தாஜ் கவிதைகள்

This entry is part of 36 in the series 20061006_Issue

தாஜ்


* காலத்தச்சனின் கைவண்ணம்.

ஆகிவிட்டது
இப்பொழுது மலையேறும் படலம்
நிசப்த வெளியில்
திட்டுத் திட்டாய்
தரையிறங்க மிரண்ட
புதர் மனிதர்கள்

தோழமை பாவிக்க அவர்கள்
என் அருகாமை
விலாசங்களையே
எதிரொலிப்பாய்
சொன்னார்கள்

புழுதிப் பாதைகளின் வழியே
கற்கப் போனது தொட்டு
கறுத்த தார் ரோட்டில்
நடந்து வளர்ந்து
மாற்றுப் பாதைகள் பிடித்து
வாகனங்களில் விரைந்து
நீலக்கடலையும் தாண்ட
நினைத்ததையும் கூட

சுற்றுலா தலமெனப் போற்றும்
தற்கொலை முனை காண
எழுந்து நான் ஆயத்தமாக
காலடி மண்ணைத்தாண்டி
விசேஷமாய் அங்கே
எதுவுமில்லை என்றார்கள்
பார்வையில் குகையொன்று
வசீகரிக்கவே முண்டி
தலை நுழைத்தவனாக
நீண்டு ஒடுங்கிப்போனேன்.

***

* காலப்பரிசு.

மண்டைக் குத்தலில்
மூச்சுவிட பரிதவித்த நாளில்
கோப்புகளின்
சிதைவை அறிந்தேன்
ஆக்கங்கள் பல
குலைந்து போக
செல்லரித்து
படிமங்களின் அடுக்கும்
காற்றின் திசைக்கு நழுவிவிட
வசீகரப் பக்கங்களும்
வானத்தைத் துருவிய
கேள்விகளும் தொலைந்து
பத்திரப் படுத்திய
கவிதை நாட்களையும் காணோம்.

***

* காலமும் காலமும்.

(அமரர். ந. பிச்சமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு
விழாவையொட்டி எழுதிய நினைவு கவிதை)

தாரைத் தப்பட்டைகளின்
எதிரொலி வெள்ளத்தில்
கரங்கள் குவிய சிரங்கள்
தாழும் ஆராதனை கொண்டு
வலம் வருமாம்
கோலவெளியில்
வித்தகர்களின் தேரழகு

வியக்கும் விரல்களின்
கண்களது நசிவில்
பூத்த மாதிரட்சி
திரு பார்வைகள் தீண்டா
காலத்தில் விண்டு
தடுப்பிற்குள் பொழிவழிய
சுற்று அடி
சந்தைக் கடைகளில்
பரபரப்பு அடையும்
கலைகள் வளர்த்த
வம்சாவளிகள்

மண்ணில் நிறம் தேடி
பகலில் சூரியனையும்
இரவில் சந்திரனையும்
கண் சிமிட்டும்
நட்சத்திரங்களையும்
காண வியந்து
இடைமலை
வண்ணங்களில்
பாதம் பாவாப் பாய்ச்சலாய்
நம் நடப்பு
காலத்தைக் கடக்கிறது.

***
satajdeen@gmail
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்