நான்போய்ச் சேரும்படி

செய்யாமல் போனால்

என் உயிர் நீங்கும்” என்று இறைவரது

திருவடியில் விழுந்தார்

3508.

வினைப்பயனை எல்லாம்

அந்தந்த உயிர்களிடம் சேர்க்கும் இறைவர்
சிவபெருமான்

பொறுக்க இயலாமல் தளர்ச்சியால்

தமது அடியில் விழுந்த சுந்தரரை

அருளால் நோக்கினார்

“நாம்

மீண்டும் தூதுபோய்

கொம்பு போன்ற அந்தப் பெண்ணை

நீ இப்போதே அடையுமாறு சொல்வோம்

உன்னை வருத்தும் துன்பத்தினை நீக்குக” என்று
உரைத்தார்.

— இறையருளால் தொடரும்


Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்