கீதாஞ்சலி (98) – வானக்கண் நோக்கும் என்னை!

This entry is part of 41 in the series 20061109_Issue

சி. ஜெயபாரதன், கனடா


எனக்குக் கிட்டிய தோல்விப் பூமாலைகள்,
பதக்கங்களைக் கொண்டு
ஒப்பனை செய்வேன் உன்னை!
தப்பி நழுவ எப்போதும்
தைரிய மில்லை
தோற்றுப் போன எனக்கு!
எனது தன்னலப் பெருமை
மதில் மேல் முட்டும்
என்பதை அறிவேன் உறுதியாய்!
பந்தபாசப் பிணைப்புகளை என் வாழ்க்கை
வெடித்துப் பிளக்கும்,
வேதனை உச்சத்தைத் தாங்கி!
சூனியமாய்ப் போன என்னிதயம்
தேனிசையில்
போலியாய்ப் பொங்கும்,
காலியான
புல்லிலையைப் போன்று!
கல்லும் உருகிக் கண்ணீர் விடும்!
மொட்டுக்குள் எப்போதும்
மூடியே கிடக்குமா,
கட்டுக் கட்டான
பொற்றாமரைச் செவ்விதழ்கள்?
ஒளிந்துள்ள தேன்துளிகள்
வெளியில் சிந்திடும் அல்லவா?
நீலவானி லிருந்து எனை நோக்கி,
விழியன்று
அழைக்கிறது மௌனமாய்!
எதுவும் எனக்காக எப்போதும்
விட்டு வைக்கப் படுவதில்லை,
மரணத்தை உன் பாதக்
கமலத்தில்
சமர்ப்பிக்கும் வரை!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (November 6, 2006)]

Series Navigation