அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)
கரு. திருவரசு
வணக்கமும் வேண்டுதலும்
– வஞ்சிவிருத்தம் –
தமிழே உணர்வா யானதால்
தமிழே அறிவா யானதால்
தமிழே உயிரா யானதால்
தமிழே நினைக்கை கூப்புகிறேன்!
– ஆசிரிய விருத்தம் –
சிறுபிள்ளை மணல்வீடு செய்தல் போலச்
சின்னஞ்சிறு சொல்லடுக்கிப் பாட்டென் றாடிக்
குறுகுறுத்துத் திரியுங்கால் ஏனோ ஆவல்
குறுங்காவி யமொன்று பாட வந்தேன்!
மறுவின்றிக் கதைப்பாட்டு காவியம்போல்
வந்துவிட்டால் தமிழ்த்தாயே மகனை வாழ்த்து!
குறுமைபல உண்டென்று கண்டால் இந்தச்
சிறுவனைநீ பொறுத்தருள வேண்டும் அம்மா!
காலமும் நிலையும்
– நிலைமண்டில ஆசிரியம் – இந்தியப் பெருநிலம் ஈன்ற மக்கள்
சிந்தனை மிக்கவர் செயற்றிறம் பெற்றவர்
என்ற பெருநிலை தேய்பிறை யாகித்
“தென்றல் நிகர்த்த பெண்தரு மின்பம்
தேவை தேவை அதுபே ரின்பம்!
பாவை உடலைப் பார்க்கவே விழிகள்
தேன்மொழி கேட்கவே தந்தான் செவிகள்
ஊன்மணம் நுகரவே மூக்கெனும் உறுப்பே
பூவிதழ் அமுதைப் பருகவே நாவே
தாவித் தழுவிக் களிக்கவே உடலே”
என்றே மாந்தர் இலக்கணம் கண்டு
நன்றாய்க் காமக் கடலினுள் வீழ்ந்து
மூழ்கி எழுந்து துரும்பாய் அலைந்து
தாழ்வை அணைக்கத் தாவிய காலம்!
பெண்மக வொன்று பிறந்தா லதனைத்
தன்மக வேபோல் அரசே ஏற்றுத்
தக்க பருவ நாள்வரை வளர்த்து
மிக்க அழகுப் பெண்ணாய் மலர்ந்ததும்
எவரும் மணவாப் பொருளாய் வைக்கும்!
அவளை அடையும் பேறு யார்க்கெனின்
ஒருகனி தன்னை ஊர்க்குரங் கெல்லாம்
துருவித் தின்னும் கேவலக் கதைதான்!
பத்துக் கைகள் படக்கென ஒன்றாய்
முத்துக் கனியைப் பறித்திட முந்தின்
பகைமைத் தொல்லை கொலைக்கும் போகும்
வகையை எண்ணி வஞ்சியர் நெஞ்சம்
விரும்பும் வண்ணம் முதலிரண் டென்றே
வருவோம் என்ற வரைவறை செய்தும்
வாய்ப்பை நல்கல் வருவார் பொருளை
வாய்க்கும் அளவு வாங்கல் எல்லாம்
அவர்க்கே உரிமை எனமுறை செய்தும்
ஆட்சி நடத்திய அரசும் இருந்த
மாட்சி மிகுந்த மங்கிய காலம்!
பூவை பொதுமகள் எனவும் நல்ல
பாவை பரத்தை எனவும் அழகுக்
கன்னி கணிகை எனவும் இன்பக்
கலைமகள் கூசும் விலைமகள் எனவும்
தேசுறு நங்கை தாசி எனவும்
மாசுறு வாகி வேசி எனவும்
பொல்லாப் பெயர்கள் மெல்லியர் தமக்கு
மெல்ல மெல்ல வந்த நாளிலே
அறிவை மதித்தும் அன்பைத் துதித்தும்
நெறியைக் குறித்துத் தகுவழி வகுத்தும்
விதியாய் வந்த கொடுமை எதிர்த்தும்
மதியாய்க் கதிராய் மனித்த உருவில்
புத்தப் பேரொளி புறப்பட் டொளிர்ந்தது!
புத்தத் தொண்டர் பொதுப்பணி விரிந்தது!
புதுப்பணித் துறவி
பொதுப்பணி செய்த சமயத் துள்ளே
புதுப்பணி செய்தே புத்தம் பரந்திடப்
புதுப்பணிக் குள்ளே தலைப்பணி யாக
“விதிப்பய னென்றும், வீரர் தொடங்கி
வேந்தர் ஈறாய் விழிக்கொடைக் காக
மாந்த ரெல்லாம் ஏங்கிக் கிடக்கும்
நிலையை, வாய்த்த உயர்நிலை யென்றும்
மயங்கிக் கிடந்த கணிகையர் தம்மைத்
தெளிவுறச் செய்யும்” ஒளிப்பணி செய்தார்!
வேசிகள் என்றே ஏசி விடாமல்
தாசிகள் என்றே தள்ளி விடாமல்
பாவிகள் என்றே பகைத்து விடாமல்
இரக்கம் காட்டி இழிநிலை மாற்றித்
துறக்கமும் காட்டும் தூய்பணி செய்ததால்
புத்தத் துறவியர் பொதுவாய்க் கணிகையர்
சித்தத் துள்ளே தெய்வ மதிப்பை
எளிதாய்ப் பெற்றே அரிதாய் ஒளிர்ந்த
நிலையில், மனத்தால் அலையாத் துறவி
ஒருவர், உபகுப் தரெனும் பெயரியர்
மதுரை நகரின் ஒருபால் இடிந்த
மதிலின் அருகே கிடந்த நிலத்தில்
இரவைக் கழிக்க எண்ணி மெதுவாய்
உறக்கத் தாயின் உறவுபெற் றனரே!
பெண்ணும் பிக்கும்
– ஆசிரிய விருத்தம் -இல்ல விளக்குகள் அணைந்திடவும்
எல்லா மக்களும் உறங்கிடவும்
மெல்லக் கருமுகில் வானத்திலே
மேவி நிலவினை மறைத்திடவும்
அல்லெனும் பெயரின் முழுவடிவம்
அறிகென அடர்ந்திருள் பரவிடவும்
மெல்ல இலைவிழும் ஒலிகூட
“மெத்”தெனும் அமைதி மிதந்திடுங்கால்
சல்சல் சல்லென விளம்பத்திலே
தாளம் தந்திடும் அடிவைத்து
புல்லிக் கிடக்கும் உலகிருளைப்
பிரித்தே இடைவரும் விளக்கோடு
மெல்லியல் ஒருத்தி வந்தனளே!
மேதகு துறவிமுன் நின்றனளே!
வல்லியின் முகமோர் நிலவாகி
மகிழ்வில் ஒளிர மெதுவாக
விளக்கைத் தரையில் வைத்துவிட்டு
முழங்கால் கொண்டு மண்டியிட்டு
தளிர்க்கை விரலால் துறவியவர்
தாளைத் தொட்டாள்! அக்கணமே
பளிச்சென எழுந்தார் உபகுப்தர்
பாவையைக் கண்டார்! நள்ளிரவில்
ஒளித்துணை யோடு வந்தென்னை
எழுப்பிய பெண்ணே, நீயாரோ!
— ஓவியம் வளரும்
- என்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)
- இரவில் கனவில் வானவில் – 2
- கர்வம்
- இந்தக் கடிதம் கிடைத்த…..
- உலகு புகத் திறந்த வாயில்
- கொசப்பாடியும் சமுதாய நல்லிணக்கமும்
- 25 வது பெண்கள் சந்திப்பு
- கவிதைக்குள் கதை = சிறைகள் பெயர்த்த கதை
- அன்னை காளி துதி பாடல்கள்
- கீதாஞ்சலி (91) – மரண தேவனுக்கு மணமாலை!
- அ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)
- வெளிச்சம் தேடும் இரவு
- எனது இருப்பு
- மடியில் நெருப்பு – 4
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 3
- ஒரு மனிதரின் வாழ்க்கை – பி.கே.அண்ணார்
- கடித இலக்கியம் – 23
- முகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்
- பெரியார் – உலகை நோக்கியப் பயணம்.
- ஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8
- சோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்
- இறுக்கப்பட்ட மத உணர்வுகளை மீறும் கலைபிரக்ஞை
- சிறப்புச் செய்திகள்-1
- இராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”
- உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1
- மத விவாதம் – ஒரு கோரிக்கை
- ”Human rights in Sri Lankan Tamil Literature” – London on Sept 23rd-24th 2006
- முஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்!
- அதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்
- நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை