விறைத்துப்போன மௌனங்கள்

This entry is part of 43 in the series 20070104_Issue

சாமிசுரேஸ்


சுவிஸ்
விழுமியச் சின்னங்களின்
மூடிய சுகங்கள்
மொழிப்பிறழ்வின் அசைவினு}டே
மிதமாய்ச் சிதையும்

உடைந்த காலத்தின்
கீறியெறியப்பட்ட சுவடுகளை
முதுகுவரிகளின்
பள்ளத்தாக்குகளில் செருகியபடி
இடுக்கண் நகரும்

நடைமுறைகளின்போது
சில நம்பிக்கைகள்
சாத்தியத்திற்காக துடித்துக்கொண்டிருக்கும்

இக்கணங்களில்
விழிமூடி
ஆழ்பார்வையின்
மனவெளியில் நிரம்பினேன்

பதியம்போட்டு வைத்திருந்த
உன் பார்வைகள்
என் உடல் முழுதும் முளைவிடத்தொடங்கியது

அது
சுகமான கனவசைவுகளை
அணுக்களில் திணித்து
விசையுடைத்தோடிய பொழுது

நீ
என்னசெய்துகொண்டிருப்பாய்

என் பார்வைகளை
நீ என்ன செய்தாய்

இன்னும்
ஆழகாய் வைத்திருக்கிறாயா
அல்லது
அவையும் அழிந்து போயிற்றா
என் கிராமத்து
ஒற்றையடிப்பாதையின்மேல் வரைந்திருந்த
அறுகம்புற்கள்போல்
மீண்டும் மௌனமாகிறேன்

மொழியின்
உள் நிகழ்வுகளை மறந்து
மௌனங்களால்
விதைக்கப்பட்டவள் நீ

காயமாகிப்போன நெருடல்களுடன்
கேள்விகளைப் புதைத்துக்கொண்டு
வலி நகர்த்தும் மனிதன் நான்

காலமுகச்சிறகுகள்
யதார்த்தச்சுமைகளை வெளித்தள்ளி
விஷப்பூவாய் உருமாறுகிறது

நீயோ
பருவவேஷங்களில்
உன் உணர்வுகளைத் திணித்து
திசைக்கொன்றாய் தொங்கிக்கொண்டிருக்க

நான் இன்னும்
அரைகுறை ஆன்மாவால்
ஆழப்பட்டுக்கொண்டிருக்கிறேன்


-29.12.2006

sasa59@bluewin.ch

சாமிசுரேஸ், சுவிஸ்

Series Navigation