புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)

This entry is part of 35 in the series 20060922_Issue

புதுவை ஞானம்


(XVIII)

113)பேதை சூடிய பின்தலைச் சுட்டி
செதுக்கப் பட்டது கருத்த பொற் கனிமத்தில்
களங்கம் இல்லா மனிதன் ஒரு காலத்தில்
கல்லின் இதயத்துள் இருந்து தோண்டியது !

114) பறந்து சென்ற தோற் பறவை கடந்த இரவில்
கொத்திவந்தோர் சுட்டி மங்கைக்கெனத் தன் அலகில்
பளபளப்பான அந்தச் சுட்டி – அவள் அறிவாளா
பசையும் படிகமும் ஒட்டிச் செய்ததென ?

115) குறுகிய இடுப்பில் குமரி தரித்திருப்பதுவோ
பொய்யாய் மதிப்பிடப்பட்ட போலி வைரம்
அலச்சியமாய் அவள் தூக்கி எறிந்ததோ
சொக்க தங்கத்தின் கனிமத்தால் ஆனது !

(XIX)

116) தீப்பிழம்பென உன் விழிகள் சிவந்தால்
கொண்டை ஊசிகள் கலைந்திருந்தால்
இரவு முழுவதும் ஆடினாய் ஆடாத
ஆட்டங்களை ஆடினாய் என்பதாக !

117) எரிந்து விழுந்தாலும் மழுப்பி மறைந்தாலும்
தாங்கொணா வெறுப்பில் சலித்துப் போனேன்
அருவருப்பாக வந்தது உன்னைப் பார்க்கவே
அழகுதான் எனினும் பாதகம் செய்பவள் நீ !

118) சங்கேதம் ஒன்று அம்பலம் ஆனதினால்
எங்கே போனாய் இரவில் என்பதும்
இழைத்த பிழை என்னவாய் இருக்கும்? அட
அழுது கொண்டிருந்திருக்கிறாய் அடியேனை நினைத்து !

(X)

ஹொசே மார்த்தி பகுதி -3
_____________________________________________________________________

119) கலக்குகிறது காற்று எந்தன் காதலை
கன்னி பொன் நிறத்தாள் ஆனாலும்
மாலை மயக்கமோ உண்மையாய் இல்லை
காதற்கிழத்தியின் குலாவலைக் கொஞ்சலை
மேல் வானம் நோக்கி எடுத்துச் சென்றது
மிதக்கும் மேகம் !

120 )கன்னியின் காதலை காற்று இழுப்பது போல்
கவர்ந்து சென்றது மறையும் மேகம்
மாலை என்ன புதிதாய் ஏமாற்ற ? மங்கைதான்
ஆறுதல் அளிக்கிறாள் பொய்யாய் !

121 )கலைக்கண்காட்சியில் மாலையில் நேற்று நான்
கண்டேன் நங்கையைமுதல் முதல்நேற்று தான்
இதயம் பறந்தது என்னிடமிருந்து
மங்கையின் காலடி கண் ஒற்றிக்கொண்டு !

122) ஓய்வெடுக்கின்றாள் உட்கார்ந்து தரையில்
ஓவியச்சீலையில் அவளது கண்ணும் கவனமும்
களைத்த கணவனோ காலடி நிழலில்
அம்மணக் குழவி அவளது மார்பில் !

123 ) துயரக்குவியல் தலைக்கு மேலே
கடைசி கறவையின் தெறிப்புகள் கீழே
மேலாடை நழுவுவதை உணர முடிகிறது
சவத்தின் மேல் போர்த்திய துகிலா அது ?

124) சலிப்படைந்து போனவரின் கனிவற்ற பூமியில்
வயலெட்டும் மலர்வதில்லை முட்களும் வளர்வதில்லை
நேசிக்கும் நெஞ்சத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் அவர்கள்
வரண்டும் இருண்டும் கிடக்கிறது வானம் !

125) கவர்ந்து சென்ற கன்னியவள் விடுவிக்க மாட்டாள்
சுதந்திரமாக……………………………… எந்தனது இதயத்தை
பெருமை மிகு வரவேற்புக் கூடத்தின் சுவற்றில்
நேற்றைய ஆசான்களின் நெஞ்சினிக்கும் ஓவியங்கள்.!

( xxii )

126 )மேல் அங்கிகளும் காலுறைகளும் நிறைந்த
விசித்திர நடன அரங்கம் வந்துளேன் யான்
ஆண்டு முழுவதும் வேட்டையாடியவர்களில்
சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கக் காத்துளது புத்தாண்டு !

127 )சிவந்திருக்கும் மேலாடைக் கையன்றில்
ஊதா நிறச் சாட்டின் உராய்கிறது
சுருதி சேர்க்கிறார் செண்டையில் _அவரோ
பிரபலமான கனவான்களில் ஒருவர் !

128 )சிவப்பு சட்டை காற்றில் சுழல்வது
தீப்போலத் தெரிகிறது – பறக்கும் மென் பட்டு !
உதிர்ந்த சருகுகள் காற்றில் உழல்வது போல்
குருட்டு மனிதனின் கண்களின் முன்னே !

xxiii

129 ) ஏகுவன் யான் இந்த உலகை விட்டு
இயற்கையின் கதவு திறந்திருக்கும் எந்தனுக்கு
எந்த வண்டி மேல் கிடத்த வேண்டுமோ
அந்த வண்டியை மூடும் பசுந்தழைகள் !

130 ) படுக்க வைக்காதீர் – என்னை இருட்டு வெளியினிலே
தீர்த்துக் கட்டுவதற்காய் வருவர் துரோகிகள்
நல்லவர் போலவே என்னுயிர் போகும்-ஆதவன் நோக்கி
நல்லவன் அல்லவா நான் !

xxiv

131 )மகிழ்வாய்ச் சென்று தூரிகை ஏந்தும்
துணிவு மிக்கதோர் ஓவியன் எனது நன்பன்
காற்றுப்ப் பரப்பெனும் ஓவியச் சீலையில்
விதைப்பான் அவன் குழப்பத்தின் குமிழிகளை !

132) தெய்வீக வண்ணம் கொண்டு ஓவியம் தீட்டும்
மகத்தான ஓவியன் ஒருவன் வசிக்கிறான் இங்கு
கட்டுப் பட வேண்டுமா என்ன அவனது உன்னதத் திறமை ?
கப்பலின் பக்கலில் மலர்களை வரைவதற்கு ?

133 )தான் வரைகையில் மோதி இடரும்
கடலை நோக்கி எரிச்சலாய்ப் பார்க்கும்
ஏழை ஓவியனை எனக்குத் தெரியும்
கடல் போல் ஆழம் அவனது அன்பு !

-xxv –
134 )வெகுளிப் பையனின் இளிப்பைப் போல
வியப்பு எனக்கு இன்னமும் இருக்கு
மஞ்சள் பாரித்த வானம்பாடிக்கு
கன்னங்கரிய கண்களா ………! ஏன் ?

135 )நாடற்றவனாக நான் மரிக்க மாட்டேன்
இன்னாரின் அடிமை என நான் சாக மாட்டேன்
எனது கல்லரை மீது ஓர் மலர் வளையமும்
எனது சவத்தின் மீது ஒரு கொடியும் வேண்டும் !

xxvi-

136 )இறந்த பின்னரும் வாழ எனக்குத்தெரியும்
மகத்தானதொரு கண்டு பிடிப்பு ஒன்றினை
கடந்த இரவு சரி பார்த்துக் கொண்டேன்
காதல் ஒன்றேதான் சிறந்த சஞ்சீவி !

137 ) சிலுவையின் சுமை அவனை அழுத்தும் போதும்
உரிமைக்காகவே உயிர் துறப்பேன் என்பவன் மனிதன்
தன்னால் முடிந்த்து அனைத்தும் செய்து ஒளியில்
நனைந்த அவன் மீண்டும் வருகிறான் !

xxvii-
138 )கடந்த இரவில் நாங்கள் அயர்ந்து உறங்குகையில்
கொடிய எதிரிகள் கொளுத்தினர் எம் வீடுகளை
வெப்ப காலத்து வெண் நிலவொளியில்- அவரது
வாள் கொண்டு வாரப்பட்டன எம்மவர் தெருக்கள் !

139 ) இஸ்பானிய வாட்களின் சீற்றத்துக்கு எஞ்சிய
சிற்சில பேர்களே இருந்தனர் உயிருடன்
சூரிய உதயத்தில் யாவரும் கண்டது
குருதியும் சதையும் குவிந்த தெருக்கள் தான் !

140 ) தோட்டாக்கள் பறந்த அவ்விடை வெளியில்
மிரண்டோடிய வண்டிகள் ஒன்றனுள்
செத்துப்போன மாது அவள் சடலம்
இரவின் ஓட்டத்தில் எழுந்த களேபரத்தில்
உரத்துக் கேட்டது ஒரு குரல் -தவிர்க்கப்பட்டது
ஒரு கொலைச் சாவு !

141 )துரித வேகத்தில் பறந்தன தோட்டாக்கள்
துளைக்கப் பட்டன மூடிய கதவுகள்
கூவியழைத்த மாது கொடுத்தாள் உயிர் எனக்கு
என்னை எடுத்தேக அன்னை வந்து விட்டாள் !

142) மரணத்தின் கோரைப் பற்களின் ஊடே
நுழைந்து வந்தனள் அவள்- வீரமிக்க ஹவானாவினர்
வியப்பினால் வாய் பிளக்க- இன்றும் கூட
மனத்திட்பம் நிறைந்த அம் மங்கையைக் கண்டால்
தொப்பியைக் கழற்றித் தாழ்ந்து வணங்குவர் !

143 )உன்மத்தம் பிடித்ததைப் போல் ஒன்றி முத்தமிட்டோம் நாங்கள்
சுற்றிலும் இருந்த மக்கள் நடுநடுங்கி ஓடுகையில்…………..
சீக்கிரம்…..சீக்கிரம் எனத்தவித்தாள்
தனியே விட்டு வந்தேனே குழந்தையை
‘சீக்கிரம் சீக்கிரம்’- சீறியது அவள் கதறல் !

xxviii –

144)பண்ணை வெளியில் பசும்புற்றரையில்
தந்தையின் கல்லறை இருக்கும் இடம் நோக்கி
மான் நடக்கின்றான் -அவனொரு சிப்பாய்- எனினும்
அவன் பணி செய்வதோ ஆக்கிரமிக்கும் அந்நியப் படையில் !

145 )தந்தை பெயர் போனவர் தனது துணிவுக்கு
எந்தக் கொடியினை ஏந்திப் பிடித்தாரோ
அந்தக்கொடி போற்றி அணி செய்யப்பட்டவர்
கல்லறையிலிருந்து கடிது எழுத்த அவர்
விட்டார் ஒரு அறை வீணப்பயலுக்கு
வீழ்ந்தான் அம்மகன் மண்மகள் மார்பில் !

146) விண்ணின் மீது மின்னும் இடி முழக்கம்
பண்ணை வீட்டில் மோதும் சூறாவளி
தோல்வியில் துவண்டு விழுந்த மகனைக்
கிடத்தினார் தந்தை கல்லறை மீது !

xxix-

147 )அச்சடிக்கப் பட்டிருக்கிறது அரசனின் முகம்
சட்டப்படியே எல்லா ஆவணத்திலும்
பையனின் சொந்தத்துவக்கால் விதியை முடித்தனர்-அரசனின்
சொந்த அடியாட்கள் தம்மிச்சையாக !

148)போற்ற்ப்பட வேண்டிய புனித சட்டம் இது
அரசரின் புனிதப் பெயரால் போர்த்திக் கொண்டு
அந்தப் பையனின் சொந்தத் தமக்கை
பாடுகின்றாள் அரசனின் உரு முன்னர் நின்று !

xxx –

149 ) சுவர்க்கத்தில் இருந்து எரிக்கிறது இடி மின்னல்
குருதி பூசிக்கொண்டு இருக்கிறது ஆங்காங்கு மேகம் தன்
நூற்றுப் புழை வழியாய் வெளித்தள்ளும் நாவாய்
பிடிபட்ட கருப்பு அடிமைகளின் தொகுதியை !

150 ) புயற்காற்றும் பேய் மழையும் சுழன்றடிக்கும்
உயர்ந்த மலைக்குன்றின் அடர்ந்த தோட்டத்தில்
அடிமைகளின் அணி வகுப்பு ஆடையேதுமின்றி
தராதரம் பிரிக்கப் பல் பிடித்துப் பார்ப்பதற்காய் !

151)சூறாவளிக் காற்றில் சின்னா பின்னமாய்
அடிமைகள் நிரம்பி வழியும் கீற்றுக்கொட்டகைகள்
மிரண்டதோர் அன்னை அழுது புலம்புகிறாள்
மனிதக் கழிவை யார் பார்ப்பார் என்பதாக!

152 )பாலை வனத்துப் பளிங்குச் சிவப்பென
ஆதவன் எழுந்தான் தொடுவானத் தொலைவில்
தூக்கிலிட்டுத் தொங்க விடப்பட்ட துயர்மிகு அடிமையின்
கருத்த உடல்மீது பட்டுத்தெரித்தன பகலவன் கதிர்கள் !

153 ) பார்த்த ஒரு சிறுவன் பதறினான் நடுங்கி
ஒடுக்கப் பட்டவர்கள் மீதான பாசத்தில்
ஏற்கப் பட்டதோர் சபதமந்த அடிமையின் காலடியில்
“கொடுமைக்கு எதிர்க் கொடுமை
இழைத்திடுவோம் நிச்சயமாய் ! ”


j.p.pandit@gmail.com

Series Navigation