தாழ்ந்தோர் நலிவழிய கனவிலிது கண்போம்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

இராஜ. தியாகராஜன்


மலையும்பசுஞ் செடியும்நறு மலருங்கனி மரமும்
சிலையுங்கவி மொழியும்வளர்ச் சிதையாய்பல கலையும்
உலகிற்பெறு முயர்வைவிட உயர்வேயது: நெருப்பின்
உலையாமடி வயிற்றுக்கென உழைப்போரவ ருயர்வே!

உயர்வாய்ப்பொரு ளுணவும்நகை யுடுப்பும்பெற முனைந்தே
பயமென்றொரு படைகொண்டவர் பணியாளரை யொறுப்பார்;
வயிற்றுக்கரை யுணவுக்கிவர் மயக்கத்துடன் பணிந்தே
வியர்வைநிலம் நனைக்கத்தினம் வெயிலில்கிடந் தெரிவார்!

சமமாய்ப்பல ரருந்துங்கடை தனிலேயிவர் நுழைந்தால்,
குமுகத்தினி குழப்பம்மென குரங்காயவர் குதிப்பார்!
இமையாவிழி யலைபோன்றினி எழவேயிவர் முனைந்தால்,
அமைதிக்கினி யழிவேயென அலறிக்குரல் கொடுப்பார்!

மரமேயுதிர் சருகாயிவர் வழியின்றனு தினமும்
உரமேறிய உடலுந்தளர்ந் துழைத்தேமனஞ் சலித்தால்,
புரட்சிப்புயல் குமுறப்பெரும் பொறியாய் வெடித்தெழுந்தால்,
சரிகையுடை யணிந்தபுவி சழக்கர்செறுக் கழிவார்!

சடமாயினித் துயிலோமென தழைந்தோரவர் எழுந்தால்,
இடக்காயினி வயற்சேற்றினி லிறங்கோமென நிமிர்ந்தால்,
அடுக்கில்நகர் வசிக்குந்நம தருமையுடன் பிறப்பார்,
படகைநிகர் மகிழுந்திலே பவனித்தலும் பறக்கும்!

கனலாய்நிதந் துயிலில்வருங் கனவாய்நம தெதிரில்,
தினமும்நமை யழிக்குங்கடுஞ் சினமாய்நம துணர்வில்,
அனலாய்க்கலந் துறையும்நினை விதுவேயென யெழுவோம்;
மனிதந்தகர் நலிவாங்கொடு வழியையழித் திடுவோம்!


இராஜ. தியாகராஜன்.
www.pudhucherry.com

thiagaraj@dataone.in

Series Navigation

இராஜ. தியாகராஜன்

இராஜ. தியாகராஜன்