“தமிழுக்கும் தமிழென்று பேர்.”

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

ருத்ரா (இ.பரமசிவன்)



(1)
இது என்ன வேடிக்கையான
தலைப்பு!
வேடிக்கையான தலைப்பு
மட்டும் அல்ல
வேதனையான தலைப்பும் கூட.
நம் தமிழே நமக்கு
அந்நியமாகிப்போன அவலங்களை
அந்த கவியரசன் பாரதிதாசன்
இன்று இருந்தால்
மனம் வெதும்பி
இப்படித்தான்
பாடியிருப்பான்:
“தமிழுக்கும் தமிழ் என்றே
தான் பேர்!”

(2
)தமிழா!
விழித்துக்கொள்.
உன் மூன்று தமிழைக்காக்க
நான்காவது தமிழும்
தேவைப்படுகிறது இப்போது!
அதுவே இந்த
“ஆட்சித்தமிழ்”
“ஆச்சி”த்தமிளெல்லாம்
எதற்கு எங்க
“அம்மா”த்தமிள்
இருக்கும்போது என்று
சிலர் கொடி பிடித்தபோதும்
ஓங்கி உலகளந்த
செம்மொழியல்லவா
நம் தமிழ்மொழி!
தமிழா!
மொஹஞ்சதாரோ-ஹரப்பாவை
தோண்டிப்பார்த்தபோதும்
அந்த கல்லில்
உறைந்து கிடப்பது
தமிழின் ரத்தம்
என்கின்றனர்
அகழ்வியல் வல்லுநர்கள்.
இப்படி
கல் தோன்றி மண்தோன்றா
காலத்தும்
முந்திப்பிறந்தவனை
கிண்டல் செய்யும்
கைபர்க்கணவாய்க்கனவான்கள்
சொல்வது என்ன தெரியுமா?
இந்த பிரபஞ்சத்துக்கும்
அதைப்படைத்தவனுக்கும்
முன்னேயே இருப்பது தான்
இந்த வேதமொழி
என்கிறார்கள்.
சூன்யத்தில் ரங்கோலிகள்
வரையும் இந்த
சூதுகளையெல்லாம்
எப்போது நீ புரிந்து
கொள்ளப்போகிறாய்?

(3)
(தமிழா!
பல்லாயிரத்தாண்டுக்கும்
முன்பே
நாகரிகத்திற்கு பாயிரம்
பாடியவன் நீ!
மொழியெனும் மானிடப்
பண்பிற்கு
ஒளியினைத் தந்தவன் நீ!
இன்றோ
மூக்கிலும்
அடிவயிற்றிலும்
இரைச்சல் கிளப்பும்
அயல் மொழிகளில் அல்லவா
அமிழ்ந்து கிடக்கிறாய்.
உன் உறக்கத்தினை
உலுக்க வந்தது
இந்த ஆட்சித்தமிழ்.
காதலும் வீரமும்
இன்று கடைச்சரக்காகி
மக்களுக்கு வெறுமே
“இனிமா” கொடுக்கும்
சினிமக் கலக்கல்களில்
அல்லவா
சிதைந்து கிடக்கிறது நம்
சித்திரத்தமிழ்.
“கல் பொரு சிறு நுரை”….
“அணிலாடு முன்றில்”…..
“அற்றைத்திங்கள்
அவ்வெண்ணிலவில்”….
“எழுதரு மதியம்
கடற்கண்டாங்கு
ஓங்கு வெள்ளருவி…..”
“மதிமலி புரிசை
நான்மாடக்கூடல்”….
“முளிதயிர் பிசைந்த
மென்காந்தள் விரல்”….
“பொன் தூண்டில் மீன்
விழுங்கியற்று”….
“கானமுயல் எய்த அம்பினில்
யானை
பிழைத்தவேல் ஏந்தல்
இனிது”…..
“….புதல் மறைத்து வேட்டுவன்
புள் சிமிழ்த்தற்று..”……
“நாளென ஒன்றுபோல் காட்டி
உயிர்ஈரும்
வாளது உணர்வார்பெறின்”…..
“யாதும் ஊரே!யாவரும் கேளிர்!
தீதும் நன்றும் பிறர்தர
வாரா
நோதலும் தணிதலும்
அவற்றோரன்ன”……
அப்பப்ப ! இப்படி
ஆயிரம் ஆயிரமாய்
மின்னல் வரிகள் தந்தவன் நீ!
உன் முகவரிகள் தொலைந்து
போவதா?
இப்போதாவது
உன் விழிகள் மீது
கிடக்கும்
உத்திரங்களை
உருட்டித்தள்ளு.
அந்த
திரைமூட்டங்களை
தரை மட்டமாக்கு.

(4)
நீ தூங்கிகொண்டேயிரு என்று
உனக்கு
பாயும் தலையணைகளுமாய்
இவர்கள் பாஷ்யங்களை
பாடலாம்.
“பால் நினைந்தூட்டும்
தாயினும்
சாலப்பரிந்து ஊட்டும்”
இந்த
தமிழ்த்தாயிடமிருந்து
உன்னைப்பிரிக்க
இந்த மந்திர வாதிகள்
புகட்டும் ஸ்லோகங்களின்
சோம பானத்தை பருகியது
போதும்.
தமிழா விழித்துக்கொள்.
அழகான தமிழில்
நீ “தாயுமானவன்” என்கிறாய்.
அவர்களோ அது பொறுக்காமல்
“மாத்ரு பூதம்” என்று
உன்னை
பயங்காட்டுகிறார்கள்.
ஆட்சி செய்யும்
செங்கோலினைப்பிடித்த
அரசர்களையே
பிடித்துக்கொண்ட
அயல்மொழிக்கூட்டம்
நம் தமிழுக்கு செய்த
கொடுமைகள்
சொல்லில் அடங்காது.
வேறு சான்றுகள் எதுவும்
வேண்டாம்.
இதோ
நம் “தமிழ்ப்புத்தாண்டு”
படுகின்ற பாட்டை பார்.
தமிழ் “வருஷம்” பிறந்தது
என்று
சமஸ்கிருதத்தில்
“அர்ச்சனை”
பண்ணிக்கொண்டிருக்கும்
தமிழனே!
அந்த அறுபது “வருஷங்களை”
ஒவ்வொன்றாய் சொல்லிப்பார்.
இதில் ஏதாவது ஒன்று
உனக்கு புரிகிறதா?
உன் வாயில் நுழையாத அவற்றை
உன் செவியில் மட்டும்
நுழைய இடம் கொடுத்தாய்.
நீ ஒன்றும்
புரிந்துகொள்ளவேண்டாம்
என்று அவர்கள்
அந்த “மறைக்காட்டில்”
உன்னை நாடு கடத்தினார்கள்.
அதனால்
நாடு அவர்களுக்கு போனது.
காடு உனக்கு வந்தது.
அறியாமை எனும் அந்த
சாக்காட்டில்
சாதிகள் எனும் அந்த
பேய்க்காட்டில்
நீ புதைந்து போனாய்.
ஆட்சிப்பெட்டகத்தை
கொள்ளயடித்து விட்டு
சாவியை மட்டும்
விட்டுசென்றார்கள்.
ஏனெனில் அது சாவி என்று
உனக்கு தெரியாததால்.
அந்த ஊமை மொழிச்சாவி கூட
உன்னைக் கோவில்களில்
பூட்டி சிறைவைத்ததை
இன்னும் நீ புரிந்து
கொள்ளவில்லையே.
அந்த “சுக்லாம்பரதரங்கள்…”
உன்னை சுக்கு
நூறாக்கிக்கொண்டிருப்பதை
இன்னும் நீ புரிந்து
கொள்ளவில்லையே.
அதை புரியவைக்க வந்ததே
இந்த ஆட்சித்தமிழ்!

(5)
இன்னும் ஆலயத்தமிழே
முழுமையாய் அரங்கேறவில்லை.
இந்த ஆட்சித்தமிழ்
என்ன செய்யும்?
ஆட்சியின் குடுமி
ஆலயத்தில் இருக்கிறது
அரசர்கள் எல்லாம்
“பல்யாக சாலை
முதுகுடுமிப்பெருவழுதிகள் தானே”
என்ற எகத்தாளம்
அவர்களிடம்
கொப்பளிக்கிறது.
ஆட்சிகளின் காட்சிகள்
மாறவேண்டுமென்றால்
தமிழா! நீ விழித்துக்கொள்.
அந்த மாற்றத்தை
அரங்கேற்ற வந்ததே
இந்த ஆட்சித்தமிழ்.

(6)
கலைஞர்களுக்கு பெயர்கள்
இருக்கலாம்.
“கலைஞரே”
பெயராக இருக்கும்
ஒரு கலைஞர் தந்த
உயிர்மூச்சே
இந்த ஆட்சித்தமிழ்.
தமிழில் பெயர்கள்
இருக்கலாம்.
தமிழே
பெயர் தாங்கி வந்தவரின்
தங்கக்கனவே
இந்த ஆட்சித்தமிழ்.

(7)
ஆவணக் காப்பகம்
என்பதை
எப்படி அவர்கள் புரிந்து
கொண்டார்கள்
என்பது
இப்போது தான் புரிந்தது.
ஆம். அது
கண்ணகி எனும்
சிலப்பதிகாரத்துக்கு
காப்பு பூட்டவந்த
ஆவணக்”காப்பகம்” என்று
இப்போது தான் புரிந்தது.
ஆவணங்கள் எல்லாம் சிலரின்
ஆணவங்களால்
இடம் மாறி தமிழனின்
தடம் மாறிப் போய்விடுமோ
என்ற
அச்சங்களை
அகற்ற வந்ததே
இந்த ஆட்சித்தமிழ்!
உன் செங்கோலை
உன்னிடமே தந்து
உன்னையே நீ
ஆட்சிசெய்
என்று உனக்கு தந்ததே
இந்த ஆட்சித்தமிழ்.

(8)
மனதுகள் நெருங்காதபோது
மனுக்கள் மணுக்கணக்கில்
குவிந்தன.
கௌடில்யனின் மனுதர்மம்
தான்
மனுக்களில்
விரவிக்கிடக்கும்.
ரகசியமான அந்த நான்கு
வர்ணப் பூச்சு
புரிந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்.
இந்த வர்ணக்காட்டிலும்
நம் மூவர்ணத்தில்
இந்த தமிழனுக்கு
தெரிந்ததெல்லாம்
தன் ரத்தத்தின் சிவப்பு
மட்டுமே.
தாய் நாடு காக்கும்
இவன் வீரமும் தியாகமும்
வேறு வர்ணங்களுக்கு
விலை போனதில்லை.
நாட்டைக்காக்க
நடுக்கம் கொள்ளாத தமிழனே!
இந்த
“சூ மந்திரக்காளிகளிடம்” நீ
சுருண்டு போவதோ?
சூழ்ச்சி நரிகளை
பரிகளாக்கி
“குதிரை வியாபாரம்”
செய்யும்
அரசியல் வக்கிரங்களூக்கு
அளவே இல்லை.
“ஆரியப்படை கடந்த
பாண்டியர்கள்” கூட தன்
காரியங்கள் “சாதி”க்க
எல்லாவற்றையும்
தாண்டியவர்களாய்
தடுமாறிப்போனார்கள்.
புது யுகத்தின்
எழுச்சிமிகு தமிழனே!
புரிந்துகொள்
இந்த அரசியல் அவலங்களை.

(9)
தமிழே!
நீ பல்கலைகழகக்
கட்டிடங்களில்
படுக்கை விரித்தது போதும்.
அங்கே
தூங்கிவழிபவர்களிடம்
தொல்காப்பிய பேருரைகள்
தொலைந்து போயின.
தூசி படிந்த
காகிதக்காட்டில்
தூளி கட்டி கிடந்தது
போதும்.
தமிழன் வாழ்வில்-
தமிழன் சிந்தனை மூனைகளில்
தமிழன் விஞ்ஞான வேள்வியில்
தமிழன் தொழில்
வளர்ச்சிகளில்
வெற்றிச்சுடர்கள்
வீசட்டும்.
தமிழன்
உலகமானிடம் உய்வதற்கு
பாடிய
கணியன் பூங்குன்றன்
மட்டும் அல்ல!
உலக கணிப்பொறிகள் ஆளும்
“கணினியன் பூங்குன்றனும்”
அவனே!
தமிழ்
ஆட்சிக்கட்டில் ஏறி
தரணியெல்லாம் ஆளட்டும்.

(10)
இப்போது
அலுவலகத்தின் ·பைல்கள்
எனும்
கோப்புகள் எல்லாம்
தமிழ்ப்பூந்
தோப்புகள் தான்.
ஜி.ஓ ஜி.ஓ என்று
முழங்கியது எல்லாம்
தமிழ் மக்களின்
“அரசாணைகள்” தான்.
“குமாஸ்தா”க்களாயும்
“சிப்பந்திகளாயும்”
இதுவரை
அதிசயப்பிறவிகளாய்
எண்ணியிருந்தோம்.
“அரசு ஊழியர்கள்”
ஆனபோதுதான்
நம்மிடம்
நெருங்கிவந்தார்கள்.
செவிடன் காதில்
ஊதிய சங்காய் கிடந்த
மக்கள் குறைகள்
அக்கறையோடு கவனிக்கப்படன.

(11)
ஆட்சித்தமிழ்
அடியெடுத்து வைப்பதற்கு
முன்பெல்லாம்
“மகஜர்”கள் மலைபோல்
குவியும்.
“பிராதுகள்” மேசைக்குள்
பிதுங்கி வழியும்.
“ஜமா பந்தி”என்பார்கள்.
“கஜானாக்கள்”
நிறைந்தபின்னும்
ஏழைகளின்
கனாக்கள் மட்டும்
வினாக்களாகவே
விடையின்றிக்கிடக்கும்.
இன்னும்
எத்தனை எத்தனை
கண்ணாமூச்சி ஆட்டங்கள்.
குடும்ப அட்டைகள்
வாங்குவதற்கு முன்
உறிஞ்சும்”அட்டைகள்”
எத்தனையோ.
மொழி புரியாத காட்டில்
எந்த முயலை எப்படி
பிடிப்பது?
புலியோடும் மோதும்
புயல் சீற்றத்தமிழனே!
“ஆ·பீஸ்கள்” எனும் இந்த
மலையைக்கெல்லியா
எலி பிடிக்க வந்தாய்?
கக்கத்தில் துண்டை இடுக்கி
தலையை சொரிந்து கொள்ளும்
வாயில்லாப்பூச்சியா நீ?
இல்லை என்று
தொல்லை நீக்க வந்தது
இந்த ஆட்சிமொழி.

(12)
ஆ·பீஸ்கள் எல்லாம்
“அலுவலகங்கள்” ஆயின.
யாரோ ஒரு
“தாசில்தார் சமூகத்தை”
கும்பிட்டு பொட்டிஷன் போட
போன உனக்கு
இன்று தான் புரிந்தது.
கும்பிடப்படவேண்டியன் நீ
என்று.
அந்த ஆற்றலை உனக்குத் தந்த
“ஓட்டுகள்” எல்லாம் உன்
“வாக்குகள்”
என்று உன்னை புரிய வைத்தது
இந்த ஆட்சித்தமிழ்.

(13)
ஆனாலும் திருத்தப்பட
வேண்டிய
குறைகளும் உண்டு.
அப்படியே
தமிழ்ச்சொல்லை
பெயர்த்து அப்புவதில் என்ன
பயன்?
சங்கத்தமிழ் கூட
கருப்பொருள் உரிப்பொருள்
என்று
உட்பொருள்
எத்தனை கற்றுத்தந்தது!
அகமும் புறமும்
ஆயிரம் சொல்லியும்
“ஆற்றல் தமிழை” நீ
அலட்சியம் செய்வதோ?
“அபேக்ஷகர்” வந்து
வாக்குகளை
அள்ளிச்சென்றார்!
அப்போது உனக்கு ஒன்றும்
புரியவில்லை.
“வேட்பாளர்கள்” வந்து
வாக்குகளை
தள்ளிச்சென்றார்!
இப்போது உனக்கு எல்லாம்
புரிந்தது!
ஆனாலும்
ஒன்றும் புரியாத
தமிழனாகத்தான்
தமிழ்த்தாய் வாழ்த்துகள்
தினமும் நீ பாடுகிறாய்!
“நீராரும் கடலுடுத்த”
நீள் உலகம் மட்டும் அல்ல.
விண்வெளியும் தாண்டி
கண் உயர்த்தும்
மின்தமிழ் இது.
கங்கையின்
புனித கலசங்கள்
ஏந்துகின்ற வர்க்கங்களைக்
கண்டு
ஏக்கம் ஏன்?
ஈக்கள் மொய்க்கும்
கூவத்தின் செல்வனே!
விஞ்ஞானம் உன் கூட வரூம்.
ஈ-தமிழில்
அண்டங்களின்
அந்த “ஆண்ட்ரோமெடா”
ஒளி மண்டலங்களைக்கூட
உன் சேரிக்குள் ஓடிவரும்.
விஞ்ஞான நூல்கள் நீ
கையில் எடுத்தால்
இந்த பூணூல்கள்
உன்னை என்ன செய்யும்?
இந்த வேதாளங்களை
சுமந்து கொண்டிருந்தது
போதும்.
உன் பிணத்தை நீயே
சுமக்கும் சூழ்ச்சிக்கு
சாவுமணி அடிக்க வந்ததே
இந்த ஆட்சித்தமிழ்.

(14)
கல்லூரிச்சோலைகள்
கற்றாழைக்காடுகளாய்
கவிந்து கிடக்கின்றன.
மச்சி பாஷைகளும்
கானாப் பாட்டுகளும்
கவிச்சி வீசியதில்
கவிழ்ந்து கிடக்கின்றன,
இந்த இளைய தமிழ் உலகம்.
தினம் தினம்
தொலைக்காட்சிக்கன்னிகளின்
நுனி நாக்குகள்
தமிழின் கொலைக்களம் ஆவதை
இன்னுமா நீ
பொறுத்துக்கொண்டிருக்க
வேண்டும்.
பொறுத்தது போதும் தமிழா!
பொங்கியெழு!
“மனோகரன்களின்
கைச்சங்கிலிகள்”
தூள் தூளாய் போவது
அந்த மனோகரன்களின்
கையில் தான் இருக்கிறது.

(15)
என்னருமைத்தமிழா
என்று தான் அறைகூவல்
விடுக்கின்றேன்.
ஆயினும்
என்னெருமைத் தமிழா
என்று
உன்னை அழைக்கும்படி அல்லவா
அந்த சாதி மதக்குட்டைகளில்
ஊறிக்கிடக்கிறாய்.
ஊறிக்கிடந்தது போதும்.
ஊற்றுகளை உடைத்துக்கொண்டு
வா.
தமிழ்த்தாயே!
உன் குழந்தைகளை
“மகிஷாசுரன்கள்” ஆக்கி
வதம்
செய்யக்கிளம்பியிருக்கும்
பூச்சாண்டித்தனங்களையெல்லாம்
சுட்டுப்பொசுக்கிட
நீயும் ஒரு அவதாரம்
எடுத்துவா!
சூலமூம் சுக்கு
மாந்தடிகளும் அல்ல
நீ ஏந்தும் ஆயுதம்.
“தமிழ் தமிழ் தமிழ் மட்டுமே
நீ ஏந்தும் ஆயுதம்!

=================================ருத்ரா
(இ.பரமசிவன்)
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா