பெரியபுராணம் – 113 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

பா.சத்தியமோகன்



3224.

“திருமழபாடி வருவதற்கு நினைக்க மறந்தாயோ !”

என இறைவர்

தமது அழகிய கோலம் காட்டி அருளினார்

இது குறித்து

உணர்ந்ததும் துயில் கலைந்து எழுந்தார்

சோலை நிழல் சூழ்ந்த கரையை உடைய

காவிரியின் வடக்கு கரையில் ஏறி

நெடிய மாடமுடைய

அழகிய தெருக்கள் உள்ள

திருமழபாடி எனும் தலம் அடைந்தார் நம்பி ஆரூரர்.

3225.

அடைந்த பிறகு –

திருமழபாடி கோபுரத்தை வணங்கினார்

அன்பர்கள் சூழ உடன் புகுந்தார்

படமுடைய பாம்பைச் சூடிய இறைவர் முன்

பணிந்து வீழ்ந்தார்

அளவிடமுடியாத கருணை குணம் கொண்ட

பேரரருளின் தன்மையைப் போற்றினார்

திருமேனி மயிர்ப்புளகம் அடைய மனம் உருகினார்

இசையுடன் கூடிய திருப்பதிகத்தை

“பொன்னார் மேனியனே” எனத் தொடங்கி –

3226,.

“அன்னே உன்னை அல்லால்

நான் யாரை நினைக்கேன்” எனத் தொழுது

ஒப்பில்லாத பெருமையுடைய திருப்பதிகமலர் சாத்தினார்

வணங்கி வெளியே வந்தார்

நிலை பெற்ற அந்தத் தலத்தில்

சில நாட்கள்

தொண்டர்களுடன் மகிழ்ந்து

காவிரிக்கரையின் இருபுறமும் உள்ள தலங்கள் வணங்கி

மேற்குத் திசை நோக்கி சென்றார்.

3227.

சிவந்த சடையுடைய சிவபெருமானின்

திருவானைக்கா சென்றார்

திருத்தொண்டர்கள் கூடி முன்னே எதிர்கொண்டனர்

வணங்கினார்

கோயிலும் புகுந்தார்

இறைவரின் தாமரைத் திருவடிகளின் கீழ்

ஆசை பெருக விழுந்து எழுந்து

திருமேனி முழுதும் மயிர்ப்புளகம் உண்டாக

கண்நீர் பொழிந்தது

ஆனந்த வெள்ளமாகி விம்மினார்

3228.

“மறைகளாயின நான்கும்” என மலரும் தமிழ்ப்பதிகத்தை

நிறைந்த பெரு விருப்பத்துடன் தொடங்கினார்

நிலை பெறும் அன்பர்களைப் பார்த்து

இறைவனப் பணிந்தபடியே –

“எம்மையும் ஆளுடையாரே” என்று பணிந்து புகழ்ந்தார்

பிறகு

உறையூர் சோழரின் மணியாரத்தை

இறைவர் அணிந்து ஏற்றுக் கொண்ட தன்மையை

உணர்ந்து அருளினார்

3229.

சோழமன்னர் மணியாரம் அணிந்து கொண்டு

கொழிக்கும் அலைகளுடைய

காவிரியில் மூழ்கும்போது

மணியாரம் நீருள் விழுந்து

வழுவிப் போனது

வருத்தம் அடைந்தார் மன்னர்

அளவில்லாத திருமஞ்சனக்குடத்தில் அது புகுந்தது

மஞ்சனம் சூட்டிய போது (நீராட்டியபோது)

அதனை

இறைவர் அணிந்து காட்டினார்

தளர்ந்திருந்த அரசனுக்கு

அருள் புகுந்த அத்தன்மையை சிறப்பித்து

சுந்தரர் பாடினார்.

3230.

திருப்பதிக மாலை சாற்றி

அத்தலத்தில் தங்கியிருந்த நாட்களில்

பவளமும் தயங்கும்படி

ஒளி வீசும் திருமேனி கொண்ட

திருநீற்றை உடையவர் கோயிலுக்கு

எல்லாப்பக்கங்கங்களிலும் சென்று வணங்கினார்

நிறைந்த விருப்பத்துடன் போற்றி வணங்கி

அங்கிருந்து

திருப்பாச்சிலாச்சிராமம் எனும் தலம் அடைந்தார்.

3231.

திருக்கோபுரம் வணங்கினார்

தேவர்கள் பெருகியுள்ள

அழகிய முற்றத்தை வலமாக வந்து

முதல்வர் முன் வீழ்ந்து வணங்கினார்

நன்மை பெருகும் பொருளை அடையும் விருப்பத்துடன்

எதிரே நின்று வழிபட்டார்

தாம் எண்ணியதை இறைவர் அருளாமல் போனதால்-

திருமுன்பு நின்றபடி —

(முதல்வர்- சிவபெருமான்)

3232.

அன்பு நீங்காத

அச்சத்துடன் கூடிய

தோழமைப் பணிவிடையால்

தாம் நினைத்தபடி பொன் கிடைக்கப் பெறவில்லை

ஆதலால்

புழுக்கம் உண்டாக வருந்தினார்

வெளியே நின்ற தொண்டர்களை முகம் நோக்கித்

தம் முறையீட்டை உரைப்பவர்போல

எலும்பு கரைந்து உருக

“பிரானார் மற்றிலையோ” எனும் பதிகத்தைத் துவங்கினார்.

3233.

திருக்கயிலையிலிருந்து

ஒரு நாளும் நீங்காத நிலைமையிலிருந்து நீங்கி

இந்த நிலத்தில்

அறிவுடன் பொருந்திய பிறவியில் சேர்ந்த காரணத்தை

உணர்ந்து வருந்தினார்

அடிமைத் திறத்தின் ஒருமைப்பட்டு

எழுகின்ற பிறப்பிலெல்லாம்

தொடர்கின்ற இயல்பைக் கூறி

எவ்வளவும் திருவருள் புரியாது ஒழியினும்

இறைவர் இவரல்லாது இல்லையோ என்றபடி முடிகின்ற

“வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்”

எனத் தொடங்கி நம்பி ஆரூரர் துதித்தார்.

3234.

நாவலூரர் இவ்வாறு துதித்த பின்

“ஏசின அல்ல” எனும் திருக்கடைக்காப்பும் இசைத்துப் பாடினார்

மெய்மையே விரும்பும் தம் இறைவர்

தூய நிதிக்குவியல் அளித்தருளினார்

நீலகண்டரின் பெருங்கருணையைத் துதித்து வணங்கி

அத்தலத்தில் தங்கியிருந்து

எப்பக்கத்திலும் இருக்கும் இறைவரின் தலங்களை வணங்கி

மீண்டும்

அங்கு சிலநாள்கள் தங்கியிருந்தார்.

3235.

அத்தலம் நீங்கினார்

அருள் பெற்று விடைபெற்றார்

ஆன் ஐந்து எனப்படும்

பசுவின் பஞ்சக்கவ்விய திருமஞ்சனம் ஆடி அருளும்

இறைவர் எழுந்தருளிய

அனைத்துப் பதிகளையும்

காவிரியின் இரண்டு கரைப்பக்கங்களிலும் போய் வணங்கினார்

இறைவரின் திருப்பைஞ்ஞீலி சென்று

பாம்பினை அணிந்த சிவபெருமானின் கோபுரம் வணங்கினார்

பக்கத்தை வலமாகச் சுற்றி வந்து

பவளம் போல் சிவந்த சடையுடைய

இறைவரின் திருவடி வணங்கினார்

கங்காளக் கோலமுடைய இறைவரைக் கண்டார்.

3236.

கங்காளக் கோலத்தில் கண்ட ஆரூரரின் கண்கள்

காதலால் ஆனந்தக்கண்ணீர் வெள்ளம் பொழிந்தது

வண்டுகள் விரும்பி வாழும் கூந்தலுடைய

மங்கையர் உள்ளத்தைக் கவரும்படி

இறைவரின் திருவடிவினைப் பார்த்தார்

அவர்கள் ஆசையினால் வினவுகின்ற சொற்களாக

திருப்பதிகத்தில் வைத்து

“காருலாவிய” எனத் தொடங்கி

“ஆரணிய விடங்கரே” எனும் முடிவுடன்

அரிய தமிழ்மாலையாகிய

திருப்பதிகத்தை முடித்தார்.

3237.

பாடிய பதிகத்தின் திருக்கடைக்காப்பு பாடினார்

முன் சென்று பணிந்தார்

அருள் பெற்றார்

ஒளிவு மறைவு இல்லாத அன்பர்களின் கூட்டமும் தொழுதது

அவர்களுடன் கலந்து

இனிதாய் இருந்து

திருவீங்கோய் மலை முதலான

இறைவரின் தலங்கள் பலவும் சென்று வணங்கி

குரவமலர்கள் பூக்கின்ற சோலைகள் நிறைந்த

திருப்பாண்டிக்கொடுமுடி எனும் ஊர் அடைந்தார்.

3238.

கொங்கு நாட்டின்

காவிரியின் தென்கரையில் உள்ள

கறையூர்ப் பாண்டிக்கொடுமுடியில் உள்ள

கோயிலின் முன் சேர்ந்தார்

சங்கால் ஆன காதணியை அணிந்த

இறைரின் கோயிலைச் சுற்றி வலமாக வந்தார்

திருவடிகளை

அன்பினால் தாழ்ந்து வணங்கினார்

மேலும் மேலும் பொங்கிய ஆசை

மேலும் மேலும் பெருகுமாறு தொழுது

இறைவரின் பொன்மேனியை நோக்கி

“இங்கு இவர் தம்மை மறக்க ஒண்ணாது”

என உள்ளத்தில்

மெய்க்குறிப்பு தொடங்கியது

3239.

“அண்ணலாராகிய சிவபெருமானின் திருவடிகளை மறந்தாலும்

அவர் ஐந்தெழுத்து நாமம் பழகிய நாவே!

இனிய சுவை பெருகுமாறு இடையறாது கூறு”

என்ற குறிப்பை

உணர்வினில் கொண்டார்

“மற்றுப்பற்று எனக்கின்றி” எனத்தொடங்கி

செழுமையான தமிழால்

பொருந்திய அன்பால்

கட்டுப்பாடு பெறும்விதமாக

“நமச்சிவாய” திருப்பதிகத்தைப் பாடி அருளினார்.

3240.

உலகம் யாவும்

உறுதியாக உய்வதற்காக பாடப்பட்ட பதிகமான

நமச்சிவாய திருப்பதிகத்தை உரைத்தார்

இடைவிடாத மெய்யுணர்வுடன்

மன ஒருமை நிலைபெற்ற உள்ளத்துடன்

அத்தலத்திலிருந்து விடைபெற்றார்

பக்கத்திலுள்ள தலங்கள் பலவும் வணங்கி

குளிர்ப்பூக்களும்

குளிர்நிலமும் விளங்குகின்ற

கொங்கு நாட்டில் உள்ள

காஞ்சி என்ற பெரும் ஆற்றின் கரையில் உள்ள

திருப்பேரூர் அடைந்தார் பேரன்புடன்.

(பேரூர் – “மேலைச்சிதம்பரம்” என்றும்

“ஆதிபுரி” என்றும் முன்காலத்தில் சிறந்திருந்த தலம்)

3241.

அந்தத் தலம் அடைந்தார்

முன்பு தன்னை ஆண்டருளிய

இறைவரின் கோயிலுள் புகுந்தார்

மெய்த்தொண்டர்கள் அருகே சூழ வலமாக வந்தார்

தம் முன்பு

நித்தனரான இறைவர்

தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும்

பெருந்திருக்கோலத்தை

நேரே காட்டினார்

இரு கைகளும்

தலை மீது குவித்து

ஆனந்தக் கண்ணீர் ஆறு போல் பெருகியது.

3242.

காட்சி கண்டதும்

தொழுது வீழ்ந்தார் எழுந்தார்.

அவரது கரையிலாத அன்பு ,

எலும்பினை உருக்கியது

பொருந்திய ஐந்து புலன்களாலும்

அறியப்படாத பேரானந்தம்

மெய்யுணர்வில் பெருகியது பொங்கியது

தாண்டவம் புரியும் தம்பிரானாகிய சிவபெருமானை

நேரே பெற்ற பிறகு

சைவ ஆண் தகையாளரான சுந்தரர்க்கு

ஏற்பட்ட அந்நிலைமையை

விளைவை

அளவு அறிந்து யாரால்தான் உரைக்க முடியும்.

3243.

அவ்விதமாக

இறைவரின் அருமையான அருள்பெற்ற நம்பி ஆரூரர்

இன்ப வெள்ளம் நிறைந்த திருப்பதிகத்தை மகிழ்ந்து பாடினார்

வளம் வாய்ந்த அந்தத் தலத்தில் சிறிது தங்கி

“அழகிய பொன்னம்பலத்தில் சேவடி எடுத்த

கூத்தப்பெருமான் புரியும் நடனத்தை

கும்பிடும் பேறு பெறுவதை விட

இனி

வெளியில் சென்று கிடைக்கப்போகும் பொருள்

வேறு என்ன உள்ளது?”

என்ற கருத்துடன் புறப்பட்டார்.

3244.

அந்த இடம் விட்டு நீங்கி அருள் பெற்றுச் சென்றார்

கடக்க இயலாத அரிய மலைக்காடுகளும்

பிறநிலப்பகுதியும் கடந்தார்

பரமரது பதிகள் யாவும் பணிந்தார் வணங்கினார்

பொருந்திய வளமுடைய

தமிழ்த் திருப்பதிகத்தால் துதித்தார்

திருவெஞ்சமாக்கூடல் எனும் தலம் வணங்கினார்

நெடுந்தொலைவு கடந்து சென்று

தெற்குத் திசையில் உள்ள

திருக்கற்குடி மலையை அடைந்தார்.

3245.

வீடுபேறு தருகிற இந்தக் கற்குடிமலையில்

விழுமியார் எனும் பெயருடைய இறைவரைப் பணிந்தார்

வணங்கினார்

மிகுந்த விருப்பத்துடன்

அன்பால் நிறைந்த சிந்தையுடன் திருப்பதிகம் பாடினார்

மேலும் பாடும் விருப்பத்துடன்

தொண்டர்களுடன் தலங்கள் பலவும் சென்று வணங்கினார்

வானிலும் பூமியிலும்

ஆழ்ந்து தேடிய திருமால் நான்முகன் ஆகிய இருவருக்கும்

காண்பதற்கும் அரிதான இறைவரது

“திரு ஆறை மேற்றளி” என்ற பதியினை அடைந்தார் ஆரூரர்.

3246.

செம்பொன் மேருமலையை

வில்லாக வளைத்த சிவபெருமானின்

ஆறை மேற்றளி எனும் பதியில்

இறைவரின் திருவடிகள் பணிந்து வணங்கினார்

நாள்தோறும் மகிழ்ந்து தங்கியிருந்து அருள் பெற்றார்

பிறகு

தேவர்கள் துதிக்கும் பலதலங்கள் வணங்கிச் சென்றார்

இவ்வுலகில் உள்ளவர் வாழ

திருஇன்னம்பர் எனும் தலம் சேர்ந்தார்

3247.

அழகுடன் விளங்கும் திருஇன்னம்பரில்

மகிழ்ந்து வீற்றிருக்கும் ஈசரின் திருவடி வணங்கி

திருவாரூரை

அன்பினால் பணிந்து வணங்கினார்;

தெவிட்டாத அருளால்

அங்கு விரும்பித் தங்கியிருந்த ஆரூரர்

போர்த்தொழில் மிக்க சிவபெருமான் வீற்றிருக்கும்

திருப்புறம்பயம் பதியினை நோக்கிச் சென்றார்

மெய்மை மிகு திருப்பதிகம் பாடினார் .

3248.

“அங்கம் ஓதியோர் ஆறை மேற்றளி”

எனத் தொடங்கினார் பதிகத்தை

பெருகும் செந்தமிழால்

தாம் விரும்பும்

“புறம் பயம் தொழப் போதுமே” எனும்

நிலை பெறும் இசையுடைய திருப்பதிகம் பாடினார்

சந்திரன் சூடிய செல்வராகிய சிவபெருமான் வீற்றிருக்கிற

திருப்புறம்பயம் சேர்ந்தார்.

3249.

“அன்று

வெண்ணெய்நல்லூரில்

ஒப்பிலாத தனி வேதியரால்

பழைய ஓலை ஒன்று காட்டி

ஆண்டு கொள்ளப்பட்ட ஆரூரர்

இந்தத் தலத்தில் வந்து சேர

என்ன தவங்கள் செய்தோமோ” என

அந்தத் தலத்தில் வாழும் தொண்டர்கள் உட்பட யாவரும்

எண்ணி மகிழ்ந்து வரவேற்றனர்

முப்புரங்கள் எரித்த

சிவபெருமானின் கோயில் வாயிலின் முன்பு

நம்பி ஆரூரர் வந்து சேர்ந்தார்.

