காதல், மோதல், நோதல் !

This entry is part [part not set] of 35 in the series 20061102_Issue

சி. ஜெயபாரதன், கனடா


தொட்டும், தொடாமல்
மொட்டு விட்டு,
மணமணத்து,
முறுவல் புரிந்தாலும்
வாடாத மலரில்லை காதல்!
மாறிடும் உலகிலே,
மாறிடும் மனதிலே,
மாறிடும் ஊதியம் தனிலே,
வேரைத் தின்றிடும் கரையான் கூட்டம்!
விழுதிடும் வேற்றுமைக்
களைகள்!
கிளைவிடும் இதய வேட்கைகள்!
வளர்ந்திடும்
பிளவுக் கொடிகள்!

திரும்பா காதல் பயணத்தில்
துரும்பாய் மோதல்!
மோதல் முரண்பாட்டில்
முட்களாய்
நோதல்! நோதல்! நோதல்!
அடிமேல் அடிவைக்கும் புயலில்
உடையும் காதல் பாலம்!
மோதலும், நோதலும்
காதலுக்குப் பிறக்கும் கூரிய கொம்புக்
காளைகள்!
மோதல் வேலி தாண்டினால்
காதல் போலி யாகுது!
வளர்பிறையாய்ப் பொங்கிய நிலவின்,
தளரும் சிலம்பின் கீழ்
நிழலாய்த்
தொடரும் தேய்பிறை!

வெள்ளை நிறமும் நிழல்மேவி
ஒருநாள் கறைபட்டுக்
கருமை நிறமாகும்!
உருகி ஓடிய உன்னதக் காதல்
பனிக்குளிரில்,
ஓட்டம் நின்று போய்
ஒருநாள்
உறைந்து விடும்!
காய்த்துக் கனிந்திடும் காதல்
ஒருநாள் சருகாகி
உதிர்ந்து விடும்!
வித்தாகி மீண்டும் முளைத்து
வேறு ஒருநாள் காதல்
பூக்கும்,
புத்துயிர் பெறும்!

*************

[S. Jayabarathan (jayabarat@tnt21.com) Nov 1, 2006] R-3

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா