பெரியபுராணம் – 118 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

பா.சத்தியமோகன்


3385.

இவ்விதமாக

அண்ணலார் சிவபெருமான் முன்நின்றார்

அவர் அறியுமாறு பலவும் உணர்த்தி வெளியே வந்தார்

“இறைவா

என் எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையே ஆகும்

அவள் என் நெஞ்சத்து திண்ணம் எல்லாம் உடைத்துவிட்டாள்

என்ன செய்வதென ஒன்றும் அறியாதவன் நான்

பிறைக் குளிர்ச்சந்திரன் விளங்கும் பவளச் சடையீரே

அருள்வீரே”

என எண்ணினார்

தளர்ந்தார்.

(திண்ணம்- உறுதி)

3386.

சந்திரன் ஒளி வீசும் சடையுடைய

சிவபெருமானின் கோயிலின் வெளியே

ஒரு பாகத்தில்

நம்பி ஆரூரர் இருந்தார்

கதிரவன்

மேற்குக் கடலினைச் சேர்கிற

மாலைநேரக் கடலைக் கண்டு அயர்ந்தார்

முதிராத

இளம் கொங்கையுடைய சங்கிலியாரை

மணம் புரிய விரும்பி

சங்க நிதியும் பதுமநிதியும் உடைய

குபேரனின் நண்பரான சிவபெருமான்

நட்பினால் தமக்கும் அருள் செய்வார் என

நினைத்து நினைத்து மனம் வருந்த –

3387.

தேவர்கள் உய்வதற்காகவும் உலகம் உய்வதற்காகவும்

ஒளியுடைய கடல் வெளிப்படுத்திய

விஷம் உண்ட பெருமானாகிய சிவபெருமான்

தாமே ஆட்கொண்ட நம்பி ஆரூரரிடம் சென்றார்

“இவ்வுலகில்

எந்தத் தன்மையுடைவரும் அடைய முடியாத

பெரும் தவத்தின் கொம்பு போன்ற சங்கிலியாரை

உனக்குத் தருகின்றோம்.

கொண்ட கவலை ஒழி” என்றார் சிவபெருமான்.

3388.

“முன்நாளில்

திருவெண்ணெய்நல்லூரில்

என்னை வலிய ஆட்கொண்டு அருளிய நீவீரே வந்தீர்

என் உயிர் காப்பதற்காக

ஒன்றும் அறியா நாயேனுக்கு

இவளை மணம் புரிவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டீர்”

என செம்மலரடியின் கீழ் வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர்.

3389.

ஆண்டு கொண்ட அந்தணரான இறைவர்

சுந்தரருக்கு கருணையினால் அருளினார்

நீண்ட இரவுப்பொழுதில் புறப்பட்டு

வானின் நிறைமதி தீண்டுமளவு உயர்ந்திருக்கும்

கன்னிமாடம் சென்று

தூண்டப்பட்ட சோதி விளக்கு போன்ற

சங்கிலி அம்மையார் கனவில் தோன்றினார் சிவபெருமான்.

3390.

சங்கிலி அம்மையாரின் கனவில் இறைவர் தோன்றியதும்

அவர் தொழுது விழுந்தார்

பரவசமானார்

அன்பு வெள்ளமாகிப் பொழிந்தார் எழுந்தார்

“அடியேன் உய்யும் பொருட்டு

எழுந்தருளிய இந்தப்பேறுக்கு

நான் என்ன செய்வேன்” எனத்துதித்தார்

பெரிய கருணை பொழிந்தது போல

திருநீற்றுக் கோலம் கொண்டு

வேதியராகித் தோன்றியசிவபெருமானும்

நேரே நின்று கூறியதாவது:-

3391.

“சேரும் பெருந்தவமுடைய சங்கிலியே கேள்

மிக மிக அன்புடையவன்

மேருமலையை விட மேம்பட்ட தவமுடையவன்

வெண்ணெய்நல்லூரில் எல்லாரும் அறியும்படி

என்னால் ஆளப்பட்ட உரிமையுடையவன்

உன்னைத் தனக்கு வேண்டுமென இரந்தான்

கச்சணிந்த முலையாய்

நீ அவனை

மணம் புரிந்து மகிழ்க” என்றார்.

3392.

ஆதிதேவரான சிவபெருமான்

முன்னே நின்று அருளிய தருணத்தில்

மாதரார் சங்கிலியார்

திருமாலும் நான்முகனும் அறிவதற்கு அரிதான

இறைவனின் குளிர் தாமரைமலர் பாதத்தில் சேர்ந்தார்

வீழ்ந்தார்

நேராக நின்று

வேத முதல்வர் முன்பு நடுக்கம் எய்தியபடியே

வணங்கிச் சொன்னதாவது:-

3393.

“எம் பெருமானே

தேவர்களின் தலைவனே

தாங்கள் அருளிச் செய்தவர்க்கே நான் உரிமை ஆவேன்

தங்கள் அருள் ஆணையைத் தலை மீது கொண்டேன்

தக்க விதி மணத்தின்படி

நம்பி ஆரூரர்க்கு

என்னைத் தந்தருளும்போது

இமயத்தின் மகளான உமையை

ஒருபாகம் கொண்ட தங்களுக்கு

சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது”

3394.

குறையாத விளக்கைப் போன்ற சங்கிலியார்

புரிசடை பின்னல் கொண்ட இறைவர் முன்

நாணத்துடன் வணங்கி

மேலும் கூறியது என்னவெனில்

‘எம்பிராட்டியின் திருமுலை தோய்ந்த

மின்னும் வெண்புரிநூல் அணிந்த மார்புடையவரே–

நிலையான திருவாரூரில்

அவர் மகிழ்ந்து உறைவர் எனும் தன்மையை அறிந்து

கூறி அருளவேண்டும்”

(உறைவார்- தங்குவார்)

3395.

திருவொற்றியூரில் அமர்ந்த சிவபெருமான்

சங்கிலியாரின் சொற்களை ஏற்றுக்கொண்டார்

வன்தொண்டரான சுந்தரரின்

உள்ள நிலைமை ஏற்றார்

பிறகு –

“பொன் வளையல் அணிந்தவளே

உனை விட்டுப் போகாமல் இருக்க

பிரியாமல் இருக்க

அந்தரங்கமாய் ஒரு சபதம்

அவன் செய்வான்” என அருள் செய்தார்

3396.

மூங்கில் போன்ற தோளுடைய சங்கிலியாரிடமிருந்து புறப்பட்டு

தூயமணம் மகிழும் தோழனார் சுந்தரரிடம் வந்து சேர்ந்தார்

“நீ

அவளை மணம் கொள்ளும் நிலை உரைத்தோம்

அதற்கு

அவளிடம் உன்னால் தீர வேண்டிய குறை ஒன்று இருக்கிறது”

என அருள் செய்ததும் –

3397.

வன் தொண்டர் மனம் களித்தார்

வணங்கினார்

“அடியேன் செய்ய வேண்டியது யாது” என்றார்

“இன்றிரவே நீ சென்று

பிரியாமல்

அவளுடன் ஒன்றித் தங்கி வாழ்வதாக

மணம் புரிவதற்கு முன்பே ஒரு சபதம் செய்க”

என அருள் செய்தார் இறைவர்.

3398.

“மின் ஒளி தங்கும் சடையுடையவரே

எதைச் செய்தால் இத்திருமணம் முடியுமோ

அதனை நான் செய்வேன்

அதற்குத்

தங்கள் அருள் வேண்டும்” என்றார்

முன்னால் தோன்றும் புன்முறுவலுடன்

முதல்வரான இறைவர்

அவர் முகம் நோக்கி

“உன் செய்கை நீ முடிக்க என்ன வேண்டும் ?”

என உரைத்து அருளினார்

3399.

“நம்பரான இறைவர்

பிறபதிகளிலும்

விரும்பி எழுந்தருளிய திருக்கோலங்களை

அங்கங்கு சென்று கும்பிடுவதே கடனாகக் கொண்ட எனக்கு

இது தடையாகும்” என மனதில் ஒரு குறிப்பினால் நினைத்தபின்

இறைவரிடம்

தனது பெருமானாகிய இறைவனின் திரு உருவம் முன்பு

தனது குறையைக்கூறி இரந்தார் –

கச்சை அணிந்த மென்முலை சங்கிலியாரிடம்

தன் மனம் கொடுத்த வன் தொண்டர்

3400.

சங்கரரான சிவபெருமான் திருவடி வணங்கி

தமிழ்வேந்தர் சுந்தரர் வணங்கி இவ்வாறு மொழிகின்றார் :-

“மங்கையாகிய சங்கிலியைப் பிரியாமல் இருக்க

சபத்தைச் செய்ய

அங்கு

உமது திருமுன்பு நான் வரும்போது

அப்போது

தாங்கள் கோயில் விட்டு நீங்கி

மகிழமரத்தின் கீழ் இருந்து கொள்ள வேண்டும்”.

3401.

தம்பிரான் தோழரான சிவபெருமானை

இவ்விதமாக வேண்டி அருளியதும்

தேவர்கள் தலைவரான சிவபெருமான் உடன்பட்டார்

“நம்பி!

நீ சொன்னபடி நாம் செய்வோம்” என அருளினார்

“எம்பிரானே

எனக்கு இனி அரிய செயல் ஏதுமில்லை” எனத் துதித்தார் சுந்தரர்.

3402.

சுந்தரர் தலை மீது அஞ்சலியாக

கைகளைக் குவித்து வணங்கி விடை பெற்றார்

அருள் பெற்றார்

சிவந்த சடையுடைய இறைவர்

சுந்தரர் மீது திருவியாடலை எண்ணியோ

வஞ்சிக்கொடி போன்ற இடை உடைய சங்கிலியாரின்

அடிமைப் பெருமையை எண்ணியோ என்னவோ

செறிந்த இருளில்

இறைவர் மீண்டும் உறுதி கூற சங்கிலியாரிடம் வந்தார்.

3403.

சங்கிலியாரிடம்

முன்பு போல கனவில் தோன்றி அருளி

“நங்கையே

நம்பி ஆரூரர் உனக்கு

விருப்புடன் நயந்து சபதம் செய்வான்

ஆனால்

அங்கு கோயிலில்

நம் எதிரில் சபதம் செய்வதற்கு உடன்படாதே! இசையாதே!

மணம் பரவும்

மகிழ மரத்தின் கீழ்

அச்சபதம் செய்ய ஏற்றுக்கொள்க”என

குறிப்பால் அருள் செய்தார்.

3404.

அதைக் கேட்ட சங்கிலியார் கைகுவித்தார்

“மாலுக்கும் அயனுக்கும் அரியவரே

உண்மையான அந்தரங்கத்தை எனக்கு அருள் செய்தீர்

அடியேன் ஏற்றேன்” என்று கண்கள்

தாரையாய் நீர் பொழிந்து வழிந்தன

வெற்றியுடைய காளை வாகனமுள்ள இறைவரின்

செம்மையான திருவடியில் வீழ்ந்து எழுந்தார் சங்கிலியார்

3405.

தையலாரான சங்கிலியாருக்கு

ஜடாமகுடராகிய சிவபெருமான்

அருள் செய்து மறைந்ததும்

அதிசய மனநிலையால் உணர்ந்து

துயில் கலைந்தார்

சிவந்த சடையுடைய இறைவரின் அருளை நினைத்ததும்

உறக்கமே வரவில்லை

ஐயமுடன்

அருகில் உறங்கும் தோழியிடம் சென்று

அவர்களை எழுப்பினார்

(தையல்- பெண்)

3406.

உறக்கம்விட்டு எழுந்த தோழியரிடம்

“நீங்கல்” என்ற எழுத்தை எழுதி

எழுத்தறியும் பெருமானாகிய இறைவன்

தமது கனவில்

இருமுறை எழுந்தருளியதை

முறைப்படி சங்கிலியார் மொழிந்தார்.

பயத்துடன் அதிசயமும்

அதைத் தாங்கும் மகிழ்ச்சியும் அடைந்து

வணங்கினார்கள் தோழியர்

3407.

இறைவருக்காக

திருப்பள்ளி எழுச்சி மலர்தொடுக்கின்ற

தூய பணிக்குரிய நேரம் ஆகிவிட்டதால் –

சங்கிலியார்

தம்முடன் தொழில் புரியும் தோழியருடன் சென்றார்

“இறைவரின் ஆணையால் ஆன

சபதத்தைச் செய்ய இதுதான் சமயம்” என

சங்கிலியார் வரவை எதிர்நோக்கி

அங்கே

வந்து சேர்ந்திருந்தார் நம்பி ஆரூரர்.

3408.

நின்றிருந்த சுந்தரர்

அங்கு எதிர்வந்த சங்கிலியாரின் பக்கம் அடைந்து

தமது இறைவரின் திருவருள் குறித்துக் கூறியதும்

மின் போல் துவளும் இடை உடைய சங்கிலியார்

தம் உடன்பாட்டை

தன்னுடன் ஒன்றிய நாணத்தால் கூறவில்லை

நாணமுடன்

தோழியர்களுடன்

கோயிலுள் ஒதுங்கி உள்ளே புகுந்தார்.

3409.

அங்கு

சங்கிலியாருடன் பின்னாலேயே சென்ற ஆரூரர்

“ஆயிழையீர் !

இவ்வூரிலிருந்து நான் பிரிந்து போகமாட்டேன்

உன் கருத்தின்படி

இதனை

சபதமாகவே உரைத்துச் சொல்ல

திங்கள் முடியாராகிய சிவபெருமான் முன்

பிறைசூடியாராகிய இறைவரின் திருமுன்பு

வருவீராக”:

எனக் கேட்டுக்கொண்டார் உரைத்தார்

சங்கிலியாரின் கனவை

முன்பு அவர் சொன்னதால் கேட்டிருந்த

அறிந்திருந்த தோழியர் கூறியதாவது : –

3410.

“எம்பிரானே

இதற்காக

தாங்கள்

தேவர்தலைவரான

இறைவரின் திரு உரு முன்பு

சபதம் செய்வது தகாது” என்றனர்

நம் தலைவரான வன் தொண்டர் நம்பி ஆரூரரோ –

இறைவரின் திரு உள்ளத்தை அறியாமல்

“கொம்பை போன்றவரே!

நான் எங்குதான் சபதம் செய்வது” எனக்கூற —

3411.

அதற்கு

அம்மங்கையர்

“மகிழ மரத்தின் கீழ்ச் செய்வதே பொருந்தும்” என உரைத்தனர்

ஆரூரர் மனம் மருட்சி அடைந்தது

“இவர்கள் சொன்னதைச் செய்ய மறுத்தால்

பழி ஆகவும் கூடும்

உடன்படலே பொருந்தும்” எனத் துணிந்தார்

“அப்படி எனில் போகலாம் வாருங்கள்” என

அவர்கள் முன்னால் போக

தாமும் சென்று சேர்ந்தார் சுந்தரர்

மகிழமரத்தின் கீழ்.

3412.

கேடில்லாத பெரும்தவம் உடைய சங்கிலியார் முன்

என்றும் அழியாத மகிழமரத்தினை

மூன்றுமுறை வலம் வந்தார்

“ இங்கேயே பொருந்தியிருப்பேன்

எங்கும் நீங்கிச் செல்லமாட்டேன்” என்று

சபதம் எடுத்தார்

திருமுனைப்பாடி நாட்டின் புரவலர் சுந்தரர்

3413.

பொருந்திய சிறப்புடைய ஆருரர்

உண்மையான சபதமாகிய வினை நிறைவேற்றியதும்

நீலமலர் போன்ற விழியுடைய சங்கிலியார்

அதனைக்கண்டு

மிகவும் மனம் கலங்கிவிட்டார்

“இறைவர் அருளியதால்

பாவியேன் இதனைக்கண்டேன்” என்று

ஆவி சோர்ந்து

உள்ளம் வருந்தினார்

பிறகு

அங்கேயே ஒருபக்கமாக அயர்ந்து விட்டார்

3414.

திருநாவலூராளியான சுந்தரர்

தமது சபதச்செயல் முடித்தார்

பிறகு

போர் செய்யும் யானைத்தோல் அணிந்த இறைவரின்

கோவிலுள் புகுந்தார்

வணங்கினார்

“ நாள்தோறும் அருள் தருகிறவரே

தங்கள் செயல் அழகியது” என

இறைவரது உயர்ந்த பெயரான திருஐந்தெழுத்தை ஓதி

பெரு மகிழ்வுடன் வெளியில் வந்தார்

( திருஐந்தெழுத்து –
சிவாயநம)

3415.

கச்சை அணிந்த

அழகிய முலை உடைய சங்கிலியார்

வன்தொண்டரான நம்பிஆரூரர் போன பின்

மாலைகள் கட்டும் இடமான

பூ மண்டபம் அடைந்தார்

தனது பணி முடித்தார்

பிறகு

மேகம் போன்ற

அழகிய கழுத்துடைய இறைவரின் அருட்செயலை

கருத்தில் கொண்டு வணங்கினார்

இருள் நீங்கி விடியும்போது

அழகிய கன்னிமாடம் புகுந்தார்.

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்