3250.

பெரிய கோபுரத்தின் முன்பு வணங்கினார்

நிலை பெற்ற தொண்டர்களோடு

திருக்கோவிலுள் புகுந்தார்

திருக்கூத்து ஆடி அருள்கிற

அண்ணலார் திருவடி போற்றினார்

கைகூப்பி அஞ்சலி செய்து நின்றார்

இதழ்கள் மலர்ந்த

புதிய மலர்களைத் தூவி

பெருமை மிகுந்த நிலத்தில்

எட்டு அங்கத்தாலும்

ஐந்து அங்கத்தாலும்

பல முறை பணிந்து வணங்கினார்.

3251.

அத்தலத்தில்

இறைவரின் பெரிய திருவருள் பெற்று

மிகவும் பொழிந்து எழுகின்ற அன்பினால்

பொங்கும் மலர் போன்ற திருவடி வணங்கினார்

மீண்டும் வெளியே வந்தார்

எங்குமாகி நிறைந்து நின்ற இறைவர்

மகிழ்ந்து வீற்றிருக்கும் இடங்களில்

அடியார்களுடன் சென்றார்.

3252.

வன்னி ,கொன்றை ,தும்பை, வெண்மையான அடம்பு

பிறைச்சந்திரன், தூய்மையான கங்கைநீர் என்ற

இவற்றைச்சூடிய தமது இறைவர்

விரும்பி அமர்ந்த

தலங்கள் பலப்பலவும் தாழ்ந்து வணங்கினார்

புதுமை பொருந்திய

மாலை சூடிய வன்தொண்டராகிய ஆரூரர்

பிறகு

ஆடல் மிகுந்துள்ள திருமுக்கூடல் ஆற்றூர் நோக்கி

செல்லத் துவங்கினார்.

3253.

ஆனால்

கூறவும் அரிதான அந்தத் தலத்திற்கு செல்லவில்லை

ஒப்பில்லாத புகழுடைய நம்பி ஆரூரர்

திருமுதுகுன்றம் நோக்கிச் சென்றார்

மெய்ப்புரம் பொருளான சிவபெருமான்

வேதியர் வடிவம் தாங்கி

முப்புரிநூல் தாங்கி

நம்பி ஆரூரர் முன்பு சென்றார் நின்றார்.

(திருமுதுகுன்றம்- விருதாசலம்)

3254.

நின்றிருந்த இறைவரை நோக்கி

சிந்தை நெகிழ்ந்திட்ட உள்ளத்தினராகி வணங்கினார்

“இன்று நாம் திருமுதுகுன்றம் அடைய

வழி எமக்குக் கூறும்” என்றார்

மேருமலையை வில்லாக்கிய வில்லாளி (சிவபெருமான்)

கூடலை யாற்றூர் செல்ல

இவ்வழியே செல்க என்று உரைத்தார்

செல்வழித்துணையாக இறைவர் வந்தார்

3255.

தமது வழித்துணையாய் வருகின்ற

இறைவரைக் கைகள் கூப்பித் தொழுதார்

பிறகு

தொடர்ந்து வரும் அவரைக் காண இயலாதவர் ஆனார்

வண்டுகள் மொய்த்து அலர்த்தும்

கொன்றை மலர் சூடிய சிவபெருமானை

“வடிவுடைமழு ஏந்தி” எனப்பாடிப் புகழ்ந்தார்

“தேவர்களின் தலைவரான பெருமான் வந்துபோன

அதிசயத்தை எவ்விதம் அறிவேன்” என்றார்

விருப்பத்தோடு

திருக்கூடலை ஆற்றூர் சென்றார்.

3256.

கூடலை ஆற்றூரில் பொருந்தி வாழும்

கொன்றைமலர் சூடிய சடையினராகிய

இறைவரது பெருமையால் உயர்ந்த கோவிலுள் புகுந்தார்

பெருகிய ஆர்வம் மேலும் அதிகரித்தது

பொன்னம்பலப் பொதுவில் ஆடுகின்ற

வீரக்கழல் அணிந்த சிவபெருமானை

வணங்கித் துதித்து திருவருள் பெற்று

திருமுதுகுன்றம் சேர்ந்தார்.

3257.

பெரிய நிலைகள் கொண்ட கோபுரத்தைத்

தாழ்ந்து முன் வணங்கினார்

கோவிலுள்

பக்கமாய் வலம் வந்து புகுந்தார்

துதித்து நிலத்தில் வீழ்ந்தார்

அருட்கூத்தாடும் இறைவரை

“நஞ்சிடை” எனத் தொடங்கும்

செஞ்சொல்மாலைத் திருப்பதிகத்தால் பாடினார்

கைகளால் தொழுது நின்றார்.

3258.

இறைவரிடம்

பொருள் வேண்டாத

குற்றமில்லா மனதுடன்

மனதில் உட்கொண்ட குறிப்புடன் துதித்தார்

துதிக்கும் போது

அலரும் கொன்றைமாலை சூடிய

இறைவரின் அருள் பெற்றார்

சைவ வேதியர்களின் தலைவனாகிய சிவபெருமானை

“மெய்யில் வெண்பொடி” எனும் திருப்பதிகத்தால் பாடினார்

3259.

பனிமதிச்சடை கொண்ட சிவபெருமான்

பன்னிரெண்டாயிரம் பொன்

தனது அருளால் கொடுத்தார்

ஆளுடைய நம்பியார்-

ஒப்பிலா மகிழ்ச்சி பொங்க வணங்கி அருகில் சென்று

கரியகனி போன்ற திருக்கழுத்தையுடையார் முன்பு

மேலும் ஒரு செய்தி சொன்னார்.

3260.

தாங்கள் அருளும் தங்கத்தையெல்லாம்

திருவாரூரில் உள்ளோர் யாவரும் கண்டு

மயங்கி வியக்குமாறு

அங்கு தரப்பெறுதல் வேண்டும் என்றதும் –

வானில் எழுந்தது ஒரு வாக்கு

“செழிப்பான மணிமுத்தாற்றில் இடுக

பிறகு அப்பொருள் முழுதும்

திருவாரூர் குளத்தில் பெறுக”

3261.

தம் தலைவனாகிய சிவபெருமான் அருளிய

இனிய அருள் பெற்ற பின்

வன் தொண்டராகிய சுந்தரர்

அந்தத் தங்கத்தில்

மச்சம் வெட்டி வைத்துக் கொண்டார்

பொன்திரளை எடுத்து

மணிமுத்தாறு நீரில் புகவிட்டார்

“இறைவா

அன்று எனை

வலிந்து ஆட்கொண்ட அருளை

இச்செயலில் அறிந்து கொள்வேன்” என்றார்

(மச்சம் வெட்டுதல்;- மாதிரிக்காக எடுத்துக் கொள்ளும் பொன்துண்டு)

3262.

பொருந்திய காதலால்

விருப்பத்தால்

திருத்தொண்டுடன் கூடிய நிலையை

உயிர் கலந்து பிறவி பெற்ற நம்பிஆரூரர்

உயிரின் விருத்தியான

அந்தணர் வாழும் திருப்புலியூர் பொன்னம்பலத்தில்

நீலகண்டரான இறைவரின் திருக்கூத்து கண்டு

வணங்குவோம் என நினைத்து –

பொய்கைகள் சூழ்ந்த தில்லையான (சிதம்பரத்தை)

பழைமை வாய்ந்த தலம் நோக்கி

சிவபெருமானை வணங்கச் சென்றார்.

(“நஞ்சிடை இன்று” எனும் பதிகம் விருதாசலத்தில் பாடினார்)

3263.

அருகிலுள்ள தலங்கள் பலவும் சென்று

இறைவரை வணங்கி

மங்கை ஒரு பாகத்தரான சிவபெருமான் அமர்ந்த

திருக்கடம்பூர் வணங்கினார்

நிறைந்த ஆனந்தக்கூத்துடன் நடனம் புரியும்

தில்லை மூதூர் சேர்ந்தார்

அழகிய வாசலில் புகுந்தார்

நிலைபெற்று உயரும் மாடங்கள் சூழ்ந்த

செழுமையான திருவீதி வந்து சேர்ந்தார்.

–இறையருளால் தொடரும்


pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்