கவிஞனின் கடப்பாடு

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

புதுவை ஞானம்


இந்த வெள்ளிக் கிழமைக் காலை வேளை
எவரெல்லாம் கடலோசைக்கு செவி சாய்க்கவில்லையோ
எவெரெல்லாம் வீட்டிலோ அலுவலகத்திலோ அல்லது
தொழிற்சாலையிலோ தெருவிலோ அல்லது
ஒரு மங்கையுடனோ சுரங்கத்தினுள்ளோ –
வரண்ட தனிமைச் சிறையில் அடைந்து கிடக்கிறார்களோ
வருகிறேன் நான் அவர்களிடம் .

யார் கண்ணிலும் படாமலும் பேச்சரவமின்றியும்
திறக்கிறேன் அவர்தம் சிறைக்கதவை .

தொடங்குகிறது ஒரு அதிர்வலை அக்கணம்
தெளிவற்றதும் தொடர்ச்சியானதுமான
நீண்டதொரு இடியோசை இணைகிறது அதனுடன்
அண்டகோளத்தின் கனத்துடனும்
நுரையுடனும் எழும்புகின்றன
ஆர்ப்பரிக்கும் கடல்நதிகள்.

உடனடியாய் மின்னுகிறது தாரகையும்
கண்ணைப் பறிக்கும் அதன் விழிமையமும் .
பின் வாங்கி மீண்டும் மீண்டும்
தாக்கிக் கொண்டே இருக்கிறது கடல்.

எனவே நான் ,
எனது இலக்கினால் இழுக்கப்பட்டு இடைவிடாமல்
கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும் கடலை
பதிக்க வேண்டும் – உள் மனதில்
கடலின் புலம்பலைக் கடுமையாய் மோதும்
கடல் நீரின் தாக்குதலை – சேமிக்க வேண்டும்
நிரந்தரமானதொரு கோப்பையில் நினைவுகளை.

எங்கெங்கு எவர் சிறைப்பட்டிருந்த போதும்
இலையுதிர் காலத் தண்டணையில்
துன்புற்று வாடிய போதும்
சீறி எதிரும் அலையாய்
பிரசன்னமாவேன் நான்.

தாமே உயரும் கண்கள்
எந்தன் அரவம் கேட்டு .

‘எப்படி அடைய முடியும் கடலை நான் ?’
என்றெனைக் கேட்குமவை .

எதுவும் சொல்லாமலேயே
கடந்து செல்வேன் அவர்களை நான் .

அலைகளில் தாரகை
ஜொலிக்கும் எதிரொளியும்
தெரிக்கும் நுரையும் சரியும் மணலும்
சலசலக்கும் உப்பும்
கரையில் கரையும்
காக்கைகளின் ஓசையும்
தாமே பின் வாங்கும் .

எனவே ,
எந்தன் மூலமாகச் சென்றடையும்
சுதந்திரமும் கடலும்
துயர் கவிந்த நெஞ்சங்களை !

மூலம் : THE POET’S OBLIGATION _ PABLO NERUDA
தமிழாக்கம் : புதுவை ஞானம்.

November 14, 2006

———————————————————————————————————————–

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்