தாஜ் கவிதைகள்

This entry is part of 35 in the series 20061102_Issue

தாஜ்நடப்பு
———

இரவும் பகலும் உராசும்
தேய்மானத்தின் கதையைத்தான்
பிடித்தமான நடையில்
மேலே நடத்துகின்றோம்.

காற்றின் சேட்டைகள்
கவனத்தை மீறத்தான் செய்கிறது.
அந்தரத்திலிருந்து விழுந்தாலும்
எழுந்து கம்பிமீதே
நடக்கின்றோம்.

உயர்த்திக் கும்பிட்டு
கர்ணமிடுபவர்களுக்கும்
சேட்டைகளோடான
கோமாளிகளுக்கும்தான்
மண்ணில் கூடுதல் வரவேற்பு.

நிகழ்வில்
கீழே இறங்க மறுக்கிற
நடைக்கு ஞானமில்லை.
நடை நடப்பதற்காக மட்டுமல்ல
கடப்பதற்காகவும்தான்.

( கணையாழி – ஜனவரி 2000 )

*****

வெளி
———

கையளவு தண்ணீர் மொண்டு
தாகம் தணிக்கவும் தவிப்பு.
பெருவெள்ளச் சுழிப்பில்
மனித மிருகங்களுடன்
மூர்த்திகளும் கீர்த்திகளும்
கரை புரள்கிறது.

மண்ணில் நித்தம்
கேள்விகளால்
பஞ்ச பூதங்களையும்
ஆய்ந்தாகிவிட்டது.
ஐந்து நிலங்களை அலசி
இனி ஆவப்போவதுமில்லை.

தகிப்பின் உஷ்ணம்
நெருப்பாய் பற்றி மேவும்
முடை நாற்றக் காற்றில்
சுவாசம் திணருகிறது.
வானின் வெண்மையிலும்
புகை மூட்ட கரிக்கோடு.
தனி உதயமென்றொன்று
சுத்தமாய்
எதுவுமில்லை நமக்கு.

( வேர்கள் – ஏப்ரல் 1999 )

*****
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation